திரை விமர்சனம்

‘காளிதாஸ் 2’ திரை விமர்சனம்

ஓபன் பண்ணினா.. போலீஸ் இன்ஸ்பெக்டரான பரத்திற்கு ஒரு போன் வருகிறது. எதிர்முனையில் “சார் சீக்கிரம் வாங்க சார்.. காப்பாத்துங்க சார்..” என நடுக்கமும் பதற்றமும் நிறைந்த பெண்ணின் குரல்.   “தைரியமா இருங்க வந்துட்டே இருக்கேன்”.. என்று அந்த இடத்தை நோக்கி செல்கிறார் பரத். அங்கே போவதற்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கொலையுண்டு கிடக்கிறார்கள்.

இந்த கேஸ் ஒரு பக்கம் இருக்க, அடுக்குமாடி குடியிருப்பில் 4 வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போகிறது.  விசாரணையில் இறங்கும் பரத்திற்கு மேலிடத்து நெருக்கடி ஒரு பக்கம்,  குழந்தை பற்றிய துப்பு கிடக்காதது மறுபக்கம் என டென்ஷன் ஏறுகிறது. கடைசியில் குழந்தையை பிணமாகவே மீட்க முடிகிறது. கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதற்கு விடை தருகிறது விறுவிறு  திரைக்கதை!

பொது போலீஸ் உடுப்பு போடும் ஹீரோக்கள் விறைப்பும் முறைப்புமாக இருப்பார்கள். ஆனால் நெருக்கடியான நிலையிலும் பதட்டமில்லாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் போலீஸ் அதிகாரியாக கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருத்திக்கொண்டிருக்கிறார் பரத்.

உதவி கமிஷனர் வைஷ்ணவியாக பவானி ஸ்ரீ. செம ஃபிட் ஆபிஸராகவும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸராகவும் வந்து மிரட்டுகிறார். ஆனாலும் எப்ப  பார்த்தாலும் முறுக்கு கம்பி மாதிரி முறுக்கிக்கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.

ஜூனியர் வக்கீல் ஸ்டீபனாக வரும் அஜய் கார்த்திக்கு அதிக வசனம் இல்லை. ஆனாலும் தோற்றத்தில் பார்வையில் பேசவைக்கிறார். கேரக்டருக்காக இன்னும் மெனக்கெட்டால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம். 90களின் இறுதியில் இளைஞர்களின் இதயம் ஈர்த்த சங்கீதா நீண்ட இடைவேளைக்குப்  பிறகு எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம்.

பிரகாஷ்ராஜ், அபர்ணதி, அனந்த் நாக், கிஷோர் ஆகியோருக்கும் அதிகம் வேலை இல்லை என்றாலும் அவரவர் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு அபார்ட்மென்ட்டைப் பல கோணங்களில் வட்டமடிப்பது, லாங் ஷாட், டிரோன் ஷாட் என அட்டகாசம். புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு சாம் சி.எஸ்-ஸின் இசை போன்ற தொழில்நுட்பங்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

காணாமல் போகும் குழந்தை, அபார்ட்மென்ட் வாசிகள் மீது திரும்பும் சந்தேகப் பார்வை, அலைக்கழிக்கும் விசாரணை என ஒரு பரபர பாக்கெட் நாவல் டெம்ப்ளேட்டில் சரியாகப் பொருந்துகிறது அரவிந்தன் ஆனந்த்தின் திரைக்கதை.

மொத்தத்தில் ‘காளிதாஸ் 2’ ஒருமுறை பார்க்கலாம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE