‘குலுகுலு’ விமர்சனம்
வழக்கமான ஒரு சந்தானம் படம் பார்ப்போம் வயிறு குலுங்க குலுங்க சிரிப்போம் என்ற எதிர்பார்ப்பின்றி தியேட்டருக்கு சென்றால் மட்டுமே உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் தராமல் மாறுபட்ட சந்தானத்தை ரசிக்க வைக்கும்.
அமேசான் காட்டில் வாழ்ந்த பழங்குடி இன மக்களில் ஒருவர்தான் சந்தானம். தன் இனம் அழிக்கப்பட, சந்தானம் மட்டும் தப்பித்து நாடோடியாக சுற்றி கடைசியில் தமிழகம் வருகிறார். தமிழ்நாடு பிடித்துவிட மொழி கற்றுக்கொண்டு இங்கேயே வாழ்கிறார். யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அதன் பின் விளைவுகள் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் ஓடிச்சென்று உதவும் நல்ல குணம் கொண்டவர். அந்தவகையில் கடத்தப்பட்ட இளைஞன் (ஹரிஷ்) ஒருவனை காப்பாற்றுவதற்காக கோதாவில் குதிக்கும் சந்தானம், ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அதிலிருந்து அவர் விடுபடுகிறாரா கடத்தப்பட்ட இளைஞனை காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் மீதி கதை.
காட்சிக்கு காட்சி கலகலவென சிரிக்க வைக்கும் சந்தானம், பிளாக் காமெடி வகையை சேர்ந்த இந்தக் கதையில் ஏனோ ரொம்பவே சீரியஸாக வருகிறார். மொழி பற்று இன பற்று பற்றி பேசும் இடங்களில் வித்தியாச சந்தானமாக வெளுத்து வாங்குபவர், நிறைய இடங்களில் மற்றவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதை அவரது ரசிகர்களே ஏற்கமாட்டார்கள். இந்த ஜானர் உங்களுக்கு செட் ஆகல சந்தானம். பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வாங்க ப்ளீஸ்!
அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ண மூர்த்தி என்று படத்தில் இரு நாயகிகள். இருவரில் நமீதாவின் நடிப்புக்கு கூடுதல் மதிப்பெண் தரலாம். ’கஜினி’ உள்ளிட்ட பல படங்களில் டெரர் வில்லனாக தெறிக்கவிட்ட பிரதீப் ராவத்துக்கு இதிலும் வில்லன் வேடம் என்றாலும் அவர் செய்யும் வில்லத்தனம் காமெடியாக இருக்கிறது. நமீதாவின் காதலனாக வரும் ஹரீஷ் எப்போது பார்த்தாலும் கத்திக்கொண்டே இருப்பது எரிச்சல்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. டார்க் காமெடிக்கே உரித்தான லைட்டிங்கில் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தி என்றாலும் படத்தில் எல்லா கேரக்டர்களின் முகத்திலும் டல்னஸ் தெரிகிறது. குறிப்பா சந்தானத்தின் லுக் ரசிக்க முடியவில்லை. சந்தானத்திற்கு தாடி வைத்த கெட்டப்பும் செட் ஆகவில்லை.
ஹரீஷை கடத்தும் கும்பலின் தலைவனாக வரும் ஜார்ஜ் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டை காட்சி செம போர்.
மொத்தத்தில் ‘குலுகுலு’ குழப்பமான திரைக்கதை.