திரை விமர்சனம்

அப்துல்கலாம் முத்தம் கொடுத்திருப்பார் ‘ராக்கெட் டிரைவர்’ – விமர்சனம்

ஓடிடியில் ஒரு ரவுண்ட் வரக்கூடிய மெட்டீரியல் ஸ்டோரி. யோசித்த ஒன்லைனுக்காகவே ஒரு ஓ போடலாம். ஆனால்…

உயர் கல்விக்கு வசதியில்லாமல் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் விஸ்வத்துக்கு அடுத்த அப்துல்கலாம் ஆகவேண்டுமென்பதுதான் கனவு. ஒருநாள் சமூகத்தின் மீதான வெறுப்பை ஆட்டோவின் ஆக்ஸிலேட்டரில் காட்ட, வழியில் வண்டியை மறிக்கிறான் ஒரு சிறுவன். ”மெட்ராஸ் யுனிவர்சிட்டியில விட்டுட முடியுமா” என்கிறான். காசு வச்சிருக்கியா என்று கேட்கும்போது அந்தக்கால நாலணா நாணயத்தை காட்டுகிறான். யார் நீ? எங்கிருந்துடா வர்ற? என்று கேட்டால்.. “ஊரு ராமேஸ்வரம் பேரு அப்துல் கலாம்” என்று ஏற்கனவே எரிச்சலில் இருக்கும் விஸ்வத்துக்குள் எண்ணெய் ஊற்றுகிறான்.

உண்மையிலேயே அது சின்னவயது கலாம்தான். டைம் டிராவலில் வந்துவிட்டார் என்பது விஸ்வத்துக்கு தெரிய அவரும் கதையும் சீரியஸ் ஆகிறது. அப்புறம் நடப்பதெல்லாம் மிச்ச சொச்சம்.

அப்துல் கலாம் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை கற்பனை ராக்கெட்டில் பூட்டி திரைக்கதை தீட்டியதற்காவே இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கரை பாராட்டலாம். ஆனால் அடித்து ஆடியிருக்கவேண்டிய வாய்ப்பு இருந்தும் அதை நழுவவிட்டிருக்கிறார். கான்செப்ட்டில் காட்டிய கச்சிதத்தை காட்சி அமைப்புகளில் காட்டி இருந்தால் வேறலெவல் படமாக மாறியிருக்கும். ஜஸ்ட் மிஸ் ஆனது நமக்குமே கவலை.

ஆட்டோ டிரைவராக விஸ்வத் கிடைத்த இடங்களிலெல்லாம் கிடா வெட்டி இருந்தாலும் சில இடங்களில் ஓவர் டோசேஜ்.

எண்ணெய் வழிந்த தலை; கையில் டிரங்கு பெட்டி, தொள தொள சட்டை என சிறுவயது கலாம் பாத்திரத்தில் முழுமையாக நிரப்பி ஆச்சர்யப்படுத்துகிறார் புதுமுகம் நாக விஷால். வெள்ளேந்தியாக   “மெட்ராசுக்கு நான் புதுசு…” என்று சொல்லும்போதெல்லாம் மனதில் பதிகிறார். அப்துல் கலாம் இருந்திருந்தால் உண்மையிலேயே நாக விஷாலின் நடிப்புக்கு முத்தம் கொடுத்திருப்பார்.

கலாமின் நண்பராக காத்தாடி ராமமூர்த்தி. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருப்பவரின் நடிப்பு நெகிழ்ச்சி நிமிடங்கள். போக்குவரத்து காவலராக சுனைனா. இந்தமாதிரி படத்தில் இவரை கிளாமர் ஆட்டம் போடவைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. நல்லவேளையாக அந்த தவறை செய்யாமல் தப்பித்திருக்கிறார் இயக்குனர்.

ரெஜிமல் தாமஸ் சூர்யாவின் ஒளிப்பதிவு படத்தின் எரிபொருளாக உதவி இருக்கிறது. ஃபீல் குட் உணர்வை தருவதே அவரது ஒளிப்பதிவுதான். இம்சிக்காத பின்னணி இசைக்கும் பாஸ் மார்க்.

‘ராக்கெட் டிரைவர்’.. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் ! பில்டிங் வீக் !

  • thanjai amalan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE