சினிமா செய்திகள்

சிம்புவை பார்த்தால் கும்பிட தோணுது : ‘பேப்பர் ராக்கெட்’ விழாவில் மிர்ச்சி சிவா கலகல

காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன், சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் எனப் பெரும் பட்டாளத்தால் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘பேப்பர் ராக்கெட்’ (Paper Rocket). கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், தரண் குமார் பாடல்களில், சைமன்.கே.கிங் பிண்ணனி இசையில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. சமீபத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் மூலம் நம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ரிச்சர்ட்.எம்.நாதன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த வெப் சீரிஸ் வருகிற ஜூலை 29-ம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகுகிறது. இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, உதயநிதி ஸ்டாலின், இயக்குநர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், பாலாஜி தரணிதரன், நடிகர் மிர்ச்சி சிவா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

படக்குழுவினர் பலர் பலரும் தங்களது அனுபவங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று வந்து அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தினார் மிர்ச்சி சிவா.

அவர் பேசுகையில், “சிலரை பார்த்தாதான் எழுந்து நிக்கணும்னு தோணும், கையெடுத்து கும்பிடணும்னு தோணும். சிம்பு சாரை பார்த்த அப்படிதான் தோணுது. கரியர் மட்டுமல்ல ஆன்மிகத்துலயும் எங்கயோ போயிட்டு இருக்காரு. இன்னைக்கு இங்க எல்லோரும் வந்ததுக்குக் காரணம் கிருத்திகா மேம்தான். டைரக்‌ஷன் அவ்ளோ ஈசி கிடையாது. அதுக்கு ஆர்வம் வேண்டும், அதுவும் வெப் சீரிஸ் டைரக்ட் பண்றது இன்னும் ரொம்ப கஷ்டம். ஒரு எபிசோடு முடிந்ததும் அடுத்த எபிசோடுக்கு ஆர்வத்தைத் தூண்டணும். அதை எழுதுறது சுலபமில்ல, இந்த சிரீஸுக்கு நல்லா நடிக்கணும்ன்னு கிருத்திகா என்னைக் கூப்பிடல போல” என்று தன் டிரேட் மார்க் நகைச்சுவையுடன் முடித்தார் மிர்ச்சி சிவா.

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ பார்த்துட்டு கிருத்திகா எனக்கு வாழ்த்துச் சென்னாங்க. சமீபத்துல அவங்கக்கூட பழகும் போதுதான் தெரிஞ்சது அவங்கக் கதைக்கு, எமோஷன்ஸ்க்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறாங்க! இந்தத் தொடரோட விஷுவல்ஸ் பார்த்தேன். பொறாமையாகத்தான் இருந்தது. நான் இந்த மாதிரி ஒரு பீல் குட் கதைக்குள்ள போறதுக்கு இன்னும் ஒரு 15 படமாவது ஆகும்” என்று கூறி விடைபெற்றார், மாரி செல்வராஜ்.

இதனையடுத்து வணக்கத்துடன் தனது உரையினைத் தொடங்கிய இயக்குநர் மிஷ்கின், “7, 8 வருடங்களுக்கு முன்னால் கிருத்திகா என் ஆபிஸுக்கு வந்தாங்க. மூன்று ஷார்ட் பிலிம் பண்ணணும்னு சொன்னாங்க. ஒரு குறும்படத்தை என்னை இயக்கச் சொன்னாங்க. நான் கதையில கொஞ்சம் மாற்றங்கள் சொன்னேன். அதை அற்புதமா திருத்திக் கொண்டு வந்தாங்க. சசிகுமார் ஒரு குறும்படத்தை இயக்குறதாகச் சொன்னாங்க. மூன்றாவது குறும்படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்கன்னு சொன்னேன். என் ஆபீஸ்லதான் கிருத்திகாவுடைய டைரக்‌ஷன் பயணம் ஆரம்பிச்சது. இந்த வெப் சீரிஸுடைய டிரெய்லரைப் பார்க்கும் போது ஒரு அமைதியைக் கொடுத்துச்சு. இது செழிப்பான கதையைக் கொண்டதுன்னு புரியுது” என்றார்.

அடுத்து வந்த உதயநிதி ஸ்டாலின், “காளிதாஸ் வந்ததும் கேட்டேன். இது எந்தப் படத்தினுடைய கெட்டப்ன்னு… அதுக்கு அவர் இது தமிழ் – இந்தி மொழில உருவாகும் ஒரு படத்துக்காகன்னு சொன்னாரு. பான் இந்தியாவான்னு கேட்டேன். ஏன்னா இப்போ எல்லோரும் பான் இந்தியா படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!” என்று நகைச்சுவையாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து, “கிருத்திகாகிட்ட கேட்பேன். எனக்கு ஏதாவது கதை வச்சுருக்கியான்னு… உனக்கு ஒரு கிரைம் படம் வச்சுருக்கேன்னு சொல்லுவாங்க. ‘காளி’ படத்துல மூன்று ஹீரோயின். எனக்கு மட்டும் கிரைம் படமா, நான் டைரக்டரை மாத்திகிறேன்னு சொல்லிட்டுப் போயிடுவேன்” எனத் தொடர்ந்து நகைச்சுவையாகப் பேசிவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றார்.

‘பத்து தல’ திரைப்படத்திற்காக வைத்த தனது மாஸான தாடியுடன் லேட்டஸ்டாக என்ட்ரி கொடுத்தார் சிம்பு. அவர் பேசுகையில், “என் அப்பாவுடைய உடம்பு சரியில்லாத நேரத்துல எங்களுக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். கிருத்திகா அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். நான் அவுங்கக் கூட ஒரு படம் பண்றதுக்குப் பேச்சு வார்த்தை நடந்தது. எனக்கு Male டைரக்டர், Lady டைரக்டர் என்ற வேறுபாடுல உடன்பாடு கிடையாது. எல்லோருமே டைரக்டர்ஸ்தான். இன்னைக்கும் பெண்களை நம்ம பிரித்துப் பார்க்க முடியாது. அவங்களுக்கான இடத்தை நாம கொடுக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பா அவங்களுக்குன்னு ஒரு இடம் இருக்கு. இன்னைக்கு நம்ம முன்னாடி நிறைய நெகட்டிவான விஷயங்களைக் கொண்டு வர்றாங்க. அப்படிப்பட்ட காலகட்டத்தில், இவங்க பாசிட்டிவிட்டியைக் கொண்டு வரும்போது சந்தோஷமா இருக்கு. ‘பேப்பர் ராக்கெட்’ல அவ்ளோ பாசிட்டிவிட்டி இருக்கு!” என்று தனது உரையினை முடித்துக் கொண்டார் சிம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE