’லவ் மேரேஜ்’ விமர்சனம்
ஏழு கழுதை வயசாகியும் (33 வயது) கல்யாணம் அமையாத விரக்தி வாலிபர் விக்ரம் பிரபு. `இந்த வயதில் கண்டிப்பாக திருமணம் ஆகியிருக்க வேண்டுமே’, `இவனுக்கு ராசியில்லை’, `இவன்கிட்ட எதோ குறை இருக்கு’ எனச் சுற்றி இருப்பவர்கள் தரும் அழுத்தத்தில் எதாவது ஒரு பெண் கிடைத்துவிட்டால் போதும் என இருக்கிறார்.
‘அசோக வனமுலு அர்ஜுன கல்யாணம்’ என்ற தெலுங்குப் படத்தை சிற்சில மாற்றங்களுடன் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். சுவாரஸ்யமான ஒன்லைனை வைத்து நல்லதொரு ‘பீல் குட்’ டிராமாவை உருவாக்க முயன்றிருக்கும் அறிமுக இயக்குநர் சண்முகப்பிரியன், அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். லாக்டௌனின்போது கொங்கு வட்டாரப் பெண் வீட்டாரிடம் மதுரையைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் சிக்கிக்கொள்ளும் களம் காமெடியில் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. விதவிதமான கதாபாத்திரங்களை அந்தச் சூழலில் உலாவவிட்டு நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதே சமயம், நம் சமூகத்தில் திருமணம் என்னவாக இருக்கிறது, அதிலிருக்கும் பிரச்னைகள் என்ன என்பதையும் சீரியஸாகப் பேசுகிறது படம்.
திருமணக் கனவுடன் தவிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்திப் போகிறார் விக்ரம் பிரபு. பெரிதாக வசனங்கள் எதுவுமில்லாமல் உணர்வுகளை உடல்மொழியிலேயே கடத்த வேண்டிய மணப்பெண்ணாக அறிமுக நாயகி சுஷ்மிதா பட் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுஷ்மிதாவின் தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ், துறுதுறுப்பான உற்சாகமான பாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார். கஜராஜ், ரமேஷ் திலக், வடிவேலு, அருள்தாஸ் எனத் துணைக் கதாபாத்திரங்களில் பலரும் நடித்திருக்கிறார்கள். இதில் அருள்தாஸ் மட்டுமே தனித்து நிற்கிறார். இரண்டாம் பாதியில் வரும் சத்யராஜின் கேமியோ பெரிதாக எடுபடவில்லை. ஆனால், மற்றொரு நடிகரின் கேமியோ ஓகே!