சினிமா செய்திகள்

ஜீவா கலக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ : குடும்ப ரசிகர்களை குறிவைத்த படம்!

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் ஜீவா நடித்திருக்கும்  படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’ . பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். ஜனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் துணை தயாரிப்பாளர் முத்துக்குமரன் பேசியதாவது:-

“இப்படம் ஜனவரி 30 ஆம் தேதிதான் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது நாங்கள் அதற்கு முன்னதாக ஜனவரி 15 ஆம் தேதி அன்று வெளியிடுகிறோம். இந்த படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளை ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கினோம். தை திருநாள் அன்று வெளியிடுகின்றோம். இதற்கு இந்த படக்குழுவினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நடிகர் ஜீவா காலை 7 மணிக்கு முதல் காட்சி என்றால் 6:55 க்கு தயாராக படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்.

படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினர் அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஒன்றிணைந்து பணியாற்றினர். 45 நாட்களில் ஜீவாவின் 45 ஆவது திரைப்படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் படப்பிடிப்பு அவருடைய தலைமையில் சிறப்பாக நிறைவடைந்தது. ” என்றார்.

நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது:-

” டி டி டி ( TTT) என்றால் தி டைம் ஃபார் டிவிஸ்ட் என சொல்லலாம்.  ஜனவரி 30 வெளியீடு என்று சொல்லிவிட்டு, 15ஆம் தேதியே வெளிவருவது மிக்க மகிழ்ச்சி. எந்த ஒரு கலைஞனுக்கும் தான் நடித்த படம் பண்டிகை தினங்களில் வெளியானால் அது மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் மிகவும் கேளிக்கையான படம். ஃபீல் குட் படம் என்றும் சொல்லலாம். ரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை பிரார்த்தனா நாதன் பேசியதாவது:-

” இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. இந்தப் படத்தில் நான் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறேன். என்னுடைய திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் உணர்வு பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்தது தான் இந்த திரைப்படம். இதுபோன்ற அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது:-

” இந்த ஆண்டின் கிளீன் ‘யு’ சர்டிபிகேட் உடன் திரையரங்கத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து ரசிக்கும் வகையிலான தகுதி படைத்த படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் அமைந்திருக்கிறது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

இப்படத்தின் இயக்குநர் நிதிஷ் கதையை விவரிக்கும் போதே அதில் நடிக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது. உயிர்ப்புள்ள கதை தனக்குத் தேவையானதை தானே தேடிக் கொள்ளும் என்பதைப் போல இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர் ஃபாசிலுக்கு பிறகு… இயக்குநர் சித்திக் -லாலுக்கு பிறகு.. இயக்குநர் நிதிஷ் ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டைனரை வழங்கி இருக்கிறார். அவருடைய முதல் தமிழ் படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

இந்த படத்தின் ஜட்ஜ்மெண்டை நடிகர் ஜீவா தீர்மானிக்கிறார். இயக்குநர் நிதிஷ் ஜீவாவை சந்தித்து கதையை சொல்லும் போது.. ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்… ஏராளமான வெற்றி படங்களை வழங்கிய நடிகர்.. ஆகிய அனுபவங்களை தனக்குள் வைத்துக் கொண்டு, இந்த கதைக்குள் தனக்கான பங்களிப்பு என்ன? என்பதை விட… தயாரிப்பாளரின் கோணத்தில் இருந்து இந்த படத்தின் கதையை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜீவா. வெற்றி பெறும் படத்தில் நான் கதாநாயகனாக இருக்கிறேன் என்று உறுதியாக தீர்மானித்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படித்தான் இந்த திரைப்படம் உருவானது அனைவருக்கும் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அதில் தன்னுடைய இருப்பையும் நிலைநிறுத்திக் கொண்ட ஜீவாவை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த எண்ணம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருந்தால் ஓடாத படங்களின் எண்ணிக்கை குறைந்து, ஓடும் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக ஜீவா வெற்றி பெறுவார்.

கல்யாணம் தொடர்பான காட்சிகள் எத்தனையோ படங்களில் இடம் பிடித்திருக்கும். இருந்தாலும் இதில் ஒரு புது வகையான திரைக்கதையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் துபாயில் அமர்ந்து கொண்டு படத்தின் அனைத்து பணிகளையும் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டார். இந்தப் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. அதன் போது எனக்கு ‘மைனா’ திரைப்படம் தான் நினைவுக்கு வந்தது. நானும், பங்காளி இளவரசும் படம் நெடுக வரும் கதாபாத்திரத்தை அனுபவித்து ரசித்து நடித்திருக்கிறோம். ஜனவரி 15ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு யாரும் எந்த ஒரு சிறிய குறையையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என அனைவரும் கொண்டாடுவார்கள்” என்றார்.

நடிகர் ஜீவா பேசியதாவது:-

” தலைவர் தம்பி தலைமையில் உண்மையில் ஒரு மேஜிக்தான். நடிகரும், நண்பருமான வி டி வி கணேஷ் ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்கு வந்து மலையாளத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அந்தத் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முன்பே கேட்டிருந்தார். சில காரணங்களால் அது நடைபெறவில்லை. அந்தப் படத்தின் இயக்குநரும் , இசையமைப்பாளரும் என்னை தொடர்பு கொண்டனர். அந்தப் படத்தின் பாடல்களுக்காகவும், பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்க்கு நான் பாராட்டு தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தமிழிலும் பணியாற்றுங்கள் என கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இயக்குநர் ஒருநாள் என்னை சந்தித்து கதையை சொன்னார்.

அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பம்… அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பிரச்சனை… நீங்கள் நடுவராக இருந்து அந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வை கொடுக்கிறீர்கள்? என்பதுதான் கதை என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு உடனே பிடித்திருந்ததாலும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.  அவரது இயக்கத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தில் நடிகர் பசில் ஜோசப் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு பசில் ஜோசப் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்தார்.

இந்த இயக்குநர் மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. முதலில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை கம்பம் பகுதிக்கு மாற்றினோம். அங்கே அரங்கம் அமைத்து 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. அதனையும் உருவாக்கினோம்.

சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு ஆனால் தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது. என்னுடைய 45 ஆவது படத்தில்.. 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் புது முகங்கள் அனைவரும் ஏற்கனவே யூட்யூப் மூலமாக பிரபலமானவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அவர்களுக்கு ஏற்ற வகையிலும் திரைக்கதையும், வசனங்களையும் அமைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்த படத்தில் ஏராளமான யங் எனர்ஜி இருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் அனைவருடைய கண்களிலும் கண்ணீர். நடிகர்கள் மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்திருந்த அந்த ஊர் மக்களும் கண்ணீர் விட்டனர். படக்குழுவினரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர். இயக்குநர் நிதிஷ் எழுதிய இந்த கதையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாங்கள் திரையில் கதாபாத்திரத்தை உணர்த்து தீவிரமாக நடித்துக் கொண்டிருப்போம். ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் ‘இப்படி எல்லாம் நடக்குமா..! ‘ என ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.

தம்பி ராமையா, இளவரசு என எல்லோரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக பணியாற்றி இருக்கிறார்கள்.‌ இந்த படத்தில் பணியாற்றிய போது என்னுடைய சின்ன சின்ன ஆலோசனையும் இயக்குநருக்கு வழங்கினேன். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு புது முயற்சி.. ஒரு புது ட்ரீட்மென்ட்… புது வகையிலான நெரேட்டிவ்…வருணன் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். உண்மையாக உழைத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

ஜனவரி 30 ஆம் தேதி தான் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் எங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நடிகர் விஜய் ஏராளமான தயாரிப்பாளர்கள்- தொழில்நுட்ப கலைஞர்கள்- நடிகர்களுக்கு- பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பு நிறுவனம் ஏழு எட்டு திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. அதனால் எங்களுடைய ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கிறது. அதனால் நாங்கள் எப்போதும் போல் விஜயின் ஜனநாயகன் படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்தப் படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை துபாய் தமிழ் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக என்னுடைய தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியை தேர்வு செய்திருந்தார்கள். அந்த தமிழ் சங்கத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி விளம்பரதாரர் என்பதால்.. அவரை நேரில் சந்தித்தோம். அந்தத் தருணத்தில் இளம் திறமைசாலிகள் கொண்ட குழு இருக்கிறது. அவர்களை வைத்து இப்படி ஒரு காம்பாக்ட் பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்கு விருப்பமா? எனக் கேட்டோம். உடனே அவர் தாராளமாக செலவு செய்து நல்லதொரு படத்தை உருவாக்குங்கள் என மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். அவருக்கும் அவருடைய வாரிசு தீபக் ரவி அவர்களுக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிறுவனம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE