வழக்கமான காதல் கதையை கவிதையாய் ரசிக்கலாம்! : ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ விமர்சனம்!
by : jayarani amalan
காதல் – பிரேக் அப் – காதலுக்கு உதவும் நட்பு – ச்சே ரெண்டு பேரும் சேரமாட்டாங்களான்னு ஏங்க வைக்கும் ஊடல் என காதல் சந்தையில் வழக்கமாக கிடைக்கும் மசாலாதான். ஆனால் அதை சமைத்து தந்த விதத்தில்தான் படத்தின் செஃப், தனுஷ் வேறலெவல்!
படம் எப்படி?
லவ் ஃபெயிலியரான பவிஷ், இன்னொரு பெண்ணை (ப்ரியா பிரகாஷ் வாரியர்) கல்யாணம் பண்ணிக்க ரெடியாகிறார். இந்த நேரத்தில் ஒரு கொரியர் வருகிறது. பிரித்துப்பார்த்தால் முன்னாள் காதலி அனிகாவின் திருமண அழைப்பிதழ். “மனசில உறுத்தல் இல்லைனா கல்யாணத்துக்கு போய் வாழ்த்திட்டு வாயேன்”ன்னு ப்ரியா சொல்ல, நண்பருடன் கல்யாணத்துக்குச் செல்கிறார் பவிஷ்.
சென்ற இடத்தில் காதல் நினைவுகள் கரைபுரண்டு ஓடுகிறது . ஆனால் அனிகாவோ பவிஷை கண்டுகொள்ளவே இல்லை. பவிஷ் – அனிகா பிரிவுக்கு காரணம் என்ன? அனிகா கல்யாண நிகழ்வில் நடக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட் என்ன? என்பதை ஃபீல் குட் திரைக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
தனுஷின் அக்கா மகன்தான் பவிஷ்! அப்படியே மாமாவின் மேனரிஷம் உடல்மொழியில் ஈர்க்கிறார். யங் ஹீரோக்கள் வயிற்றில் புளியை கரைக்கும் அளவுக்கான ஆற்றல் நடிப்பில் தெரிகிறது! காதல் சேட்டையும், பெண்களை கவரும் பேச்சுமாக பவிஷ் பக்கா ஹீரோ மெட்டீரியல். காமெடி, நடனத்தில்கூட தனுஷை நகலெடுக்கிறார். இதுவே அவரது கரியருக்கு ப்ளஸ் – மைனஸாக அமையலாம். எமோஷன் ஏரியாவில் கொஞ்சம் வீக்தான். அடுத்தடுத்த படங்களில் குறைகளை சரிசெய்துகொண்டால், தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இடம் கிடைக்கும்!
ருசியான உணவு என்றால் ஒரு பிடி பிடிக்கும் சாப்பாட்டு ராணியாக அனிகா அட்டகாச தேர்வு. நடிப்பாக இருந்தாலும் அனிகா சாப்பிடும் காட்சிகளில் நமக்கே ஒரு வாய் கிடைக்காதா என்கிற அளவுக்கு நடிப்பில் சுதி சுத்தம்.
நாயகன், நாயகியை கடந்து படத்தில் இரண்டு கேரக்டர்கள் வெகுவாக ஈர்க்கின்றன. ஒருவர் பவிஷின் உயிர் நண்பனாக வரும் மேத்யு தாமஸ், இன்னொன்று அஞ்சலியாக வரும் ரம்யா ரங்கநாதன். அலட்டல் இல்லாத காமெடியில் தூள் பண்ணியிருக்கிறார் மேத்யூ! மணிக்கணக்கில் கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு மேத்யூ இனி பிஸியாகிவிடுவார்.
ஆஹா அத்தனை அழகு ரம்யா ரங்கநாதன்! தியேட்டரை விட்டு வெளியே வந்தபிறகும் அனிகாவை தாண்டி ரம்யாவின் முகம்தான் வந்து வந்து போகிறது. நடிப்பு மட்டுமில்ல டான்ஸ் ஏரியாவிலும் பிரித்து மேய்கிறார். ஆல் த பெஸ்ட் ரம்யா!
பவிஷுக்கு பார்க்கப்பட்ட பெண்ணாக ப்ரியா பிரகாஷ் வரும் காட்சிகள் குறைவே என்றாலும் இதயம் திருடுகிறார்.
அனிகாவின் தந்தையாக சரத்குமார். கிட்டத்தட்ட ‘திருவிளையாடல்’ படத்தில் தனுஷ் – பிரகாஷ்ராஜ் இடையே நடக்கும் ஸ்டேடஸ்ட் பஞ்சாயத்து போலதான் சரத் – பவிஷ் காம்பினேஷன் காட்சிகள் அமைந்துள்ளது. ஓல்டு தாட் என்றாலும் மேக்கிங்கால் ரசிக்க முடிகிறது.
படத்திற்கு மிகப்பெரிய பில்லராக ஒளிப்பதிவும் இசையும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃபிரேமும் கவிதை என்றால் ஜி.வி.பிரகாஷின் பின்னணி, உயிர் தழுவும் ஒலி. அநேகமாக சிறந்த இசைக்கான விருதுகூட ஜிவிபிக்கு கிடைக்கும்!
காட்சிகள் ஒவ்வொன்றையும் கல்வெட்டென செதுக்கி, வழக்கமான காதல் கதையை கவிதையாய் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்!
மெகந்தியில் பிரபு என்ற பெயரை ஒளித்து வைப்பது; ஒரு ஸ்பூன் சாம்பார் சாதத்தை ருசித்தே அது யாருடைய கைபக்குவம் என்று தெரிந்துகொள்வது; இரவு நேர கடற்கரையில் அனிகாவுக்கு பிடித்த கருவாட்டு குழம்பை நாயகன் தயார் செய்து தருவது என தனுஷின் டைரக்ஷன் திறமைக்கு பல சோறு பதம்!
பவிஷிடம் அனிகா காதலை சொல்லும் இடம், க்ளைமாக்ஸில் பிரிந்த காதலை சேர்த்துவக்கும் உரையாடல் நடக்கும் இடம். இரண்டும் ரெஸ்ட் ரூமாக அமைவது டைரக்ஷன் டச்சிங்!
’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ காதல் ஓவியம்!