திரை விமர்சனம்

‘சொட்ட சொட்ட நனையுது’ விமர்சனம்!

நாயகன் நிஷாந்த் ருச்சோ தீபகற்பம் போன்றவர். அதாவது தலையில் மூன்று பக்கம் முடியாலும் ஒருபக்கம் வழுக்கையாலும் சூழப்பட்ட ‘சொட்ட’ தலையர். இவரது  ‘தலை’யாய பிரச்சனையே மயிர் நீத்த மண்டைதான். இதனாலயே இவருக்கு திருமணம் நடப்பதில் சிக்கலாகிறது. பணம் இருந்தும் வசதி இருந்தும்  “நோ பீஸ் ஆஃப் மைண்ட்”.

நிஷாந்த் சந்திக்கும் அவமானம், ஏமாற்றம் மட்டும் நாளுக்கு நாள் அமேசான் காடாய் வளர, முடி மட்டும் முளைப்பதாய் இல்லை. வேதனையின் விளிம்பில் இருப்பவருக்கு தேவதையாய் வந்தமைகிறார்  நாயகி வர்ஷினி வெங்கட். பல பெண்களால் ரிஜக்ட் செய்யப்பட்ட நிஷாந்தை  “நானிருக்கிறேன் உனக்கு” என நம்பிக்கை கொடுக்கிறார். ஆயிரம் கனவுகளுடன் கல்யாணத்திற்கு தயாராகிறார் நிஷாந்த். விடிஞ்சா கல்யாணம் என்ற சூழலில் நிஷாந்த் கண்களில் சிக்குகிறது வர்ஷினி இன்னொருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ. கல்யாணம் ஸ்டாப்.. கதையிலும் இடைவேளை. இரண்டாம் பாதியில் என்ன நடக்கிறது? என்ற எதிர்பார்ப்பே மிச்ச கதை.

நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ருச்சோவுக்கு இது முதல் படம். ஆனாலும் நடிப்பின் மீட்டர் தெரிந்து நடித்திருக்கிறார். அவமானம், கோபம், ஏமாற்றம், வெறுப்பு என எல்லா ரசங்களையும் கொட்டும் திறமை உள்ளவராக இருக்கிறார். வாழ்த்துகள் பிரதர்!

நாயகி வர்ஷினி வெங்கட், ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்றாலும் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். நின்றால் ரீல்ஸ்.. நடந்தா ரீல்ஸ்.. என ரீல்ஸ் பைத்தியமாக வரும் இரண்டாவது நாயகி ஷாலினி செம ஜாலினியாக நடிப்பில் துறுதுறு சுருசுரு. ஹீரோவின் நண்பர்களாக வருபவர்கள் காமெடியும் கடியும் கலந்து கேரக்டர்களை நகர்த்தியுள்ளனர். ஹீரோ, ஹீரோயின் பெற்றோர்களாக வருபவர்களும் ஓகே ரகம்.

கதையின் ஒன்லைனில் இருக்கும் சுவாரஷ்யத்தை திரைக்கதையிலும் கொண்டுவந்திருந்தால் வெகுஜன ரசிகர்களை ஈர்த்திருக்கும். வழுக்கை தலையனுக்கு வாழ்க்கையே இல்லை என்பதெல்லாம் லாஜிக் எரர். மண்டையில் முடி இல்லாவிட்டாலும் சம்பாதிக்க மூளை உள்ளவனை லவ்வும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை இயக்குநர் நவீத் எஸ். ஃபரீத் நம்பவேண்டும்!

இப்படி படத்தில் சில குறைகள் இருப்பதால் ‘சொட்ட சொட்ட நனையுது’ சுமார் ரகமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE