சினிமா செய்திகள்

சாதித்த வீரனுக்கு சாதி அடையாளம் :  ‘அமரன்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை `அமரன்’ திரைப்படமாக தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்தப் படம், வெளியான நாள்முதல் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், அமரன் திரைப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

“ தயாரிப்பாளர்கள் எப்போதும் படத்தை வியாபாரமாக பார்ப்பாங்க. ஆனால், எங்க தயாரிப்பாளர் பேஷனாக எடுத்துட்டு வேலை பார்த்திருக்காங்க. ராஜ்குமார் பெரியசாமி கதை சொல்லும்போது இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்னு நினச்சேன். படத்துக்காக பல ஆராய்ச்சிகள் செய்தார்.

என்கிட்ட நிறைய பேர் மணிரத்னம் சார் படம் பார்த்த மாதிரி இருக்குனு சொன்னாங்க. ராஜ்குமார் பேய் மாதிரி வேலை பார்ப்பாரு. 3 வருஷம்கிட்ட இந்த படத்துக்காக அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கார். இந்தப் படம் பார்த்துட்டு ரஜினி சார் `எனக்கு எங்கேயும் எஸ்.கே தெரியவே இல்லை’னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம, `எப்படி வெவ்வேறு வகையான படங்கள் பண்றீங்க’னு கேட்டாரு. அது எல்லாமே என்னுடைய இயக்குநர்களாலதான்.

இந்தப் படத்தோட கடைசி 10 நிமிடத்துக்கு நல்ல நடிகர் தேவை. சாய் பல்லவி ரொம்பவே நல்லா பண்ணியிருந்தாங்க. படத்துல கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்குனு சொன்னாங்க. கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்குனு வர்ற விமர்சனத்துக்கு காரணம் சாய் பல்லவிதான். மலர் டீச்சர் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லியிருக்கேன். இப்போ மலர் டீச்சர் கதாபாத்திரத்தைவிட எனக்கு கொஞ்சம் அதிகமாக இந்து கதாபாத்திரம் பிடிச்சுருக்கு. எனக்கு இந்தப் படத்துக்கு வந்த மாதிரி பாராட்டு எந்த வேற எந்த படத்துக்கு வந்தது இல்ல.

இந்த படம் 150 கோடி வசூல் பண்ணியிருக்கு, இன்னும் இவ்வளவு வசூல் பண்ணும்னு சொல்றாங்க. எனக்கு வசூல் முக்கியம்தான். அப்போதான் அடுத்தடுத்து பெரிய படங்கள் என்னால மக்களுக்கு கொடுக்க முடியும். சிறைத் துறையில அப்பாவை பற்றி கேட்டால் சொல்வாங்க. எங்க அப்பா லீவ் எடுத்து நான் பார்த்தது இல்ல. இந்த படத்தை சரியாக பண்ணிடணும்னு நினைச்சதுக்கு காரணம் என்னுடைய தந்தைதான். 21 வருடமாக அவருடைய நினைவுல இருக்கேன். முகுந்த் சாருக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அப்பா இந்த மாதிரி ஊருக்கு வரேன்னு சொன்னாரு.

அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டுல கூட்டமா இருந்துச்சு. அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. சடங்கு முடிக்கும்போது என்னுடைய அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டும் இல்ல 17 வயசு பையனான என்னுடைய மனசும்தான். இந்த படத்தோட க்ளைமேக்ஸ் மாதிரி ஜனாதிபதிகிட்ட எங்க அம்மா மெடல் வாங்கினாங்க. இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன். முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அப்பா எங்கேயும் போகல, இங்கதான் அனைவருடைய கைதட்டல்கள்ல இருக்கார்.” என்று எமோஷனலாகப் பேசினார்.

முன்னதாக  இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:-

“முகுந்த் வராதராஜனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். எந்த ஜானர் திரைப்படமாக இருந்தாலும் நேர்மையாக எடுத்தால் மக்கள் அதைக் கொண்டாடுவாங்கன்னு இந்தப் படத்தின் மூலமாக தெரிஞ்சுகிட்டேன். இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துருக்கு. இது மாதிரியான் படங்களை அடுத்தடுத்து எடுக்கறதுக்கு நம்பிக்கை இருக்கு. கதாநாயகன் ஓகே சொல்லும்போதுதான் இயக்குநர், தயாரிப்பாளரோட எண்ணத்துக்கு உயிர் கிடைக்குது.

ஒரு ஆதர்ச நாயகனாக சிவகார்த்திகேயன் இருக்கிறது படத்துக்கு பெரிய ப்ளஸ். இந்தப் படத்தோட பின்னணி இசை ஒரு அனுபவமாக இருக்கணும்னு நினச்சேன். அதை அற்புதமாக ஜி.வி. பிரகாஷ் பண்ணிக் கொடுத்திருக்கார். வீரனுடைய கதை ஒரு வீராங்கனையோட பார்வையிலிருந்துன்னு இந்தப் படத்தை பற்றி நான் சொல்வேன். முகுந்த் ஒரு தமிழர். ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில நடிக்க வைங்கன்னுதான் இந்து சொன்னாங்க. சிவகார்த்திகேயன் வந்தார், அவரோட இருப்பு படத்தோட வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கு.

தமிழ், தெலுங்குன்னு அத்தனை மொழிகளிலேயும் அச்சமில்லை பாடல் ஒலிக்குது. படத்துக்கு சில விமர்சனங்கள் வந்தது. அதற்கு விளக்கம் இங்கேயே கொடுக்கணும்னு நினைக்றேன். அவங்க குடும்பத்தார் முகுந்த் எப்போதும் இந்தியன்னு அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் விரும்புவான். அதனால் தமிழன், இந்தியன் என்ற அடையாளம் மட்டும் கொடுங்கன்னு சொன்னாங்க. முகுந்த் அசோக சக்ரா விருது பெற்றிருக்கிறார். அவரோட தியாகத்துக்கு இந்தப்

படம் மரியாதை செலுத்தியிருக்கு நம்புறேன்.” என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE