‘லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ்’ திரை விமர்சனம்
‘டோன் ப்ரீத்’ ஆங்கில படத்தின் ஒன்லைனை திடுக் திருப்பங்களை சேர்த்து திரைக்கதைக்கு புதிய மசாலா தடவி எடுத்திருக்கும் படம்.
ஊரைவிட்டு தனியே இருக்கும் ஒரு பங்களாவுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு கும்பல். ஒரே கொள்ளை ஓஹோன்னு வாழ்க்கை என்ற பெரிய கனவோடு போகும் அந்த நால்வர் குழு, வீட்டுக்குள் சென்ற பிறகு அந்த வீட்டின் சொந்தக்காரரான பரத்திடம் வசமாக சிக்கிக்கொள்கிறது. பரத் பார்வையற்றவர் என்றாலும் பலசாலி. செவித்திறனை கொண்டே பல திசைகளிலிருந்து வரும் ஓசையை வைத்து எதிரிகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து துப்பாக்கி குண்டுகளை இரையாக்குகிறார். வெலவெலத்துப் போகும் கொள்ளையர்கள் பரத்திடமிருந்து தப்பிக்கிறார்களா இல்லையா என்பதே கதை.
‘டோன் ப்ரீத்தின்’ அக்மார்க் காப்பி என்றாலும் பார்வையற்ற பரத், ஏன் தனியாக இருக்கிறார்? அவருக்கு பார்வை பறிபோன காரணம் போன்றவற்றை கிளை கதைக்கொண்டு சொல்லியிருப்பதில் சுவாரஷ்யம்.
கேரக்டருக்காக எப்போதுமே மெனக்கெட தயங்காத பரத், இதிலும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். கண் இருந்தும் பார்வை தெரியாதது போன்ற உடல் மொழி, கட்டுமஸ்தான உடல்வாகு, குடும்ப செண்டிமெண்ட்டில் உருகுவது என நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்.
நாயகி விவியா சந்த் செம க்யூட். இடைவேளைக்குப் பிறகு அவரது கதாபாத்திரம் யூடேர்ன் அடித்து நிற்பது சூப்பர் ட்விஸ்ட். அழகு நாயகி இருந்தும் படத்தில் ஒரு டூயட்கூட இல்லாதது இளசுகளுக்கு ஏமாற்றம். கொள்ளையர்களாக வரும் அனூப் கஹாலித், இப்ராஹிம் ஆகியோரும் தங்களின் பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர். இசை, ஒளிப்பதிவு இரண்டும் படம் பார்ப்பவர்களை பயமுறுத்துகிறது.
பலத்த பாதுகாப்பையும் மீறி வெளிநாட்டு பங்களாவில் கொள்ளையடித்துவிட்டு ஹாயாக இந்தியா திரும்புவது, போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பரத்தின் பங்களாவுக்குள் நுழைவது, பார்வையற்ற பரத்தை ஏமாற்றி தப்பிக்க முடியாமல் தவிப்பது என்பதெல்லாம் லாஜிக் சறுக்கல்.
இருப்பினும் குறைவான பட்ஜெட்டில் சுவாரஷ்யமான படத்தை தந்த இயக்குனர் சுனிஷ் குமாரை பாராட்டலாம்.