தியேட்டரில் 7 நாட்கள் தாங்குமா?… ‘அந்த 7 நாட்கள்’ திரை விமர்சனம்!
யாருக்காவது துர் சம்பவம் நிகழப்போவது நமக்கு முன்கூட்டியே தெரிந்தால் எப்படி இருக்கும்? யோவ்.. இதுமாதிரி எத்தனை படம் வந்திருக்குன்னு கேட்பவர்களிடம் சரண்டராகிட்டு ‘அந்த 7 நாட்கள்’ கதைக்கு வருவோம்.
நாயகன் அஜிதேஜிவிற்கு பின்னாடி நடக்கப்போவது முன்கூட்டியே தெரியும் அபூர்வ சக்தி கிடைக்கிறது. அப்படியா அதை எங்கிருந்து வாங்கினார்னு கிண்டல் பண்ணாம ப்ளீஸ் கதையை கன்வே பண்ண விடுங்க. அஜிதேஜ் ஒரு வானியற்பியல் ஸ்டூடண்ட். ஆராய்ச்சி ஒன்றில் இறங்கியபோதுதான் எக்குத்தப்பா அந்த அபூர்வ ஆற்றல் கிடைக்குது. சரி இதனால பத்து பைசாவுக்கு பிரயோஜனம் உண்டான்னு வம்பிழுக்காம மிச்ச கதையை கேளுங்க பாஸ். நாயகனின் அபூர்வ சக்தி அவருக்கே ஆப்பா அமையது. அதாவது அஜிதேஜின் காதலி ஸ்ரீஸ்வேதாவுக்கு பெரிய ஆபத்து நடக்கப்போகுது என்று ஹீரோவின் கண்ணுக்குள்ள படம் ஓடுது. காதலியை அஜிதேஜ் எப்படி காப்பாத்துகிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
அறிமுகமாக இருந்தாலும் ஹீரோ அஜிதேஜ் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நயகிக்கு மட்டுமல்ல இசைஞானியின் பாடல்களுக்கு காதலனாக இருப்பது, காதலிக்காக எதற்கும் துணியும் துணிச்சல். அதற்காக அவர் நடத்தும் போராட்டம் என அஜிதேஜ் அசத்தல்!
நாயகியாக ஸ்ரீஸ்வேதா. பெரிய பியூட்டி இல்லை என்றாலும் தனது கேரக்டரை உணர்ந்து நடிப்பில் கச்சிதம் காட்ட்டியிருக்கிறார். திறமைதானே உண்மையான அழகு?!. க்ளைமாக்ஸ் சீனில் அவரது உடல் மாற்றம் மற்றும் உடல் மொழியால் பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.
அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ நாராயணன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் ஆகியோர் திரைக்கதையில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் காதல் கதைக்கு ஏற்பவும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை காட்சிகளை தரமாக படமாக்கியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நாயகியின் உருவ மாற்றம் மற்றும் நடிப்பு ஆகியவற்றை படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.
எழுத்து – இயக்கம் எம்.சுந்தர். லவ் ஸ்டோரியை ஃபேண்டஸியுடன் மிக்ஸ் செய்து சொல்வது நல்ல முயற்சி! தெருநாய்கள் கடிப்பது பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கத்தை திரைக்கதையோடு பயணிக்க வைப்பது அதிர்ச்சி!
படம் மொக்கை இல்லை என்றாலும் ‘அந்த 7 நாட்கள்’ அதாங்க தியேட்டரில் ஒரு வாரம் தாங்கினாலே வெற்றிதான்!