திரை விமர்சனம்

கொடைக்கானல் அழகென்று கூடுதலாக வழியலாம்..  ‘ஆலன்’ – விமர்சனம்

‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்ததற்காக சூப்பர் ஸ்டாரின் பாராட்டையும் வாழ்த்தையும் பெற்றவர் வெற்றி. க்ரைம் த்ரில்லரில் இவரு கிங்குப்பா என பெயரெடுத்திருப்பவர் நடித்துள்ள காதல் படம் ‘ஆலன்’.

அதுக்கெல்லாம்… அதாங்க காதல் கதைக்கு இவர் ஷூட் ஆகிறாரா? வெற்றி நடித்த படம் வெற்றியா? பார்க்கலாம் வாங்க…

சிறுவயதில் விபத்தொன்றில் குடும்பத்தை இழந்த வெற்றி, பாண்டிச்சேரியில் தங்கும் விடுதி நடத்திவரும் ஒரு ஆன்மிகவாதியிடம் அடைக்கலமாகிறார். அந்தச் சூழல் அவரை ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.  ஜடா முடியுடன் சித்தர் ரேஞ்சுக்கு மாறியவரை மடை மாற்றுகிறார் ஜெர்மனி பெண்ணான முத்ரா. கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் முத்ராவிடம் குடை சாய்கிறது வெற்றியின் மனசு.

அப்புறம்…. ஜடாமுடிக்கு கத்திரி போட்டு கதாநாயகன் ரேஞ்சுக்கு மாறும் வெற்றி, முத்ராவுடன் இல்லறத்தில் இணைய நினைக்கும் நேரத்தில் கலைகிறது அவரது காதல் கனவு. வாழ்வே இருண்டு போனதுபோல் இருக்கும் வெற்றிக்கு இன்னொரு பெண்ணுடனான பழக்கம் புதிய வாசலை திறக்கிறது. அந்தப் பெண் யார்?  வெற்றிக்கும் அவருக்குமிடையேயான முந்தைய வாழ்வும் இன்றைய நிலையுமாக பயணப்படும் திரைக்கதையின் முடிவு சுகமா? சுமையா? என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்.

படத்தின் தயாரிப்பாளரான சிவா ஆர்தான் இயக்குனரும். அடிப்படையில் எழுத்தாளர் என்பதால் எழுத்தையும் காதலையும் இணைத்து ‘ஆலன்’ கருவை உருவாக்கியுள்ளார். துறவரம் – காதல் – பயணம் கலந்த கதையை யோசித்தது சிறப்பே. ஆனால் அதை திரைமொழியாக்க தெரியாமல் திண்டாடியதே படத்தின் பலவீனம்.

காசி, ராமேஷ்வரம், ரிஷிகேஷ், பாண்டிச்சேரி, கொடைக்கானல் என கதையும் காமிராவும் பயணித்த இடங்கள் அழகு. அதுமட்டும் பத்தாதே பிரதர் என இழுத்து எரிச்சலூட்டும் திரைக்கதைதான் பார்வையாளர்களை பதம் பார்க்கும் குறை.

வெற்றியின் நடிப்பு எப்படி?…  சாமியார் தோற்றத்தில் வரும்போதெல்லாம் மறுவேட போட்டியில் கலந்துகொள்ளும் குழந்தைகள் மேடையில் நின்று திருதிருவென முழிப்பதுபோல் உள்ளது. எல்லா இடத்திலும் ஒரேவிதமான உணர்ச்சிகளை கடத்தி கடுப்பேற்றுகிறார் மை லார்ட்.

வெளிநாட்டு பெண்ணாக வரும் முத்ரா உண்மையிலேயே ஜெர்மணியில் தமிழ் பேராசிரியர். தமிழ் பேசுவதற்காகவே வாழ்த்தலாம். இன்னொரு நாயகியாக அனு சித்தாரா. பெயரில் மட்டுமின்றி தோற்றத்திலும் ‘புது வசந்தம்’ சித்தாரா சாயல். கொடைக்கானல் அழகென்றும் கூடுதலாக வழியலாம் தப்பில்லை. நடிப்பிலும் அலுக்கவில்லை.

கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன் என படத்தில் நிறைய கேரக்டர்கள் உண்டு. பாடலும் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலினின் மெனக்கெடல் பல இடங்களில் ஒளிவீசுகிறது. க்ளைமாக்ஸ் காட்சி ஒன்று காமிரா கவிதை.

‘ஆட்டோகிராப்’ வரிசையில்  ‘ஆலனை’ நிறுத்த ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர் சிவா ஆர். ஆனால் சத்தான திரைமொழி இல்லாததால் ‘ஆலன்’ அயற்சி தருகிறான்.

– தஞ்சை அமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE