நடிப்பில் கெத்து காட்டும் ஹீரோ : ‘டிராகன்’ – விமர்சனம்!
by : jayarani amalan
ஹீரோவாக பிரதீப் ரங்கநாதனுக்கும் இயக்குநராக அஸ்வத் மாரிமுத்துவுக்கும் இது இரண்டாவது படம் . இருவருக்குமே இன்னொரு வெற்றியை கொடுத்து கெத்து காட்டியிருக்கிறது ‘டிராகன்’.
ஒண்ணுல்ல ரெண்டில்ல 48 அரியர்ஸ் வச்சிருந்தாலும் காலேஜ்ல கெத்துக்காட்டிட்டு சுத்திட்டு திரியுற நாயகன் பிரதீப் ரங்கநாதன். அரியர் வச்சிட்டிருக்குற ஹீரோவுக்கு ஹார்ட்டின கொடுக்குற நாயகி அனுபமா. காலேஜ் சீசன் முடிஞ்சு வேலை வெட்டிக்கு போகாம வீட்டுல பொய் சொல்லிட்டு மறுபடியும் வெட்டி ஆபிசர் வேலை பார்த்திட்டிருக்கும் பிரதீப்பின் கேரக்டர் பிடிக்காம காதலை பிரேக் அப் செய்துகொள்ளும் அனுபமா. அதுக்குப்பிறகும் அடங்காத பிரதீப், ஃபிராடு வேலை செய்து கைநிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இப்பதான் வில்லனா வந்து நிற்கிறார் கல்லூரி முதல்வர் மிஷ்கின். அதாவது பிரதீப்பின் பித்தலாட்டத்தை சொல்லப்போறதா மிரட்டுறார். ஷாக் ஆகும் பிரதீப்பின் அடுத்தடுத்த சீன்தான் ‘டிராகனோட’ மிச்ச மீதி கதை.
எனக்கே எனக்காங்கற மாதிரி பிரதீப்புக்கு ஃபிட் ஆகும் கதை. ‘லவ்டுடே’வையும் தூக்கி சாப்பிடுற மாதிரியான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். தனுஷ் மாதிரியே பண்றாருப்பார் என்கிற விமர்சனத்துக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கிற மாதிரி சில காட்சிகளில் தனி ஸ்டைலில் அசத்துகிறார்.
பிரதீப்பை காதலிப்பது, பிறகு பிரேக் அப் செய்து ஒரு கட்டத்தில் உதவி செய்வது என வெவ்வேறு நிலைகளாக அனுபமாவின் நடிப்பு ரசனை. இன்னொரு நாயகியாக கயடு லோஹர் அழகு! நடிப்பிலும் அனுபமாவுக்கு டஃப் கொடுக்கிறார்.
கல்லூரி முதல்வர் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கைத்தட்டல் வாங்குகிறார் மிஷ்கின்! விஜே சித்து, ஹர்ஷத் கான் இருவரும் ஆங்காங்கே சிரிக்க வைத்து திரைக்கதையின் கலகலப்பு ஏரியாவில் கலக்குகின்றனர்.
காதல் கதைக்கு ஏற்ற கலர்ஃபுல் ஒளிப்பதிவால் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி. லியோன் ஜேம்ஸ் இசையில் ‘வழித்துணையே’, ‘ரைஸ் ஆஃப் டிராகன்’ இரண்டுக்கும் டிக் அடிக்கலாம். பின்னணி இசையும் படத்தின் பலம்!
ஜாலியான ஒரு கல்லூரி காதல் கதை. அதில் அற்புதமான ஒரு மெசேஜை வைத்து அழுத்தமான திரைக்கதை எழுதியிருக்கும் அஸ்வத் மாரிமுத்துவின் நேர்மை எழுத்துக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
அவ்வப்போது திரைக்கதையில் விழும் தொய்வு, ஆங்காங்கே கண் சிமிட்டும் லாஜிக் குறைகளை மண்டைக்குள் ஏற்றாமல் பார்த்தால் ‘டிராகன்’ செம ட்ரீட்!