இதுக்கெல்லாம் கட்ஸ் வேணும்ல… ‘கட்ஸ்’ திரை விமர்சனம்
படத்தின் நாயகன் ரங்கராஜ் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரோட ஃபிளாஷ்பேக்கை ரீவைண்ட் செய்தால்.. ரங்கராஜ் பிறக்கும் சமயத்திலேயே அவரது தந்தை மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அதன்பிறகு சிறுவனாக இருக்கும்போது அவரது அம்மாவும் கொல்லப்படுகிறார். இதுக்கெல்லாம் காரணம் என்ன? என்று தெரியாமலேயே வளர்ந்து ஆளாகி இன்ஸ்பெக்டராகும் ரங்கராஜ் ஆசை ஆசையாக திருமணம் செய்துகொண்டு மனைவி, குழந்தையென வாழ்க்கை ஸ்மூத்தா போய்க்கொண்டிருக்கையில் மனைவியும் கொலை செய்யப்படுகிறார்.
பட்ட காலிலேயே படுவதுபோல ரங்கராஜின் துயரம் தொடர் கதை ஆகும்போது கொலையாளி யார் என்பது தெரிய வருகிறது. சும்மா இருப்பாரா ரங்கராஜ்?.. வேட்டையை தொடங்கி கொலையாளியை போட்டுத்தள்ளுவதுதான் மீதி கதை.
இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ என முதல் படத்திலேயே பல அவதாரங்களை எடுத்திருக்கும் ரங்கராஜ், தனது வேலையை தரமாகவே செய்திருக்கிறார். விவசாயி பெத்தனசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என முதல் படத்திலேயே இரட்டை வேடமும். இதுக்கெல்லாம் கட்ஸ் வேணும்ல.. அதான் படத்தின் தலைப்பையே அப்படி வைத்துவிட்டார் போல. சபாஷ் ரங்கராஜ் சபாஷ்! காதல், ஆக்ஷன், சோகம், செண்டிமெண்ட் என எல்லா உணர்வுகளையும் நடிப்பில் கொண்டுவருவது சிறப்பு.
ரங்கராஜின் அப்பா கேரக்டருக்கு மனைவியாக ஸ்ருதி நாராயணன், மகன் கேரக்டருக்கு மனைவியாக நான்ஸி இருவரின் நடிப்புமே சிறப்பு.
குணச்சித்திர வேடத்தில் சாய் தீனா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக ஸ்ரீலேகா, பெண் காவலராக அரந்தாங்கி நிஷா என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களின் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் பணிகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
வலுவற்ற திரைக்கதை உள்ளிட்ட சிறு சிறு குறைகள் இருந்தாலும் ‘கட்ஸ்’ பார்க்கலாம்!