ஆக்ஷன் ப்ரியர்களுக்கு அன்லிமிட் விருந்து ‘மதராஸி’ : திரை விமர்சனம்!
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறது ஒரு கும்பல். இதற்காக 6 கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை கொண்டுவந்து ஒரு தொழிற்சாலையில் மறைத்து வைக்கிறார்கள். ஆயுதங்களை வெடிக்கவைத்து அழிக்க திட்டமிடுகிறது என்ஐஏ என்று சொல்லப்படுகிற தேசிய புலனாய்வு முகமை. பாதுகாப்பு அரண்களை மீறி ஆயுதம் இருக்கும் இடத்தை தகர்க்க உயிர்மீது அக்கறை இல்லாத சிவகார்த்திகேயனை தேர்வு செய்கிறார் என் .ஐ.ஏ அதிகாரி பிஜூமேனன்.
ருக்மணி வசந்த் மீதான காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள துடிக்கும் எஸ்கேவும் என் ஐ ஏ ஆபரேஷனுக்கு ஓகே சொல்லி ஸ்பாட்டுக்கு செல்கிறார். அங்கே இந்தியாவையே அலறவிட்டுக்கொண்டிருக்கும் வில்லன் வித்யூ ஜமாலை சிவகார்த்திகேயன் அசால்ட்டாக போட்டுத்தள்ளுவதுடன் முடிகிறது இடைவேளை. அதன்பின் என்ன நடக்கிறது? என் ஐ ஏவின் திட்டம் சக்சஸ் ஆகிறதா? சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் உளவியல் பிரச்சனை என்ன? அவரது காதல் கைகூடுகிறதா இல்லையா என்பதே இரண்டாம் பாதி கதை.
படத்தின் முதுகெழும்பே சிவகார்த்திகேயன்தான். ஆக்ஷன் ஏரியால் எத்தனைபேர் வந்தாலும் பொளந்துகட்டுவது? காதலியின் அன்பில் கரைவது பிரிவில் ஏங்குவது? உளவியல் பிரச்சனையின்போது காட்டும் அற்புத உடல்மொழி என வழக்கம்போலவே கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்த கடுமையாக உழைத்திருக்கிறார். அவ்வப்போது அவர் காட்டும் மேனரிஷம் ஆசம்.
துப்பாக்கி கலாச்சாரத்தை வளர்க்கத் துடிக்கும் வில்லனாக வித்யூத் அட்டகாசம். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் படத்தின் ஹீரோ எஸ்.கேவா இல்லை வித்யூவா என்று ஆடியன்ஸ் குழம்பும் அளவுக்கு மனிதர் அசத்தி இருக்கிறார். இவரது நண்பராக வரும் வில்லனும் சரியான தேர்வு. ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காகவும் இருக்கிறது.
நாயகி ருக்மணி வசந்த் செம க்யூட். சொக்க வைக்கும் அழகு, சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு என இரண்டு ஏரியாவிலும் ஈர்க்கிறார். சிவகார்த்திகேயன் மீது காதல் மலரும் காரணமும், அவரை பிரிவதற்கான காரணமும் கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பிஜூமேனன். தேசப்பற்றுள்ள என்.ஐ.ஏ அதிகாரியாக தனது பங்களிப்பை சரியாக செய்துள்ளார். அவரது மகனாக விக்ராந்துக்கு பெரிதாக வேலை இல்லை.
ராக் ஸ்டார் அனிருத் இசையில் பாடல்களெல்லாம் மாண்டேஜ் சாங்காக வந்துபோகிறது. சில இடங்களில் நடிகர்களின் உரையாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு பின்னணி இசையில் புரட்டி எடுக்கிறார். கொஞ்சம் அடக்கி வாசிங்க அனிருத்.
ஒளிப்பதிவு.. சுதீப் எலமன். சும்மா சொல்லக்கூடாது. சண்டை காட்சிகளில் மனிதர் பேய் மாதிரி உழைத்திருக்கிறார். காதல், ஆக்ஷன் இரண்டுக்கும் தந்திருக்கும் கலர் வேரியேஷன் சூப்பர். சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பே இப்படி என்றால் ஸ்டண்ட் மாஸ்டர் கெவின் குமாரின் உழைப்பு அசுரத்தனம். அதேபோல் ஸ்டண்ட் நடிகர்களின் அர்ப்பணிப்புக்கும் தலை வணங்கலாம்.
படத்தின் ஓபனிங் காட்சி, ஹாலிவுட் தரத்திற்கு படமாக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸில் சிவகார்த்திகேயனும் – வித்யூத் ஜமாலும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இடங்கள் மிரட்டலின் உச்சம்!
கதைப்படி வில்லன் வித்யூத் ஜமால் என்றாலும் படத்திற்கு வில்லனாக நிற்கிறது லாஜிக்தான். ஒரு பெட்டிக்கடை முன்பு கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்தினாலே.. எடுக்கச்சொல்லி இம்சை கொடுக்கும்போது ஒரு தொழிற்சாலையில் துப்பாக்கிகள் உள்ள கண்டெய்னர்களை நிறுத்திவைப்பது? அந்த தொழிற்சாலை யாருக்கு சொந்தமானது என்பதைகூட தெரிந்துகொள்ளாமல் அதிகாரிகள் அசால்ட்டாக இருப்பது. அடர்ந்த காட்டுக்குள் என் ஐ ஏ அலுவலகம் ரகசியமாக இயங்க வேண்டிய அவசியம் என்ன? என்று ஏகப்பட்ட ஓட்டைகள், கேள்வி எழுப்ப வைக்கிறது.
‘துப்பாக்கி’ பெயரில் படமே எடுத்தவன்டா நான் என்று நினைத்திருப்பார்போல முருகதாஸ். 6 கண்டெய்னர் இல்லை 6000 கண்டெய்னர்கள் துப்பாக்கிகளை இறக்கி.. வச்சுசெய்திருக்கிறார்.
ஹீரோவுக்கு இருக்கும் உளவியல் பிரச்சனையை வைத்து ‘கஜினி’யை ரசிக்க வைத்தவர் முருகதாஸ், அதேபோன்று உளவியல் பிரச்சனையை அடிநாதமாக கொண்ட படம்தான் இதுவும். ஆனால் லாஜிக், திரைக்கதை மேஜிக் மிஸ் ஆவதால் ஆங்காங்கே பிசிறடிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி படத்தின் விறுவிறுப்பு, படத்தின் குறைகளை மறந்துபோகச்செய்து அடுத்து என்ன? அடுத்த என்ன? என்ற எதிர்பார்ப்பை பற்ற வைப்பது படத்தின் பலம்.
மொத்தத்தில் எஸ்கே ரசிகர்களுக்கும் ஆக்ஷன் ப்ரியர்களுக்கும் அன்லிமிட் விருந்து இந்த ‘மதராஸி’!