வைகைப் புயல் ஏற்படுத்தும் சிரிப்பு புயல் ’கேங்கர்ஸ்’ : விமர்சனம்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுந்தர்.சி – வடிவேலு காம்பினேஷனில் வந்திருக்கும் படம் ‘கேங்கர்ஸ்’.
கதை என்ன?
பெரிய மனிதர்கள் போர்வையில் ஊரை அடித்து உலையில் போடும் வில்லன்கள். அவர்களுக்கு எதிரே எமனாக வந்து நிற்கும் ஹீரோ. இவர்களின் மல்லுக்கட்டில் கதாநாயகிக்கும் காமெடியனுக்கும் சின்ன லிங்க். வழக்கமான ஹீரோயிசத்தில் வில்லன்களின் முகத்திரை கிழித்து தொங்கவிடும் நாயகன். க்ளைமாக்ஸில் செகண்ட் பார்ட்டுக்கு சின்னதா ஒரு லீட். இதுதான் சுந்தர்.சி கிண்டிய ‘கேங்கர்ஸ்’ கதை.
அதே அம்மி.. அதே மசாலா அதே கைப்பக்குவம் என சுந்தர்.சி தனது கோட்டை தாண்டவில்லை. ஆனால் ஃபேமிலியுடன் படம் பார்த்துவிட்டு ஜாலியாக திரும்பும் அதே கேரண்டியை கொடுத்திருப்பது சிறப்பு.
கொடுமை கண்டு கொதிப்பது.. ஏழை மாணவர்களின் நிலை கண்டு மனமிரங்குவது.. தொட்டுக்கொள்ள காதல்.. தொடர்ச்சியான காமெடி என பக்கா கமர்ஷியல் கதாநாயகன் டெம்பிளேட்டில் நச்சென்று முத்திரை பதிக்கிறார் சுந்தர்.சி.
திரும்ப வந்திட்டேன்னு சொல்லு என்பதுபோல கம்பேக் கொடுத்திருக்கும் வடிவேலுவின் காமெடியில் தியேட்டரில் சிரிப்பு புயல். ஜல்லிக்கட்டு களத்தில் கண்ணுக்குட்டியை அவிழ்த்துவிட்டதுபோல வில்லன்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இடங்களில் வடிவேலு பேசும் வசனமும் வெளிப்படுத்தும் பாடி லாங்வேஜும் வெடி சிரிப்பு.
டீச்சராக வரும் நாயகி கேத்ரின் தெரசாவுக்கு சீரியஸ் ஏரியாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படியே ஒரு கிளாமர் பாட்டுக்கும் ஆடி கேரக்டரை ஃபுல் ஃபீல் செய்திருக்கிறார். தம்மாதுண்டு கேரக்டரில் வாணிபோஜன் வந்துபோகிறார்.
வில்லன் கேங்கில் ஹரிஷ் பெராடி, மைம் கோபி, அருள்தாஸ் என மூவர். இதில் கடைசி இருவர் காட்டும் டெரருக்கும் சிரிப்பு வருது. அந்த அளவுக்கு திரைக்கதையில் இருக்கும் காமெடி ஃபிளேவர் இவர்களின் கேரக்டர்களையும் பாதித்துள்ளது.
இவர்கள் தவிர முனிஸ்காந்த், பக்ஸ், சந்தானபாரதி, மதுசூதனன் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர கும்பல்.
கேங்கர்ஸின் டெக்னிக்கல் டீமில் கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு சிறப்பு. பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே இசையமைப்பாளர் சத்யாவின் பெயர் சொல்லும்படி இல்லை. சுந்தர்.சி அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடி போல இறங்கி ஆக்ஷன் ப்ரியர்களை ஈர்க்கும் ஸ்டெண்ட் மாஸ்டருக்கு பாராட்டுகள்!
வில்லன்கள். அவர்களை எதிர்க்கும் ஹீரோ இதனால் ஏற்படும் பிரச்சனைகள்.. க்ளைமாக்ஸில் வில்லன்களை வேரறுத்து நாயகன் ஜெயிப்பது. இதற்குள் காதல், காமெடி தூவல் என பல சரக்கு ஃபார்முலா கதைதான் என்றாலும் எடுத்த டிக்கெட்டுக்கும் கேண்டீனுக்கு கொடுத்த துட்டுக்கும் குறைவைக்காத அளவுக்கு ‘கேங்கர்ஸ்’ ரசிக்க, சிரிக்க வைக்கிறது.