காதல்… தனிமை… கொஞ்சம் கடல்.. ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ விமர்சனம்!
தனிமை என்பது சிலருக்கு அமைதி. சிலருக்கு தண்டனை. இன்னும் சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும். அப்படியொரு தனிமைக்குள் சிக்கித் தவிக்கும் மனிதனின் வாழ்க்கைக்குள், எதிர்பாராத ஒரு உறவு நுழைந்தால் என்ன ஆகும்? அந்தக் கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.
அம்மாவை சிறுவயதிலேயே இழந்துவிடுகிறார் ஆண்டனி. அப்பாவின் அரவணைப்பும் கிடைக்கவில்லை. அன்புக்காக ஏங்கிய அந்தச் சிறுவன், வளர்ந்ததும் தனிமையைத் துணையாகவும், மதுவை நண்பனாகவும் மாற்றிக்கொள்கிறான். காதல், திருமணம் போன்ற பந்தங்களில் நம்பிக்கை இல்லாத அவர், தினமும் ஒரு பாலியல் தொழிலாளியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். உடலுக்காக அல்ல… மனம் விட்டுப் பேசுவதற்காக!
அப்படியொரு இரவில் அவரது வீட்டுக்குள் வருகிறார் மதுமிதா தாஸ். வந்தவர் பேசுகிறார்… ஆண்டனி கேட்கிறார். அந்தப் பேச்சு இருவருக்கும் பிடித்துப்போக, அடுத்தடுத்த நாட்களிலும் மதுமிதாவையே அழைக்கிறார் ஆண்டனி. வாடிக்கையாளர் – தொழிலாளி என்ற உறவு மெல்ல மாறி, நட்பாகி, காதலாகிறது.

தனிமையில் வாடிய ஆண்டனியின் வாழ்க்கைக்குள் மதுமிதாவின் வருகை ஒரு வசந்தம். இருவரும் சேர்ந்து வாழத் தொடங்க, வாழ்க்கையும் அழகாக நகர்கிறது. ஆனால் ஆண்டனியின் மதுப்பழக்கம் காதலுக்குள் பூகம்பமாக நுழைகிறது. பிரியும் இருவரும் மீண்டும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பெரும்பாலான காட்சிகள் ஆண்டனி, மதுமிதா இருவரின் உரையாடல்களாலேயே நகர்கின்றன. அதனால் இருவரது நடிப்பும் படத்துக்கு மிக முக்கியம். முதல் படமென்றாலும், டி.ஆண்டனி கதாபாத்திரத்தின் மனநிலையை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார். பெரிய ஆக்ஷன், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், சின்னச் சின்ன முகபாவனைகளிலேயே அவரது தனிமையை வெளிப்படுத்துகிறார்.
மதுமிதா தாஸுக்கு தமிழ் தெரியாது. இதையே கதைக்குள் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பெங்காலிப் பெண்ணாக வரும் அவர், படம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசுகிறார். இடையிடையே கஷ்டப்பட்டு பேசும் தமிழ் வார்த்தைகள் ரசிக்க வைக்கின்றன. அவரது இயல்பான நடிப்பும், குழந்தைத்தனமான பேச்சும் கதாபாத்திரத்துக்கு தனி அழகு.
பியேட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு படத்துக்கு இயல்பான தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அதிகப்படியான விளக்குகளுக்கு வேலை கொடுக்காமல் இயற்கை ஒளியில் காட்சிகளைப் பதிவு செய்திருப்பது கதையுடன் நம்மை ஒன்ற வைக்கிறது. குறிப்பாக கடற்கரை, படம் முழுவதும் ஒரு கதாபாத்திரம் போலவே பயணிக்கிறது.

ஜெய்கர் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசையில் பாடல்கள் திரைக்கதையோடு பயணிக்கின்றன. ஜோயி ரெடாவின் பின்னணி இசை, கதாபாத்திரங்களின் சொல்லப்படாத உணர்வுகளுக்கு குரல் கொடுக்கிறது.
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, நடிப்பு எனப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கும் டி.ஆண்டனி, எளிமையான காதலை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். பாலியல் தொழிலாளிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே உருவாகும் காதல் என்ற வித்தியாசமான களத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது சுவாரஸ்யம்.
ஆனால்… படம் கொஞ்சம் நீளமாகிவிட்டது. இருவரும் பேசிக்கொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது. அதோடு படம் முழுவதும் ஆங்கில வசனங்கள் வருவது தமிழ் ரசிகர்களுக்கு சில இடங்களில் நெருடலாக இருக்கிறது. ஆங்கில சப்-டைட்டிலும் அதற்கு பெரிய உதவியாக இல்லை!
குறிப்பாக கிளைமாக்ஸை நெருங்கிவிட்டோம் என்று நினைக்கும் நேரத்திலும் மீண்டும் மீண்டும் கடற்கரையைச் சுற்றி வருவது, ‘இன்னும் எவ்வளவு நேரம்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.
இவற்றையெல்லாம் கொஞ்சம் கத்தரித்திருந்தால், இந்தக் காதல் இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும்.
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ — தனிமையில் இருக்கும் இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று தேடிக்கொள்ளும் எளிய காதல் கதை. குறைகளைக் கடந்து பார்த்தால்… இந்தப் படம் நம்மையும் ஏதோ செய்துவிடுகிறது!

