இதுவரை பார்க்காத வடிவேலு.. ‘மாரீசன்’ விமர்சனம்!
ஸ்கெட்ச் போட்டு திருடுவதில் கெடிக்காரரான பகத் பாசில், நாகர்கோவிலில் ஒரு வீட்டில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும், வடிவேலுவை மீட்கிறார். ஞாபக மறதியுள்ள தன்னை தனது மகன் கட்டி வைத்திருப்பதாகவும் இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றால் பணம் தருவதாகவும் சொல்கிறார் வடிவேலு.
வடிவேலுவின் கணக்கில் நிறைய பணம் இருப்பதை அறிந்துகொள்ளும் பகத், சரியான வேட்டை என நினைத்து வடிவேலுவின் பணத்தை அடிக்க ப்ளான் பண்ணுகிறார். இருசக்கர வாகணத்திலேயே திருவண்ணாமலைக்கு பயணிக்கும் இருவரின் பயணமும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், பூனை, எலி போட்டியே கதை.
வடிவேலுவின் கரியரில் ‘மாரீசன்’ மைல்கல் படம். மாரீசன் கேரக்டரே அவர்தான். அவரை சுற்றியே பின்னப்பட்ட கதை என இதுவரை பார்க்காத வடிவேலுவை இதில் காணலாம். அல்சைமர் என்னும் மறதி நோயால் அவதிப்படுவது, சமூகத்தின் மீதான கோபம், ஆக்ரோஷம் எனச் சிறிது சிறிதாக ஆழமாகும் வேலாயும் கதாபாத்திரத்தை அனு அனுவாக உணர்ந்து நடித்திருக்கிறார்.
அழுகை, பரிதாபம் போன்ற உணர்வுகளில், தன் வழக்கமான உடல்மொழியிலிருந்து விலகி, வேறொரு உடல்மொழியைக் கொண்டு வந்திருப்பது சிறப்பு!
துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்ட சேட்டைக்காரத் திருடராக பகத் பாசில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். அதே நேரம், எமோஷன் ரோட்டிலும் பிசிறு தட்டாத பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
உடல்மொழி, சிறு சிறு மாற்றங்களைக் கூட வெளிப்படுத்தும் முகபாவங்கள் எனத் தன் ஏரியாவில் மிரட்டியிருக்கிறார் பஹத்.
சித்தாரா, உணர்வுபூர்வமான காட்சிகளுக்குக் கைகொடுக்க, விவேக் பிரசன்னா, கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
பைக் பயணம், நெடுஞ்சாலைகள், கிராமங்கள் நிறைந்த முதற்பாதி பயணத்தை, தன் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான ஒளிப்பதிவால் அலுப்பில்லாத பயணமாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி.
யுவன் சங்கர் ராஜாவின் ரீமிக்ஸில், இளையராஜாவின் ‘நேத்து ஒருத்தர ஒருத்தரப் பார்த்தோம்’ பாடல் ‘வைப்’ ஏற்றுகிறது. ‘மாரீசா’ பாடல் ஆறுதல் தர, ஏனைய பாடல்கள் இப்பயணத்திற்குச் சுவை கூட்டவில்லை. பின்னணி இசையால், எமோஷன் மீட்டரையும், பரபர மீட்டரையும் ஆங்காங்கே ஏற்றியிருக்கிறார்.
இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்வது, அவர்களுக்கிடையிலான முரண்கள் வெளிப்படுவது எனத் தொடக்கத்திலிருந்து சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது படம்.
வடிவேலுவின் நினைவுத் திறன் இழப்பால் பகத் பாசில் படும்பாட்டையும், பணத்தைத் திருட அவர் எடுக்கும் முயற்சிகளையும், சின்ன சின்ன ட்விஸ்டுகளோடு சிரிக்க வைத்தது சிறப்பு!
சிரிப்பலைகளுக்கிடையில், வேலாயுதம் கதாபாத்திரத்தின் பின்னணியையும், அதோடு சேர்ந்து சில மர்மங்களையும் கூட்டுவது திரைக்கதையைச் செறிவாக்கியிருக்கிறது. அதிலும் அந்த இடைவேளை சுவாரஸ்யம்!
இரண்டாம் பாதியில் இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. அதற்கு ஏற்றார் போல், திரைக்கதையும் கியரைக் கூட்டி த்ரில்லர் பாதைக்கு மாறுகிறது. அதேநேரம், இரண்டாம் பாதிக்கு அச்சாரமாக இருக்கும் பின்கதை, புதுமையில்லாமல் யூகிக்கும் படி வருவது பெரிய மைனஸ்!
அதீத ஹீரோயிஸத்தால் லாஜிக் இல்லாமல் நடக்கும் பழிவாங்கும் படலம், தேவையில்லாத ஆக்ஷன் காட்சிகள், எமோஷனை வலிந்து திணிக்கும் வசனங்கள் போன்றவற்றால் அதுவரை இருந்த சுவாரஸ்யம் சிறிது தடம் புரள்கிறது.
இப்படி சில குறைகள் இருந்தும் சமூகத்திற்கு தேவையானவன் இந்த ‘மாரீசன்’.