ரசிகனை ஏமாற்றாத ‘கடுக்கா’ : விமர்சனம்!
கதைக்கு போகறதுக்கு முன்னாடி கடுக்கா என்பதின் பொருள் பார்த்திடலாம்..
ஏமாற்றுவதையும் எஸ்கேப் ஆவதையும்தான் ஊர்ப்பக்கம் கடுக்கா என்பார்கள்.
கதை என்ன?
அம்மாவின் சம்பளத்தில் வயிறை வளர்த்து, வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிவரும் விஜய் கெளரிஷின் ஃபுல் டைம் ஜாப் சைட் அடிப்பதுதான். டிப் டாப்பா டிரஸ் பண்ணிட்டு வெளியே கிளம்பி போனா.. கெளரிஷின் கண்கள் தேடுவதெல்லாம் பெண்கள், பெண்கள், மேலும் பெண்கள்… இவர் வீட்டுக்கு எதிர்வீட்டுக்கு கண்ணுக்கு லட்சனமா குடிவருகிறார் நாயகி ஸ்மேகா. பிள்ளையார் ஞானப்பழம் பெற்ற கதையாக வீட்டிலிருந்தபடியே சைட் அடிக்கும் தொழிலை தொடர்கிறார் நாயகன். ஒருகட்டத்தில் நாயகிக்கு காதல் வலை விரிக்கிறார். அதேசமயம் ஸ்மேகாவை கெளரிஷின் நண்பர் ஆதர்ஷும் லவ்வுகிறார். ஆனால் நாயகி ஸ்மேகா யாரை காதல் கொள்கிறார் என்பதுதானே மேட்டர். அதுதான் படத்தின் முடிச்சே. இந்த முடிச்சை இயக்குநர் எப்படி அவிழ்க்கிறார் என்பதே மிச்ச கதை.
இந்தக்காலத்து பசங்களை அச்சு அசலாக நகலெடுத்த கதாபாத்திரத்தில் நாயகன் விஜய் கெளரிஷ், அட்டகாசமாய் பொருந்துகிறார். இது முதல் படம் என்பது தெரியாத அளவிற்கு நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகனின் நண்பராக வரும் ஆதர்சும் அட்டகாசம். நாயகி ஸ்மேகாவின் எளிமை அழகு ஈர்க்கிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கெவின் டி.காஸ்ட் இசையில் பாடல்கள் மனதில் நிறைகிறது. பின்னணி இசையிலும் குறையொன்றுமில்லை. ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் துரைகண்ணுவின் ஒளிப்பதிவில் கொங்கு மண்டலத்தின் இயல்பு எட்டிப்பார்க்கிறது.
படத்தின் ஆரம்பம் தொடங்கி பல காட்சிகள் ஜாலியோ ஜிம்கானாவாக இருந்தாலும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று சமூகத்திற்கு தேவையான செய்தியையும் திரைக்கதையில் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு பாராட்டுக்குரியவர்.
லொ பட்ஜெட்டில் கற்கண்டு காமெடியுடன்கூடிய இந்த ‘கடுக்கா’ யாரையும் ஏமாற்றாது!