‘டூடி’ திரை விமர்சனம்
கிடார் இசைக்கலைஞனான நாயகன் கார்த்திக்மதுசூதனன் ஒரு பெண் பித்தன். கண்ணுக்கு அழகாக இருக்கும் பெண்களை மயக்கி ஆசையை போக்கிக்கொள்ளும் வித்தியாச வாலிபன். பெண்களை இச்சையாக பார்க்கும் கார்த்திக்குக்கு காதல் என்றால் மட்டும் கசப்பு. அதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் கார்த்திக் மீது காதல் கொள்கிறார் நாயகி ஷ்ரிதா. கார்த்திக் பெண் பித்தன் என்று தெரிந்தும், ‘நான் கெட்டவன்தான்’ என்று சொல்லும் அவனது நேர்மை, இசை, ரசனை, சமையல் எல்லாம் சேர்ந்துதான் காத்திக்கை காதலிக்க வைக்கிறது.
தன் வாழ்க்கையில் காதலும் இல்லை கல்யாணமும் இல்லை என்ற கொள்கையுடன் வாழும் கார்த்திக்குக்கு ஒருக்கட்டத்தில் ஷ்ரிதா மீது காதல் மலர்கிறது. அதை ஷ்ரிதாவிடம் தெரிவிக்கும்போதுதான் தனக்கு 5 வருடமாக இன்னொருவன் மீது காதல் இருக்கிறது என்ற உண்மையை உடைக்கிறார் ஷ்ரிதா.
மீண்டும் காதலை வெறுத்து ஷ்ரிதாவிடமிருந்து பிரிகிறார் கார்த்திக். இதற்கிடையே ஏற்கனவே தான் காதலிப்பவனோடு கல்யாணம் நிச்சயமாகிறது ஷ்ரிதாவுக்கு. அந்தக் கல்யாணம் நடந்ததா? கார்த்திக்கின் காதல் பயணம் என்னவாகிறது என்பதே க்ளைமாக்ஸ்.
நாயகன் கார்த்திக் மதுசூதனனுக்கு இது முதல் படம். ஆனால் ஏற்கனவே பல படங்களில் நடித்தது போன்ற அனுபவத்துடன் அசத்துகிறார். கொஞ்சம்கூட காமிரா பயமோ கூச்சமோ அவரது நடிப்பில் காட்டிக்கொள்ளாதது அவரது திறமைக்கு சபாஷ் சொல்லவைக்கிறது. நாயகனாக நடித்ததோடு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். அதிலும் சிக்சர் அடித்துள்ளது சிறப்பு. கனீர் குரல்வளமும் கார்த்திக்கின் பெரிய ப்ளஸ்.
மெதுவாக நகரும் திரைக்கதை, அலுப்பு தட்டவைக்கும் வசனம் என படத்தில் சிறு சிறு குறைகள் தென்பட்டாலும் அடுத்தடுத்த படங்களில் கார்த்திக்கால் ஆகச்சிறந்த திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தருகிறார்.
நாயகியாக ஷ்ரிதா.. ஆஹா அழகு. நடிப்பும் குறையொன்றுமில்லை ரகம். பாலசாரங்கனின் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. பின்னணியில் இரைச்சல் இம்சை.மதன் சுந்தர்ராஜ், சுனில் ஆகிய இரட்டையர்களின் ஒளிப்பதிவும் சாம் ஆர்டி எக்ஸின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம்.
புதுமுகங்கள் சேர்ந்து சமைத்த கூட்டாஞ்சோறு என்றாலும் ‘டூடி’ நல்ல சுவை.