‘பேபி & பேபி’ – விமர்சனம்!
by : jayarani amalan
இரண்டு குழந்தைகள் இடம் மாறினால் ஏற்படும் குழப்பத்தை முடிந்த அளவு கலகலப்பாக சொல்ல முயற்சிக்கும் கதை.
கொஞ்சம் டீட்டெயிலா பார்க்கலாம்…
வீட்டை எதிர்த்துக்கொண்டு காதல் திருமணம் செய்துகொள்ளும் ஜெய் – பிரக்யா ஜோடி துபாய்க்குச் செல்கின்றனர். அப்பா இளவரசின் இம்சை தாங்காமல் துபாயில் இருக்கும் யோகிபாபு, சாய் தன்யாவை காதல் திருமணம் செய்துகொள்கிறார். ஜெய் – பிரக்யா ஜோடிக்கு ஆண் குழந்தையும் யோகிபாபு – சாய் தன்யாவுக்கு பெண் குழந்தையும் பிறக்கிறது.
தன் குடும்பத்தில் பேரக்குழந்தையாக ஆண் வாரிசு இல்லையே என்று நினைக்கும் சத்யராஜ், மகன் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிந்து, மகனை ஊருக்கு அழைக்கிறார். அதேசமயம் அநியாயத்திற்கு ஜோதிடத்தை நம்பும் இளவரசுவிடம், குடும்பத்தில் ஒரு பெண் வாரிசு வந்தால் அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் என்று ஜோதிடர் சொல்ல, மகன் யோகிபாபுவுக்கு பெண் குழந்தை பிறந்ததை அறிந்து அவரை சமாதானம் செய்து ஊருக்கு அழைக்கிறார். ஊருக்குப் போவதற்காக விமான நிலையம் வரும் இடத்தில் இரண்டு குழந்தைகளும் இடம் மாறுகிறார்கள். இந்த குழந்தை மாற்றத்தால் குடும்பத்தில் அரக்கேறும் அடுத்தடுத்த காட்சிகளே ‘பேபி & பேபி’
ஜெய்க்கு பொருத்தமான கேரக்டர் என்பதால் இயல்பாக நடித்துள்ளார். ஆங்காங்கே தனது ஸ்டைல் காமெடியில் சிரிக்க வைக்கவும் முயற்சிக்கிறார். படத்தின் இன்னொரு நாயகனாக யோகிபாபு, வழக்கம் போலவே சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் உருவ கேலி ஓவர் டோஸ்!
பிரக்யா லட்சணமாக இருக்கிறார். நடிக்கவும் வருகிறது. சாய் தன்யாவும் தனது கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளார். ஜெய்யின் தந்தையாக சத்யராஜ், யோகியின் தந்தையாக இளவரசு இருவரும் பிரமாதம்! இவர்கள் தவிர, சிங்கம்புலி, கீர்த்தனா, நிழல்கள்ரவி, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி என படத்தில் ஒரே திருவிழா கூட்டம்!
டி.இமான் இசையில் “ஆரா அமுதே” அற்புதம்! பின்னணி இசை ஆங்காங்கே சோதிக்கிறது. டி.பி.சாரதியின் ஒளிப்பதிவு நேர்த்தி!
முதல் பாதி திரைக்கதையில் இருந்த கட்டமைப்பு இரண்டாம் பாதியில் மிஸ் ஆகி அயற்சியை ஏற்படுத்துகிறது! இயக்குநர் பிரதாப் இந்தக்குறைகளை சரிசெய்திருந்தால் ‘பேபி & பேபி’ இன்னும் மெச்சூர்டாக வளர்ந்திருக்கும்!