ஃபிரேம் பை ஃபிரேம் பிரமாதப்படுத்துகிறார் நட்டி: ‘TN 2026’ திரை விமர்சனம்!
கோடை வெப்பம் போலவே அரசியல் களமும் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில் அரசியல் நையாண்டி செய்ய அதிரடி எண்ட்ரி கொடுத்திருக்கும் படம் ‘TN 2026 தங்க நட்சத்திரம்’.
கதை…
குல்கந்த் குமார் (நட்டி) என்ற வட நாட்டு இளைஞன் பிழைப்புக்காக சென்னை வருகிறார். தப்பும் தவறுமாக தமிழ் பேசும் அவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. முதல் படமே ஹிட். அடுத்த எம்ஜிஆராகும் தகுதி குல்கந்த் குமாருக்கு இருப்பதாக நம்பும் ஆயிரம் ஏக்கருக்கு அதிபதியான தம்பி ராமையா, குல்கந்த் குமார் வளர்ச்சிக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்கிறார் குல்கந்தும் உச்ச நட்சத்திரமாக வளர்கிறார்.
அடுத்து என்ன?
அடுத்த முதல்வர் நீதான் என குல்கந்த் குமாருக்கு அரசியல் ஆசையூட்டி அதற்கான வேலைகளை செய்கிறார் தம்பி ராமையா? குல்கந்த் குமார் முதல்வராகிறாரா? இல்லையா? என்பதை அறிய குல்கந்த் குமாரை ஸாரி ‘TN 2026’ பாருங்கள்!

நட்டி..
நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிப்பில் அடித்து ஆடியிருக்கிறார் நட்டி. அதிலும் சினிமாவில் எண்ட்ரி போடும் ஆரம்பக் காட்சிகள் அதகளம். அவரது உடல்மொழி, கெட்டப், தமிழ் பேசுவதில் இருக்கும் தகராறு அதற்கேற்ற வசனம் என ஃபிரேம் பை ஃபிரேம் பிரமாதப்படுத்துகிறார் நட்டி.
இரண்டாம் பாதி படத்தில் ‘அமைதிப்படை’ அமாவாசையையும், ’சதுரங்க வேட்டை’ காந்தி பாபுவையும் கலந்துக்கட்டி காட்டும் நடிப்பும் சிறப்பு. பாராட்டுகள் நட்டி!
தம்பி ராமையா..
படத்தின் கதை, வசனம் எழுதியிருப்பதுடன் ஆயிரம் ஏக்கருக்கு அதிபதி கதாபாத்திரத்திலும் அடித்து நொறுக்கியிருக்கிறார் தம்பி ராமையா. பணக்கார முறுக்கும் நடையில் செறுக்கும் நட்டியின் வளர்ச்சிக்குப் பிறகு அவரின் பாதம் தாங்கியாக மாறுவதும் செம. கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாக படம் முழுக்க தம்பி ராமையாவின் இன்னிங்ஸ் அமைந்திருக்கிறது.
மற்றவர்கள்..
தம்பிராமையாவின் கொடுக்குகளாகவும் அமைச்சர் பதவி ஆசையில் ஆடும் ஆட்டமும் என எம்.எஸ்.பாஸ்கர் மற்ற்றும் இளவரசு இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். குல்கந்த் குமாரின் தீவிர ரசிகராக ரெடின் கிங்ஸ்லி வரும் ஏரியாவும் கலகல. ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் என படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் ஆனால் மூவருக்குமே அதிக வேலை இல்லை.

தொழில்நுட்பம்..
ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் களத்திற்கும் பொருத்தமான லைட்டிங் செய்து ஒளிப்பதிவால் படத்திற்கு பலமூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.
தர்புகா சிவாவின் இசையில் ஒரு டூயட் பாடல் சூப்பர் மெலடி. பின்னணி இசையிலும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் தரம்.
அப்பா எழுதிய கதை, வசனத்திற்கு திரைக்கதை தீட்டி இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா. ’சதுரங்க வேட்டை’ நட்டியை திருப்பிக்கொடுத்த ஒன்றே இவரது இயக்க திறமைக்கு சான்று. ‘அமைதிப்படை’ அளவுக்கு இல்லையென்றாலும் அதில் பாதியளவுக்காவது கொடுத்துவிடவேண்டும் என்ற முயற்சிக்காகவே பாராட்டலாம்.
பெரும்பாலும் விஜயின் சினிமா பயணம், அரசியல் எண்ட்ரியையும் அவரது தற்போதைய சூழலையும் நட்டியின் கேரக்டர் மற்றும் கெட்டப் வழியாக பூடமாக சொல்லியிருந்தாலும் க்ளைமாக்ஸில் அப்பட்டமாய் ரஜினியின் அரசியல் முடிவை கண்முன் நிறுத்தும் காட்சிக்கும், சந்தடி சாக்கில் கமலையும் இழுத்துக்கோர்த்துக்கொள்ளும் இடத்திற்கும் விழுகிறது அப்ளாஸ்!
குறை..
காலக்கட்டங்கள் லாஜிக் எரருடன் தாவுவதும், இரண்டாம் பாதி கதை பாதை மாறிவதும் தடுமாறுவதும் படத்தின் குறைகள்.
இருப்பினும் ‘TN 2026’ கொடுத்த காசுக்கு வொர்த்!
RATING
![]()

