அந்த சாமியே வந்தாடுவது போன்று அர்ஜூன் தாஸின் நடிப்பு ஆகச்சிறப்பு!
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், காளிவெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ‘பாம்’. ‘கைதி’. ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக ஈர்க்கப்பட்டு தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் கதாநாயகனாக அசத்திவரும் அர்ஜுன் தாஸ், இந்தப்படத்திலும் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார்.
வாழ்வின் விநோதங்களை அடிப்படையாக கொண்ட கதையில் மணி முத்து என்ற மாட்டுக்கு லாடம் கட்டும் கேரக்டரில் அர்ஜுன்தாஸின் நடிப்பு, எளிய மனிதர்களை கண்முன் நிறுத்தும் எதார்த்த நடிப்பாக இதயம் தொடுகிறது.
அதிலும் இடைவேளைக்குப் பிறகு சாமி வந்தாடுவது போன்ற ஒரு காட்சி, படம் பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கும் ஆகச்சிறந்த நடிப்பு! இவரது நண்பராக, இரண்டுபட்டு கிடக்கும் ஊரை ஒன்றுசேர்த்துவைக்க பாடுபடும் கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார்.
இவரது கேரக்டரும் படத்தின் அடிநாதம் என்கிற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அது தெரிந்திருந்தும் காளிவெங்கட்டுக்கும் சமமான இடம் கொடுத்து கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் அர்ஜுன் தாஸின் நல்ல மனதை படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.
ஒரு ஹீரோ என்றால் இத்தனை பாட்டு வேண்டும் இத்தனை சண்டை வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து மணி முத்து என்ற கேரக்டர் என்ன கேட்கும்; அது என்ன செய்யும் என்பதை மட்டும் உள்வாங்கி நடித்திருக்கும் அர்ஜுன் தாஸின் பக்குவம், சினிமாவில் அவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என விமர்சகர்களின் பாராட்டையும் அர்ஜுன் தாஸ் பெறுகிறார். இது அவரது உழைப்பிற்கும் கதாபாத்திர தேர்வுக்கும் கிடைத்த வெற்றி!
சமத்துவம், சமாதானம், சக மனிதர்களை நேசிப்பவர்களே சாமிக்கு சமம் என்பதுபோன்ற கருத்தை விதைக்கும் ‘பாம்’ போதிக்கும் செய்தி, நெஞ்சை நெகிழச் செய்கிறது என்றால், உண்மையான நட்பைவிட மேலானது இவ்வுலகில் எதுவுமில்லை என்பதை உணர்த்தும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் உயர்ந்து நிற்கிறார்.