திரை விமர்சனம்

 ‘ட்ரிகர்’ திரை விமர்சனம்

அதர்வா ஒரு ஆக்‌ஷன் சிங்கம். அவருக்காகவே அளவெடுத்து செய்தது போன்ற கதையை கனகச்சிதமாக செதுக்கி ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கு அன்லிமிட்  விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆண்டன்.

காவல் துறையில் வேலை பார்க்கும் அதர்வாவுக்கு கடமையும் நேர்மையும் இரு கண்கள். பணியில் செய்த சிறு தவறுக்காக அண்டர் கவர் டீமுக்கு தூக்கியடிக்கப்படுகிறார் அதர்வா. யாருமே இல்லாத கடையில் டீ ஆத்தும் ஹோட்டல் ஒன்றுதான்  அண்டர் கவர் டீமின் ஆபீஸ். காவல் துறையின் கருப்பு ஆடுகளை கண்கானிக்கும் வேலையை செய்யும்போதுதான் பெண் கடத்தலை கண்டுபிடிக்கிறார் அதர்வா. அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று லோக்கல் தாதாக்கள் ஏரியாவில் மூக்கை நுழைக்கும்போதுதான் அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருக்கின்றது. அது என்ன ? அதர்வா அந்த அதிர்ச்சி முடிச்சிகளை எப்படி அவிழ்க்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

இதற்குமுன் குழந்தை கடத்தலை மையமாக கொண்ட படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் ‘ட்ரிகரின்’ திரைக்கதை கொஞ்சம் புதுசா ஒரு தினுசா இருப்பது படத்துடன் ஒன்றவைக்கிறது.

முதல் வரியில் சொன்னதுபோல ஆக்‌ஷன் கதைக்கு எப்போதுமே செம ஃபிட்டாக பொருந்துகிறார் அதர்வா. வில்லன் ஏரியாவிலேயே புகுந்து வீடு கட்டி அடிக்கும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது. கர்லிங் புஜங்களும் கர்ஜிக்கும் கண்களுமாக வெளுத்து வாங்கியிருக்கும் அதர்வாவுக்கு வெல்டன்.

ஆதரவற்ற குழந்தை காப்பகத்தை நடத்தும் கருணை மனம் கொண்டவராக நாயகி தான்யா ஆஹா அழகு. ஆனால் நடிப்பதற்கு கதையில் பெரிய சந்தர்ப்பம் இல்லாதது ஏமாற்றம்.

சிறையில் இருந்தபடி கேடித்தனம் செய்யும் வில்லனாக பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் ஷெட்டி மிரட்டினாலும் மிகையான நடிப்பு அப்பட்டமாக தெரிகிறது.  வேற சாய்ஸ் கிடைக்கலையா டைரக்டர் சாரே?..

அல்சைமர் நோயால் அவதிப்படும் கதாபாத்திரத்தில் அதர்வாவின் தந்தையாக வரும் அருண்பாண்டியன் இயல்பாக செய்திருக்கிறார். அதர்வாவின் அம்மாவாக சீதா, போலீஸ் கமிஷனராக அழகம் பெருமாள் கொடுத்த வேலையை கெடுக்காமல் செய்திருப்பதே சிறப்பு.

அண்டர்கவர் டீமில் இருக்கும் முனிஷ்காந்த், நிஷா, சின்னிஜெயந்த் மூவரில் சின்னி மட்டும் மின்னியிருக்கிறார். திலீப் சுப்பராயணின் சண்டை பயிற்சி மிரட்டல். ஜிப்ரானின் பின்னணி இசையும், கதைக்கேற்ற லைட்டிங்கில் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் ’ட்ரிகரின்’ இரு தோட்டாக்கள்.

ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு ஊரையே கண்காணிப்பது; வில்லன் போகும் இடங்களை ட்ரேஸ் செய்வதெல்லாம் லாஜிக் சறுக்கல். போகிற போக்கில் குழந்தை இல்லாத தம்பதிகள் தத்தெடுத்து வாழ்தல் நிம்மதி என்று கருத்து சொல்வதெல்லாம் செயற்கை.

சிறுசிறு குறைகள் இருப்பினும் ‘ட்ரிகர்’ செம ஸ்பீடுதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE