கிரீஸ் தடவப்படாத கேரக்டர் என்பதால்.. ‘ஜென்ம நட்சத்திரம்’ விமர்சனம்
சினிமா இயக்குநராகும் முயற்சியில் இருப்பவர் நாயகன் தமன்குமார். இவரது மனைவி மால்வி மல்கோத்ரா. தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்வதற்காக வெளியூர் போகிறார் தமன். அப்போது வீட்டில் தனியாக இருக்கும் மால்வியை மிரட்டுகிறது ரத்தக் கறை படிந்த கைகள். பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தால் குத்துயிரும் குலையுயிருமாக கிடக்கிறார் காளிவெங்கட். தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஃபேக்டரி ஒன்றில் 57 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாகவும் அதை எடுத்து தனது மகளை காப்பாற்றுமாறும் சொல்லிவிட்டு உயிரை விடுகிறார்.
அடுத்து பணம் இருக்கும் தொழிற்சாலைக்கு தமன் அண்ட் கோ செல்கிறது. போன இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகளே மிச்ச கதை.
கிடைத்த கேப்பில் நடிப்பில் கிடா வெட்ட ட்ரை பண்ணியிருக்கிறார் தமன்குமார். ஆனால் கிரீஸ் தடவப்படாத கேரக்டர் என்பதால் கியர் போடுவதில் மக்கர் ஆகிறது. இருப்பினும் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் மால்வி மல்கோத்ரா, அடிக்கடி கெட்ட கனவு வந்து அரண்டு எழுவார். அப்போது உண்மையான பீதியை வெளிப்படுத்தி, நடிப்பில் வெல்டன் சொல்ல வைக்கிறார்.
காளிவெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் என படத்தில் வரும் பிரபலங்களுக்கு சரியான தீனி இல்லாத ஏமாற்றம் அவர்களது நடிப்பிலேயே தெரிகிறது. இவர்களது கதாபாத்திரங்களுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கலாம்.
என்னவோ வித்தியாசமா சொல்ல வர்றாங்கப்பா என்று முன் பாதி படத்தின் வேகம் எதிர்பார்ப்பை பற்ற வைத்தாலும் இடைவேளைக்குப் பிறகு 57 கோடி பணம், பேய் என கதை எங்கெங்கோ சுற்றுவதால் தலை சுற்றுகிறது.
இருந்தாலும் த்ரிலர் படத்துக்கான டெம்ப்ளேட்டில் டெக்னிக்கல் டீம் கச்சிதமாக ஒட்டிக்கொள்வதால் ஓரளவு போரடிக்காமல் போகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் தரம் கூட்டியிருக்கலாம்.
‘ஜென்ம நட்சத்திரம்’ டல்லா ஒளிருது!