தமிழ் சினிமாவின் தடம் ‘விடுதலை 2’ : விமர்சனம்
ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அடிமை இருளில் தள்ளப்பட்டிருந்த மக்களும், சமூகமும் சுதந்திர காற்றை சுவாசிக்கவும் சுய வாழ்வை வாழ்வதன் பின்னணியில் இருந்த போராட்டம் போராட்டக்காரர்களின் வலியும் வாழ்வுமே கதையின் அடிநாதம்.
அதற்குள் இருக்கும் அரசியல், வர்க்க பேதம், முதலாளித்துவம், சாதிவெறி, சுயநலத்திற்கு பலியாகும் அப்பாவி மக்கள் என அன்றைய.. இல்லை இல்லை இன்றைக்கும் சில இடங்களில் நடந்துவரும் கொடுமைகளை திரைமொழியாக தொடுத்திருக்கும் படமே ‘விடுதலை 2’.
பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியை கடை நிலை போலீஸாக இருக்கும் சூரி கைது செய்வதுடன் முடியும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தொடங்குகிறது இரண்டாம் பாகத்தின் கதை. வாத்தியாராக இருந்த விஜய் சேதுபதி போராட்டக்காரராக மாறும் பின்னணி, அதன் சூழ்நிலை, அவரை கைது செய்யும் காவல் துறையின் மறுபக்கம், அரசியல் சூழ்ச்சி என நீளும் படத்தில் இந்தத் தலைமுறையும் அவசியம் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களை அடுக்கி இருக்கும் வெற்றி மாறனுக்கு பாராட்டுகள். ஆனால் உரைநடை போக்கு அதிகமாக துறுத்தி நிற்பதால் சில இடங்களில் அயற்சியாகிறது.
வழக்கம்போலவே விஜய்சேதுபதி பெருமாள் வாத்தியாராக அந்த கதாபாத்திரத்தில் அநாயசமாக பொருத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். படத்தில் சொல்லும் தத்துவார்த்தம் சித்தாந்தத்தை நன்கு உள்வாங்கி மென்று செரித்த நடிப்பை கொடுத்திருக்கும் விஜய்சேதுபதிக்கு பாராட்டும் அன்பு முத்தங்களும்!
பெண்ணியத்தின் உறுதித்தன்மையை கட்டமைக்கும் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக இல்லை இல்லை புரட்சி புலியாக மஞ்சு வாரியர் மனசை அள்ளும் இடம் அழகு. கொள்கை முழுக்கமிடும்போது இரும்பு பெண்ணாக இறுக்கம் காட்டுபவர் காதல் காட்சிகளில் விஜய் சேதுபதியை மட்டுமின்றி படம் பார்ப்பவர்களையும் கண்களால் கைது செய்யும் மஞ்சுவின் நடிப்பு அபாரம்.
காவல் துறையில் தனது இறுப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தவறை மறைப்பதற்காகவும் சேத்தன் செய்யும் கொடுமையும், குற்றமும் அவர் மீது எரிச்சலை ஏற்படுத்துவதே அவரது நடிப்புக்கான பாராட்டு.
சூரி தனது தாய்க்கு எழுதிய கடிதத்தின் குரலாகதான் கதை முழுக்க தொடர்கிறது. ஆனால் முதல் பாகத்தில் முழுக்க முழுக்க சூரியை சுற்றி படர்ந்திருந்த கதை, இதில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு தடம் மாறுவதால் சூரி கதாபாத்திரம் வலுவற்றதாக மாறி இருக்கிறது. க்ளைமாக்ஸில் துவம்சம் செய்திருக்கிறார் மனிதர். தோழர் கேகே கதாபாத்திரத்தில் கிஷோரின் நடிப்பில் அப்படியொரு அழுத்தம். சபாஷ் சார்!
கருப்பன் என்ற கேரக்டரில் வரும் கென் கருணாஸ் மிரட்டல். அந்த சண்டை காட்சியில் அடேங்கப்பா கருபண்ண சாமியாகவே மாறி ருத்ர தாண்டவம் ஆடுவது செம. கென்னிற்காக தனி ஆக்ஷன் கதைகளே எழுதலாம். அதனை நம்பிக்கையை ஏற்படுத்தும் அவரது நடிப்பும் சிறப்பு.
தலைமைச்செயலராக ராஜிவ்மேனன், எஸ்.பியாக கெளதம் மேனன், கம்பெனி போலீஸ் அதிகாரிகளாக வரும் தமிழ், அருள்தாஸ் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பு.
இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளின் இயல்புக்கு ஏற்றவாறு அமைவது படத்தின் பெரிய பலம். தேவையான இடங்களில் அமைதியை ஒலியாக்குவது ராஜாவின் வித்தை. பாடல்களில் “வழி நெடுக காட்டு மல்லி”யின் வாசமே அடிக்கிறது.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்டின் மிரட்சியை உணர முடிகிறது வனத்தின் வாசத்தை நுகரமுடிகிறது. கொடுமையான சூழ்நிலைகளிலும் வதைபட்டு ஒளிப்பதிவிற்காக உயிர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
“உண்மை என்பது முழுமை; தகவல் என்பது அவரவர்களுக்கு ஏற்றவாறு பரப்பப்படும் செய்தி”, “முடியும்கிற நம்பிக்கை வரும்போதுதான் ஒரு வேலையை தொடங்கனும் என்று நினைத்தால் எதையுமே செய்யமுடியாது” என்று நிறைய இடங்களில் பேசும் வசனம் யானை பலம்.
எடுத்துக்கொண்ட விஷயத்தை சிறப்பாக கையாள்வதில் திறன்பெற்ற வெற்றி மாறன் ‘விடுதலை 2’விலும் ஏமாற்றவில்லை. எனினும் படம் நெடுக உரையாடல்கள் அதிகமாக இருப்பது குறையாக இருக்கிறது. சில செய்திகளை திரைப்படம் வழியாக கடத்தும் அவரது முயற்சியும் உழைப்பும் அற்பணிப்பும் ஆகச்சிறப்பு.
‘விடுதலை 2’ தமிழ் சினிமாவின் தடம்.