‘மகாவதார் நரசிம்மா’ விமர்சனம்!
அரக்க சகோதரர்களான இரண்யாக்ஷனும் இரண்யகசிபுவும் விஷ்ணுவை அழிக்கத் துடிக்கிறார்கள். படத்தின் முதல் பாதியிலேயே வராக அவதாரமெடுத்து இரண்யாக்ஷனை வதம் செய்கிறார் விஷ்ணு. தனது சகோதரனை கொன்ற விஷ்ணுவை அழிக்க பிரம்மனிடம் கடும்தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெறுகிறார் இரண்யகசிபு. ஆனால், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் தீவிர பக்தனாக இருப்பதால் அவனை வெறுத்து பல்வேறு வழிகளில் பிரகலாதனை கொல்ல முயற்சிகள் செய்கிறார்.
அனைத்து முயற்சிகளிலும் பிரகலாதனை விஷ்ணு காப்பாற்றுகிறார். தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் இரண்யகசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்து வதம் செய்வதே இந்த அனிமேஷன் படத்தின் கதை.
விஷ்ணு அவதாரத்தின் இந்த இரண்டு பகுதிகளை மட்டும் இந்தப் பாகத்தில் தொட்டிருக்கிறார்கள். இது போன்ற புராணக் கதைகளை நாம் படிக்கும்போது கதாபாத்திரங்களின் உருவங்கள் நமக்குள் தோன்றியிருக்கும். அப்படி விஷ்ணுவின் நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், இரண்யாக்ஷன், இரண்யகசிபு ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கு சிறந்ததொரு அனிமேஷனில் உருவம் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல, யுத்தம், இரண்யகசிபுவின் சாம்ராஜ்யம் என அனைத்தையும் அனிமேஷன் ஃப்ரேமில் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த அனிமேஷன் உலகத்தை கட்டியெழுப்ப கிராபிக்ஸுக்கு பெரும் உழைப்பைச் செலுத்தி நல்லதொரு அவுட்புட்டையே கொடுத்திருக்கிறது படக்குழு. இந்திய அனிமேஷன் திரைப்பட வரலாற்றில் இந்த ‘மகாவதார் யுனிவர்ஸ்’ குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறும். அதே சமயம், யுத்தக் காட்சிகளின் ஓரிரு இடங்களில் கிராபிக்ஸ் தரத்தை இன்னும் மெருகேற்றியிருந்தால் முழுமையான அனுபவத்தைக் நம் விழிகளுக்குக் கொடுத்திருக்கும்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக பவர்ஃபுல் பின்னணி இசையைக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸுக்குப் பாராட்டுகள்! ஆனால், பாடல்களில் கொஞ்சம் ஏமாற்றமே!
எழுத்திலும், நீண்ட புராணக் கதையை திரைமொழிக்கேற்ப முதற்பாதியில் வராக அவதாரம், இரண்டாம் பாதியில் நரசிம்ம அவதாரம் என தனித்தனியாக அடுக்கி, பாராட்ட வைக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஜெயபூர்ணா தாஸ், அஷ்வின் குமார், ருத்ர பிரதாப் கோஷ்.
இப்படியான புராணக் கதைகள் பற்றிப் பெரிதும் பரிச்சயமில்லாதவர்களுக்கும், இன்றைய ஜென்-சி பார்வையாளர்களுக்கும் புரியும் வகையில்தான் இந்த அனிமேஷன் படத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் குமார். அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையாக புரிய வைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட தமிழ் டப்பிங் வசனங்களும் கவனம் பெறுகின்றன.
இதுவரை, கார்டூன் சேனல்களில் இது போன்ற புராணக் கதைகளை அனிமேஷன் வடிவில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது, இந்த ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படத்தை திரையரங்க வெளியீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இப்படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமாக ‘ஹோம்பாலே ஃபிலிம்ஸ்’, ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்’ என யூனிவர்ஸ் வரிசையில் திரைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்திருக்கிறது.