‘பனாரஸ்’ திரை விமர்சனம்
பான் இந்தியா படமாக ஹிஸ்டாரிக்கல், ஃபேண்டசி படங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் காதல் கலந்த டைம் லூப் கதையை பான் இந்தியா படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.
கதை…
நண்பர்கள் சொல்லும் சவாலை ஏற்று முன்பின் அறிமுகம் இல்லாத நாயகி சோனல் மோன்டிரோவை தனது வசீகர பேச்சால் கவர்ந்து சோனலின் படுக்கை அறைவரை போகிறார் நாயகன் ஜயித்கான். அப்போது சோனலுடன் நெருக்கமாக இருப்பதுபோன்று செல்போனில் படமெடுத்து சவாலில் ஜெயிக்கிறார். ஆனால் விளையாட்டுத்தனமாக எடுக்கும் அந்த படம் சமூக ஊடகத்தில் வைரல் ஆக, நாயகியின் படிப்பு, எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது. இதனால் பனாரஸில் இருக்கும் தனது சித்தப்பா வீட்டுக்குச் செல்கிறார். தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே வீணாகிவிட்டதே என வருந்தும் ஜயித்கான், சோனலிடம் மன்னிப்பு கேட்பதற்காக பனாரஸ் செல்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களே மிச்ச கதை.
அறிமுக நாயகன் ஜயித்கானுக்கு இது முதல் படம் என்று தெரியாத அளவிற்கு தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி சோனலிடம் தான் ஒரு டைம் டிராவலர், நீ என் காதல் மனைவி, 2023இல் நமக்கு ஒரு குழந்தை பிறக்கும் என கதைவிட்டு கவர்வது, தன்னால் சோனல் பாதிக்கப்பட்ட குற்ற உணர்வில் தவிப்பது, பாடல் காட்சிகளில் ரொமான்ஸ் செய்வது என நடிப்பின் அத்தனை ரசமும் ஜயித்கானுக்கு வசப்படுகிறது.
நாயகி சோனல், ப்ரியா பவானிசங்கர் சாயலில் இருக்கிறார். பல காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவனையை வெளிப்படுத்துவது சலிப்பு. படம் முழுக்க ஹோம்லியான லுக்கில் வருபவர், ஒரு பாடல் காட்சியில் கிளாமராக கிக் ஏற்றி கிறங்கடிக்கிறார்.
பனாரஸில் ஜயித்கானுக்கு நண்பராக அமையும் காமெடியன் சுஜய் சாஸ்திரி, சில இடங்களில் மட்டும் சிரிக்கடிக்கிறார் பெரும்பாலும் காமெடி பெயரில் வெறுப்படிக்கிறார். நாயகனின் தந்தையாக தேவராஜ், நாயகியின் சித்தப்பாவாக வரும் அச்யுத்குமார் ஓகே ரகம்.
அஜனீஷ் லோகநாத் இசையில் ”மாய கங்கா” பாடல் மனதை வருடுகிறது. அத்வைத குருமுர்த்தி ஒளிப்பதிவில் காசியின் அழகும், காதலர்கள் சந்திக்கும் இடமும் கண்கொள்ளா காட்சி. இரண்டு மணி நேரம் இருபது நிமிட படம் என்றாலும் இரண்டு படங்கள் பார்ப்பதுபோன்ற அலுப்பை தருகிறது நத்தை போல் நகரும் திரைக்கதை. நாயகன் டைம் லூப்பில் சிக்கிக்கொண்டு ரிப்பீட் ஆகும் காட்சிகளும் சலிப்பை தருகிறது. டைம் லூப்பை கைவிட்டு காதலை மட்டும் அழுத்தமாக சொல்லியிருந்தால் ‘பனாரஸ்’ பட்டாக பளபளத்திருக்கும்.