‘நந்தன்’ – திரை விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டம் வணங்கான்குடி. இந்த ஊராட்சியில் ஆண்டாண்டு காலமாக அன்னப்போஸ்டில் தேர்வாகி ஊராட்சி தலைவர் நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொள்கிறது பாலாஜி சக்திவேலின் குடும்பம். இதற்கு வருகிறது ஒரு ஆப்பு. வணங்கான்குடியை ரிசர்வ் ஊராட்சியாக அறிவிக்கப்படுகிறது. அதனால் என்ன? தன்னிடம் அடிமையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த வெள்ளேந்தி சசிகுமாரை தேர்தலில் நிற்கவைத்த சசிகுமாரை ஊராட்சி தலைவராக ஜெயிக்க வைக்கிறார் பாலாஜி சக்திவேல்.
பேருக்குதான் சசிகுமார் தலைவரே தவிர ஊருக்கும் பவருக்கும் பாலாஜிதான். இந்நிலையில் பாலாஜியின் நயவஞ்சகத்தில் சிக்கி தவிக்கிறது சசிக்குமார் குடும்பமும் அவரது சாதியினரும். அதிகாரம் இருந்தும் அநாதையாக நிற்கும் சசிகுமாரும் அவரது மக்களும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் சந்திக்கிறதா இல்லையா என்பதே மொத்த கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே “இப்படியெல்லாம் நடக்கிறதா என்று கேட்டால். பேட்பவர்களின் கையை பிடித்துக்கொண்டுபோய் காட்ட தயார்” என்ற வாசகத்தை காட்டுகிறார் இயக்குனர் இரா.சரவணன். அவர் சொல்வதும் உண்மைதான். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டாலும் இன்னுமும் இப்போதும் சாதியின் பெயரால் நசுக்கப்படும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இதே நிலைமதான் என்பதை நிஜமாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களின் வேதனையை காணொளி காட்சியை சாட்சியாக தருகிறார் இயக்குனர்.
இந்த கதையை, கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு தைரியமும் வேண்டும் நல்ல மனசும் வேண்டும். அப்படியொரு நாயகனாக தன்னை வறுத்திக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் நடித்திருப்பதற்காக சசிகுமாருக்கு பாராட்டுகள். இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் தன்னை நிரப்பிக்கொண்டு நிரம்பி வழிந்திருக்கிறார் சசிகுமார். வெள்ளேந்தி குணமும் பாலாஜி சக்திவேலுக்கு விசுவாசியாகவும் எதார்த்த நடிப்பில் ஈர்க்கிறார் சசி. அதே சமயம், அப்பிராணியாக இருப்பவர் திடீரென ஹீரோயிச ஏரியாவில் நுழைவது கேரக்டர் பிசகல்.
நரித்தன குணம், சாதி ஆணவம் என பாலாஜி சக்திவேலை பார்க்கும்போதெல்லாம் எரிச்சல் வரும் அளவுக்கு வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி. மாடலிங்கான அவரை கிராமத்து கேரக்டராக வார்க்க வேண்டும் என்பதற்காக எக்ஸ்ட்ரா பெயிண்டிங்கை பூசி கருப்பி ஆக்கி இருப்பது செயற்கை. எனினும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ருதி. சமுத்திரகனிக்கு கையெடுத்து கும்பிட தோன்றும் நேர்மையான அதிகாரி கேரக்டர். அச்சரசுத்தமாக பொருந்தி இருக்கிறார். பாலாஜி சக்திவேலின் அல்லக் கையாக கட்டெறும்பு ஸ்டாலின் ஓகே ரகம். சசிகுமாரின் மகனாக வரும் சிறுவன் இன்னும் நடிப்பில் தேற வேண்டும். துளிர்விடும் காட்டாமணக்கு செடியிடம் பேசும் காட்சி படு செயற்கை.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதுவும் சரியாக அமைந்திருக்காவிட்டால் மொத்த படமுமே அலுப்பை தந்திருக்கும். ஊரில் நடக்காத எதையும் காட்டவில்லை இயக்குனர். எனினும் பெரிய கலவரம் போல ஒடுக்கப்பட்டவர்கள் அடித்து துவைக்கப்படும்போது ஒத்த போலீஸ்கூட எட்டிப்பார்க்காதா என்ன?
என்னதான் சசிகுமார் வெள்ளேந்தியாக இருந்தாலும் எப்போதும் வெற்றிலையை மென்றுகொண்டிருப்பது; சவரம் செய்யப்படாத தாடியுடனும், வெட்டப்படாத தலைமுடியுடனும் தோற்றத்தை வடிவமைத்து அவரை கிறுக்குத்தனமாகவா காட்டி இருக்க வேண்டும்? படத்ஹின் முதல் ஷாட்டிலேயே செருப்பை காட்டிவிட்டால் உலகத்தர இயக்கமாகிவிடுமா?
இப்படி படம் பார்ப்பவர்களுக்கு ஆங்காங்கே தோன்றும் கேள்விகளே படத்தின் மைனஸ். இதையெல்லாம் கவனத்தில்கொண்டிருந்தால் ‘நந்தன்’ எல்லோரையும் ஈர்த்திருப்பான்.
- thanjai amalan