சினிமா செய்திகள்

தமிழ் படம் தயாரிக்கும் தல தோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி  சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது.

 

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. ‘ வுமன்’ஸ் டே அவுட் ‘ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

 

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

 

தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

 

தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ”சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.” என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார். மேலும் “இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது. என்று ரமேஷ் தமிழ்மணி கூறுகிறார்.

 

தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் வணிகப்பிரிவு தலைவரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், ” கொரோனா தொற்றுப் பாதிப்பிற்குப் பிறகு இந்தியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் வணிகம் என்பது விரிவாக்கம் அடைந்திருக்கிறது..எல்லைகளற்ற அதாவது பிராந்திய சினிமாவிற்கும், இந்தி சினிமாவிற்கும் இடையேயான விவாதம் இல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள், வட மாநிலங்களிலும் சமமாக கொண்டாடப்படுவதால், தோனி என்டர்டெய்ன்மெண்ட், தன்னை மொழி சார்ந்த தயாரிப்பு நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இந்திய பார்வையாளர்களை, அர்த்தமுள்ள கதைகளின் மூலம் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை. எங்களின் முதல் படம் தமிழில் தான் உருவாகும் என்றாலும், பல மொழிகளில் வெளியாகும்” என்றார்.

 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் படைப்புத்திறன் பிரிவுத் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில், ” கதை தான் நாயகன் என நாங்கள் நம்புகிறோம். தோனி என்டர்டெய்ன்மெண்டில் வித்தியாசமான மற்றும் அழுத்தமான உள்ளடக்கத்தை கொண்ட கதைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், அதற்கேற்றக் கதாபாத்திரங்களும், உண்மையான சித்தரிப்புகளும், சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் படைப்புகள், திரைப்படங்களாக உருவாகும் போது பார்வையாளர்களின் இதயத்தை வெல்லும். இதைப் போன்ற யதார்த்தமான படங்களை உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE