அப்டேட் கமல்ஹாசன்; அழைத்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ்
திரைத்துறையில் எப்போதுமே அட்வாஸ்ஸாக சிந்திக்கக்கூடிய கமல்ஹாசன் தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்வதிலும் உலகநாயகன்தான். தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் கமல்ஹாசன், பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை சந்தித்துப் பேசியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அது தொடாத பகுதிகளிலும் கூட சிறப்பாகச் செயல்பட, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது.
சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகுளுக்கு நிகராக அல்லது அதை விட அதிகமான சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
2022ஆம் ஆண்டு பெர்ப்லெக்ஸிடி ஏஐ, சான் ஃப்ரான்சிஸ்கோவில், நான்கு பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தேடுபொறி நிறுவனம். இந்த நால்வரில் முதன்மையானவர், இதன் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ். சென்னையைச் சேர்ந்த இவர், ஐஐடியில் பயின்றவர்.
இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்ற கமல்ஹாசன், பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,
“அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது.” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
கமல்ஹாசனுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கலைத்துறை வித்தகர் கமல்ஹாசன் – கணினி துறை நிபுனர் அரவிந்த் ஸ்ரீநீவாசுன் இருவரின் சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.