இன்றைய அவசியம் ‘நிழற்குடை’ : விமர்சனம்
வெளிநாடு போய் சம்பாதிக்கணும். பந்தா பகட்டு வாழ்க்கை வாழணும்கிற ஆசை இந்த தலைமுறையிடம் பேராசையாய் மாறியுள்ளது. அதுமட்டுமே அல்ல வாழ்க்கை… உறவுகளின் பாசத்தில்.. பரஸ்பர அன்பிலேயே இருக்கிறது அள்ள அள்ள குறையாத ஆனந்தம் என்ற கருத்தை உணர்த்தும் படமே நிழற்குடை.
காதல் தம்பதியான விஜித் – கண்மணிக்கு ஒரு பெண் குழந்தை. இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தையை கவனிக்க தேவயானியை வேலைக்கு அமர்த்துகின்றனர். பெற்றவர்கள் மற்றவர்கள் போல நடந்துகொள்ள தேவயானியோ பெற்ற பிள்ளையைபோல் அந்த குழந்தையை வளர்க்கிறார். அந்த குழந்தையும் தேவயானி தந்த அரவணைப்பில் தாயாகவே பாசம் காட்ட ஆரம்பிக்கிறாள்.
இந்த சூழலில் விஜித் – கண்மணிக்கு அமெரிக்காவில் வேலை கிடைக்கிறது. பயணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கையில் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கடத்தியதாக சிலர் மீது சந்தேகம் வருகிறது? குழந்தை கிடைத்ததா? என்ற கேள்விக்கு அடுத்தடுத்த திருப்பங்களில் கிடைக்கிறது விடை.
பொருள் ஈட்டுவதில் காட்டும் அக்கறையை இந்த தலைமுறையில் பெரும்பாலானோர் பெற்ற குழந்தைகள் மீது காட்டுவதில்லை. அதேபோல் பெற்றவர்களையும் மதிப்பதில்லை என்று இன்றைய சூழ்நிலைக்கு அவசியமான ஒரு கருவை கையில் எடுத்ததற்காகவே இயக்குநர் சிவா ஆறுமுகத்தை பாராட்டலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தேவயானிக்கு நடிக்க வாய்ப்பிருக்கும் கதாபாத்திரம். போலீஸ் ஸ்டேஷனலில் தன் மீது சந்தேகப்படும்போது, நான் பெற்றெடுக்காத பிள்ளைனாலும் 5 வருஷம் என் நெஞ்சில சுமந்திருக்கேன் என்று கலங்கி அழும் காட்சி டச்சிங்.
தம்பதிகளாக வரும் விஜித், கண்மணி, இன்ஸ்பெக்டராக இளவரசு, விஜித்தின் பாஸாக ராஜ்கபூர், சைகோவாக நடிக்கும் தர்ஷன் சிவா, குழந்தை நட்சத்திரங்களாக அஹானா அஸ்னி, நிஹாரிகா ஆகியோர் அவரவர் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையுடனும். ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு களத்துடனும் கைகோர்த்துள்ளது.
படத்தின் முக்கிய கேரக்டராக பயணித்திருக்கிறது வசனம். வெளிநாட்டு மோகத்திலும் பணத்திற்கான முக்கியத்துவத்திலும் உறவுகளை தள்ளி வைக்கும் மனித இயந்திரங்களை ஹிமேஷ்பாலாவின் வசனம் கொஞ்சமாவது திருத்தும்.
முதல் பாதி முழுக்கவும் அடிக்கும் நாடக நெடி, திரைக்கதையின் வலுவின்மை, அழுத்தமில்லா காட்சி அமைப்புகள் படத்தின் குறைகளாக இருந்தாலும் கதை விதைக்கும் செய்திக்காக நிழற்குடையை பிடிக்கத் தோன்றுகிறது