உண்மை சம்பவத்திற்கு உயிர்கொடுத்த திரைக்கதை : ‘தண்டேல்’ – விமர்சனம்
by : jayarani amalan
அலை பொங்கும் கடலும் நுரை பொங்கும் காதலும் கலந்த கதை. ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதைக்கு கமர்ஷியல் வர்ணம் பூசினால் ‘தண்டேல்’ தயார்!
அதென்ன தண்டேல்?
தண்டேல் என்றால் தலைவன் என்று பொருள். அந்தத் தலைவனாக அதாவது மீனவ மக்களின் தலைவனாக இருக்கிறார் நாயகன் நாகசைதன்யா. இவரது காதலி சாய் பல்லவி. சிறுவயது முதலே பழகி வரும் இருவருக்குள்ளும் பூத்துக்குலுங்கும் காதலின் வாசம், கடல் அலையென அடிக்கிறது. இவர்களது ஒவ்வொரு சந்திப்பும் தித்திப்பாக அமையும் நிலையில், யார் கண் பட்டதோ.. காதலை பிரிக்கிறது ஒரு சூழல்! யெஸ் ஒப்பந்த அடிப்படையில் அரபிக் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்படுகிறார் நாகசைதன்யா.
கடலுக்குப் போனால் திரும்பிவர 9 மாதங்கள் ஆகும் என்பதால் தடுக்கிறார் சாய்பல்லவி. அதனையும் மீறி மீன் பிடிக்கச்செல்கிறார் நாயகன். காதலில் முதல் முறையாக புயல் அடிக்கிறது . அதே சமயம் கடலிலும் புயல் வீசுகிறது. நாகசைதன்யா சென்ற படகு, திசை மாறி பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல, சிறை பிடிக்கப்படுகிறார். நாகசைதன்யா. அங்கிருந்து அவர் தப்பிக்கிறாரா? தடம் புரண்ட காதல் என்னாகிறது என்பதற்கெல்லாம் விடை தருகிறான் ‘தண்டேல்’.
மீனவன் வேடத்தில் சரியாக பொருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் நாகசைதன்யா. பொறுப்புள்ள தலைவனாக போராடுவது , காதலில் விழுந்து சாய் பல்லவியை மணக்க மணக்க நேசிப்பது, சிறையிலிருந்து தப்பித்து சொந்த மண் திரும்ப துடிப்பது; சூறாவளி துயரத்தை மனதிடம் கொண்டு எதிர்ப்பது என தண்டேல் கதாபாத்திரத்தில் கச்சிதம் காட்டியிருக்கிறார்!
சாய்பல்லவி வழக்கம்போலவே நடிக்கவில்லை. மீனவ பெண் சத்யாவாகவே வாழ்ந்திருக்கிறார். காதல் உணர்வுகளை கடத்துவதாகட்டும்; காதலனுடனான ஊடலில் உறுதியாக நிற்பதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் அழகு முத்திரை பதிக்கும் நடிப்பு. பாடல் காட்சியில் என்ன ஒரு நடன அசைவு. இப்படி நடனம் , நடிப்பு என கலை வடிவத்தின் நுனுக்கம் அறிந்து தனது கேரக்டரை பிரதிபலிக்கும் சாய் பல்லவிக்கு கோடி கோடி ரசிகர்கள் கூடத்தான் செய்வார்கள்!
தமிழில் காமெடி செய்துகொண்டிருந்த கருணாகரனுக்கு தெலுங்கில் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு! அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு சிறப்பு சேர்த்திருக்கிறார்! வாழ்த்துகள் கருணா! மேலும் ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், பாகிஸ்தான் சிறை அதிகாரி பிரகாஷ் பெலாவடி, நாகசைதன்யாவின் அம்மாவாக வரும் கல்பலதா என மற்ற கதாபாத்திரங்களும் கட்சிதம்!
கடலாகட்டும் காதலாகட்டும் படம் பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் அற்புத ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் ஷம்தத் சைனுதீனுக்கு பாராட்டுகள்! தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணியும் பக்கா!
உண்மை சம்பவத்திற்கு உயிர்கொடுக்கும் திரைக்கதைக்காக உழைத்திருக்கிறார் இயக்குநர் சந்து மொண்டேட்டி! மீன மக்களின் வாழ்வியல், அவர்களின் வாழ்வாதாரத்தை உண்மைக்கு நெருக்கமாகச் சொன்னவர், இரண்டாம் பாதி திரைக்கதையில் வழக்கமான ஆந்திர மசாலாவை அதிகம் தடவியிருப்பது படத்தின் மைனஸ்.
மற்றபடி ‘தண்டேல்’ தரமான தலைவன்!