‘மதராஸி’யில் SK கேரக்டர் இதுதான் : சீக்ரெட் சொல்லும் முருகதாஸ்
ரிலீசுக்கு இன்னும் ரெண்டே நாள்தான். ஆனா இப்பவே தாறுமாறான எதிர்பார்ப்பு எகிறி கிடக்குது ‘மதராஸி’க்கு. இதில் சிவகார்த்திகேயன் கேரக்டர் என்னவ இருக்கும்? டபுள் ஆக்ஷன் என்று சொல்றாங்களே? என ஏகப்பட்ட கேள்விகள்.
அதற்கெல்லாம் முருகதாஸ் சொல்லும் பதில் இதோ..
‘‘ ‘மதராஸி’யோட கேரக்டர் ஆறு வருஷத்துக்கு முன்னரே மனசுக்குள் உருவாகிடுச்சு. அந்த கேரக்டரைத்தான் ‘மதராஸி’யா கொண்டு வந்திருக்கேன். கொரோனா காலகட்டத்துல நான் ஒரு அனிமேஷன் படம் செய்றதுக்கான வேலையை ஆரம்பிச்சேன். அது என்னோட ட்ரீம் புராஜெக்ட். அதுக்காக ரெண்டு வருஷத்துக்கு மேல ஸ்கிரிப்ட் வேலைகள்ல இருந்தேன். அந்தச் சமயத்துலதான் சிவகார்த்திகேயனோடு ஒரு நல்ல சந்திப்பு நிகழ்ந்தது. அவர் ‘நாம ஒரு படம் சேர்ந்து பண்ணலாம் சார்’னு ஆரம்பித்தார்.
அனிமேஷன் படத்தை முடிச்சுட்டு நம்ம படத்தை ஆரம்பிக்கலாம்னு அவர்கிட்ட சொன்னேன். அப்புறம், என் அனிமேஷன் படம் பட்ஜெட் காரணமாக கொஞ்சம் தள்ளிப் போனது. அதன்பிறகு, சிவாகிட்ட ‘நம்ம படத்தைத் தொடங்கிடலாம்’னு சொல்ல, அவரும் சந்தோஷமா களமிறங்கிட்டார். ‘மதராஸி’யின் கதைக்களம் சென்னைதான். படத்தோட வில்லன், வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவங்கதான் சென்னையில் இருக்கற வங்களை ‘மதராஸி’னு சொல்லு வாங்க. ஒரு வட இந்தியரின் பார்வையில் தான் இந்தக் கதை பயணிக்கும். இதில் சிவாவோட கேரக்டர் ரகு பத்திச் சொல்லணும்னா, வழக்கமான மனிதர்கள்ல இருந்து வித்தியாசமான குணாதிசயம் கொண்டவரா இந்த கேரக்டர் இருக்கும்.”
‘‘கடந்த 15 வருஷத்துல தமிழ் சினிமாவில் நடந்த பிரமாண்ட வளர்ச்சியாக சிவாவையும், அனிருத்தையும் சொல்லலாம். ரெண்டு பேரோட வளர்ச்சியும் பார்க்க அவ்வளவு பிரமிப்பா இருக்கு. அந்த உயரத்துக்கான தகுதியும், கடின உழைப்பும் அவங்ககிட்ட இருக்குது. அதிலும் சிவா சினிமாவிற்கு வர்றதுக்கு முன்னாடியே, குழந்தைகளுக்கும், பெரியவங்களுக்கும் பிடிச்ச ஒருத்தரா எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்த பிறகுதான் வந்தார். மத்த புதுமுகங்கள் போல அவரைச் சொல்லிட முடியாது. சினிமாவுக்குதான் அவர் புதுசே தவிர, ஜனங்களுக்கு அவர் தெரிஞ்ச முகம் தான். விஜய் சார், அஜித் சாருக்கெல்லாம் தொடக்கக் காலங்களிலேயே அவங்களுக்கான ஆக்ஷன் இமேஜ் கிடைச்சிடுச்சு. ஆனா, சிவா படிப்படியாக நிறைய விஷயங்களை உடைத்து இப்பதான் ஆக்ஷனுக்குள் வந்திருக்கார். ‘மதராஸி’யோட படப்பிடிப்பு ஒரு கல்லூரியில் நடந்தபோது, அங்கே அவருக்குத் திரண்ட ரசிகர்களைப் பார்த்து மிரண்டுபோயிட்டேன். இப்படியொரு வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். ஏன்னா, கட்டுக்கடங்காத கூட்டத்தின் ரியாக்ஷனைப் பார்க்கும்போது, சிவாவைப் பார்த்திடணும் என்கிற அன்பையும் ஆர்வத்தையும் அவங்க கண்கள்ல பார்த்தேன். அவர் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்துட்டார்னு தெளிவா தெரிஞ்சது.
இன்னொரு விஷயம், சிவகார்த்திகேயனோட நகைச்சுவை ரொம்ப ஸ்பெஷல். எனக்குத் தெரிந்து, வெற்றிகள் அதிகமா கொடுத்த ஹீரோ அவர்தான். விஜய் சார், அஜித் சாரோட ஆரம்பக் காலங்களைப் பார்த்தால், அவங்க அறிமுக இயக்குநர்கள் நிறைய பேர்கிட்ட ஒர்க் பண்ணியிருப்பாங்க. வருஷத்துக்கு குறைந்தது தலா மூணு இயக்குநர்களையாவது அறிமுகம் செய்திருப்பாங்க. இதுதான் அவங்களோட அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம்னு நினைக்கறேன். அப்படி சிவாவும் புது இயக்குநர்கள் நிறைய பேரைக் கொண்டு வர்றார். புதுத் திறமைசாலிகளைக் கண்டுபிடிக்கறது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒருத்தரை நம்பி, அவங்களுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கறதுதான் அதுக்குக் காரணம். எல்லோர்கிட்டேயும் கலகலப்பாகப் பேசக்கூடியவர். படப்பிடிப்பு இடைவேளைகளில் என் உதவி இயக்குநர்கள் அத்தனை பேருடனும் பேசிக்கொண்டிருப்பார். படத்துல அவருக்கு டபுள் ஆக்ஷன் கிடையாது. ஒரே கேரக்டர்தான். ஆறு மாத இடைவெளியில் இரண்டுவிதமான தோற்றங்களில் வருவார்.”