‘ஃபீனிக்ஸ்’ திரை விமர்சனம்!
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சம்பத்ராஜை படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்படும் சூர்யா சேதுபதியை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவருகிறது போலீஸ். விசாரணை முடிவில் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார் சூர்யா. அங்கே அவரை கொல்ல தாக்குதல் நடத்தப்படுகிறது. எம்.எல்.ஏ ஆட்கள்தான் அதை செய்கிறார்கள். சூர்யா ஏன் சம்பத்ராஜை கொலை செய்தார்? அதற்கான காரணங்கள்? சூர்யாவை உள்ளேயே வைத்து போட்டுத்தள்ள போடும் ஸ்கெட்ச்சிலிருந்து அவர் தப்பிக்கிறாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஃபீனிக்ஸ்’ கதை.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் சூர்யா சேதுபதிக்கு முதல் படமே ஆக்ஷன் அவதாரமாக அமைந்திருக்கிறது. அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருக்கிறது. பத்து பேரை போட்டு பொளந்தாலும் நம்பத்தோன்றும் உடலை வலிமையாக வைத்திருக்கிறார். சண்டை காட்சிகளில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். முகபாவனைகளில் மட்டும் பயிற்சி தேவை. முதல் படம் என்பதால் வாழ்த்தும் வரவேற்பும்!
சூர்யாவின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ். MMA வீரராகவே வரும் அவர் கொடுத்த பணியைச் சரியாகச் செய்திருக்கிறார். அவரது காதலியாக வரும் அபி நக்ஷத்திராவும் நடிப்பில் சிறப்பு!
சம்பத்ராஜின் மனைவியாக வரலக்ஷ்மி சரத்குமார் இரக்கமற்ற வில்லியாக வருகிறார். மகனை கொன்றவனை பலிவாங்க துடிக்கும் பாவனைகளை துல்லியமாக செய்திருக்கிறார். சம்பத்ராஜும் வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏவாக வரும் முத்துக்குமார், சம்பத் ராஜை வார்த்தைகளால் சம்பவம் செய்யும் இடங்கள் கலகலப்பு.
நாயகன் அம்மாவாக தேவதர்ஷினி சிறப்பான தேர்வு. கோச்சாக வரும் தீலிபன், ஜெயிலராக வேல்ராஜ், மற்றொரு சிறை அதிகாரியாக மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன், போலீஸ் அதிகாரியாக ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டவர்களும் அவரவர் பங்கை சரியாக செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், எடிட்டர் பிரவீன் கே.எல்., இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது பணியை நேர்த்தியாகச் செய்துள்ளனர்.
ஸ்டன்ட் மாஸ்டர், இயக்குநர் என இரட்டை சவாரி செய்திருக்கும் சண்டை பயிற்சியாளர் அனல் அரசு, இரண்டிலுமே ஜெயித்திருக்கிறார். மேக்கிங்கில் பிரமாதப்படுத்திருப்பவர் திரைக்கதையில் அழுத்தம் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதி படத்தின் வேகம் இடைவேளைக்குப் பிறகு குறைவதால், இரண்டாம் பாதி சற்றே அயற்சியை தருகிறது. எம்.எல்.ஏ கொலைக்கான காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கணிக்க முடிகிறது. அப்படி இருக்கும்போது சஸ்பென்ஸை மெயிண்டெயின் செய்வதுபோன்ற திரைக்கதை ஆக்கம் செயற்கையாக தெரிகிறது.
வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் பாதி பலம். பின்னணி இசையில் ஒருசில படங்களின் சாயல் தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் அனல் மூட்டியுள்ளது.
“ஏன் நாங்களெல்லாம் ஜெயிக்கக்கூடாதா? நாங்க ஜெயிக்கிறதுதான் உங்க பிரச்சனைனா நாங்க ஜெயிப்போம்டா” என்ற வசனத்தை தவிர மற்ற உரையாடல்கள் சம்பிரதாயமாகவே கடந்து போகிறது.
இப்படி சில குறைகளை கவனித்திருந்தால் ‘ஃபீனிக்ஸ்’ பெரிய வரவேற்பை பெற்றிருக்கும்.