‘டப்பாங்குத்து’ – விமர்சனம்
கொஞ்சம் கொஞ்சமாய் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நாட்டுபுறக்கலைக்கு தன் பங்குக்கு உயிர்த்தண்ணி ஊற்றும் படம் ‘டப்பாங்குத்து’.
இந்த முயற்சிக்கு முதல் வந்தனம் சொல்ல ஆசைதான். ஆனால் கதை சொன்ன விதமும் திரைமொழியும் ஓட்டை உடைசலாக இருப்பதால் படம் பார்ப்பவர்களின் நிலை டப்பா டான்ஸ் ஆடுகிறது.
கதை என்ன?…
மதுரையை சேர்ந்த சங்கரபாண்டியன் கரகாட்டக் கலைஞன். இவனது ஆட்டத்துக்கும் பாட்டுக்கும் ஜில்லா தாண்டியும் இருக்குது கிராக்கி. அவனுக்கு உடன் நடனமாடும் தீப்திராஜுடன் காதல்; வில்லன்ஆண்ட்ரூசுடன் மோதல். சங்கரபாண்டியின் மீதுள்ள பகையால் ஆண்ட்ரூஸ் பல குடைச்சலை கொடுக்கிறார். கலை வளர்க்க நினைக்கும் சங்கரபாண்டியனின் காதலும்? பகை வளர்க்கும் ஆண்ட்ரூஸின் மோதலுமாக நகரும் படத்தின் க்ளைமாக்ஸ் சுபம்!
நடக்கலைஞராக வரும் புதுமுகம் சங்கரபாண்டியனிடம் திறமையை மீறி நடிப்பின் மீதான ஆர்வம் பல காட்சிகளில் பளிச். சில இடங்களில் ஆர்வமே கோளாறாகவும் மாறுவதை பார்க்கமுடிகிறது. வில்லனாக வரும் ஆண்ட்ரூஸ் ஆர்.எஸ்.மனோகர் காலத்து நடிப்பை தருகிறார். நிறைய இடங்களில் நூறு ரூபாய்க்கு நடிக்கச்சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு நடித்துள்ளார்.
காதலியாக வரும் தீப்தி ராஜ் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் சாயலில் அழகாக இருக்கிறார் அம்சமாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக துர்காவும் ஓகே ரகம். நாயகனின் நண்பராக கோமாளித்தனம் செய்து சிரிக்க வைக்கிறார் காதல் சுகுமார்.
நாட்டுப்புற கலை தொடர்பான கதையாக இருக்கலாம். அதற்காக பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வரும் பாட்டு படம் முழுக்க அதுபாட்டுக்கு இருப்பது இம்சை. இசை – சரவணன். ஒளிப்பதிவு ஒப்புக்காக இருக்கிறது. கதை திரைக்கதை வசனம் – STகுணசேகரன். இயக்கம் – முத்துவீரா.
திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும். முதல் பாதியில் கதையில் முன்னேற்றம் குறைவாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் தீவிரம் முதல் பாதியில் இல்லை.
‘டப்பாங்குத்து’ கும்மாங்குத்து!