‘GBU’ விமர்சனம்!
டானுக்கெல்லாம் டான் அஜித். உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் கேங்ஸ்டர்களையும் ஊதித்தள்ளும் ரெட் டிராகன். மனைவி த்ரிஷா சொன்ன ஒத்த வார்த்தைக்காக எல்லாத்தையும் உதறி தள்ளிவிட்டு திருந்தி வாழ ஜெயிலுக்கு போறார்.
14 வருஷ ஜெயில் வாழ்க்கை. அடுத்த 3 மாசத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித்தின் செல்ல மகனை தூக்குகிறது ஒரு கும்பல். அந்த கும்பலை போட்டுத்தள்ள மீண்டும் ரெட் டிராகன் அவதாரம் எடுக்கும் அஜித், மகனை காப்பாற்றுவதே கதை.
‘துணிவு’ படத்துக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் பிரியாணி விருந்து குட் பேட் அக்லி.
ஏகேவின் ஃபேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களின் டேஸ்ட் தெரிந்து அஜித்தை ஆக்ஷன் ஏரியாவில் ஆடவிட்டு அழகு பார்த்திருக்கிறார்.
பேக் டூ பெவிலியனாக அஜித்தும் அடித்து ஆடி இருக்கிறார். வில்லன் ஏரியாவுக்குள்ளே புகுந்து, மொட்டையா? பேங்க்கா? பேங்கா? மொட்டையா? என ஒத்தையா ரெட்டையா வசனம் பேசும் இடத்தில் தியேட்டர் தெறிக்கிறது. லாஜிக்கெல்லாம் மறந்து பார்த்தால் அஜித் செய்திருக்கும் சம்பவம் செம மாஸ்!
அஜித்தின் மனைவியாக டீன் ஏஜ் மகனுக்கு தாயாக த்ரிஷா. என்னமோ தெரியல பழைய தேஜஸ் மிஸ்ஸிங். வில்லனாக அர்ஜுன் தாஸ் மிரட்டுகிறார்.
ஜாக்கி ஷெராப், சுனில், பிரசன்னா, ப்ரியா வாரியர், பிரபு என ஏகப்பட்ட ஸ்டார்கள். எல்லாமே பில்டப்புகள். யோகிபாபு ஒரு சீனில் உள்ளேன் ஐயா சொல்லி காணாமல் போகிறார். ரெடின் கிங்ஸ்லி சிரிக்க வைக்க ட்ரை பண்ணி ஏமாற்றுகிறார்.
படத்திற்காக செலவு செய்த துப்பாக்கிகளையும் சிதறிய தோட்டாக்களையும் சேகரித்து ஈயம் பித்தளை பேரிச்சம் பழத்துக்கு போட்டாலே உலக பணக்காரர்களில் ஒருவராகிவிட முடியும் அந்த அளவுக்கு படத்தில் ஏகப்பட்ட செலவுகள்.
சின்ன சின்ன டான்கள் கூடவே பெரிய பெரிய கூட்டம் இருக்க பெரிய கேங் ஸ்டாரான அஜித்துடன் ஒரு ஈ காக்கையும் இல்லாதது லாஜிக் சறுக்கல்.
அஜித்தின் துப்பாக்கி படம் பார்ப்பவர்களின் சட்டையை ஓட்டை போடுமோ என்று நினைக்கும்போதே ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை காதை பதம் பார்க்கிறது. ஆங்காங்கே இளையராஜாவின் பழைய பாடல்கள் கைகொடுத்து காப்பாற்றுகிறது.
கதை களத்துக்கு பொருத்தமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கும் அபிநந்தனை பாராட்டலாம்.
அழுத்தமான கதை இல்லாதது, வீடியோ கேம் போன்ற திரைக்கதை படத்தின் மைனஸ். எனினும் ரசிகர்கள் ருசி அறிந்து வசனங்களில் ஈர்க்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
குறைகள் இருப்பினும் இது அஜித் ரசிகர்களை ஈர்க்கும் ‘குட் பேட் அக்லி’.