நேசிக்கவேண்டிய படைப்பு ‘வீரவணக்கம்’ : விமர்சனம்!
சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதை. அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1940 தொடங்கும் கதை 1946 வரை செல்கிறது. இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனை வெளியேற்ற ஒரு தரப்புத் தலைவர்களும் தொண்டர்களும்போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்திய கிராமங்களில் பண்ணையார்களும் ஜமீன்களும் ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்து கொண்டு கீழ்த்தட்டு மக்களை கொத்தடிமை போல நடத்தி வருகிறார்கள்.அப்படி அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மீட்டு, புதிய மக்கள் புரட்சியை ஏற்படுத்தி பொதுவடைமை சித்தாந்தத்தை மலரச் செய்ததை ரத்தமும் சதையுமாக உருவாக்கி இருக்கும் படம்.
கேரளாவின் பொதுவுடமை போராளி கிருஷ்ண பிள்ளையின் வரலாறும் கேரளத்தில் பொதுவுடமை இயக்கம் வளர்ந்த வரலாறுமே ‘வீரவணக்கம்’. ஃபிளாஷ்பேக்காக விரியும் கதையில் கிருஷ்ண பிள்ளையாக வருகிறார் சமுத்திரக்கனி. உணர்வுபூர்வமாக பேசும் வசனத்தில், உணர்ச்சிப்பூர்வமான உடல்மொழியில் சமுத்திரக்கனி பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார்.
கிருஷ்ண பிள்ளையின் ஆன்மா சமுத்திரக்கனிக்குள் ஊடுருவியதுபோல கிருஷ்ண பிள்ளையாகவே வாழ்ந்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார்.
பெரிய மீசை, கம்பீரமான தோற்றத்தில் பொதுவுடமை இயக்க வீரராக பரத் சிறப்பு. வயது தாண்டிய பாத்திரம் என்றாலும் அதில் அவர் பொருந்துகிறார். கம்யூனிச போராளியாக ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக பிரேம் குமார் மற்றும் ரமேஷ் பிஷராடி, சுரபி லட்சுமி, புரட்சிப் பாடகி பி.கே.மேதினி, ஆதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற கதாபாத்திரங்களும் அருமையான தேர்வு!
கதைக்கும், களத்திற்கும் பொருத்தமாக உருத்தாத ஒளிப்பதிவை செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கவியரசுவுக்கு பாராட்டுகள்! எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளனர்.
பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் அனில் வி.நாகேந்திரனின் உழைப்பும் சிந்தனைக்கும் வாழ்த்தும் வணக்கமும்!
‘வீரவணக்கம்’ நேசிக்கவேண்டிய படைப்பு!