திரை விமர்சனம்

‘மண்டாடி’ திரை விமர்சனம்!

கடல்… அதில் வாழ்பவர்களுக்கு அது வெறும் நீர்ப்பரப்பு அல்ல; வாழ்க்கை, பிழைப்பு, பெருமை, போட்டி என அத்தனையுமே கலந்த ஒரு உலகம். அந்த  உலகத்துக்குள் இருபது ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் பழைய பகையையும், பாரம்பரிய படகுப் போட்டியையும் இணைத்தால்  ‘மண்டாடி’ கதை ரெடி!

அந்த மீனவ கிராமத்தை சேர்ந்த முத்துக்காளி (சூரி), சட்டாப்புலி (சுஹாஸ்) இருவரும் ஒரு காலத்தில் உயிர் நண்பர்கள். திறமையான படகோட்டிகளாக இருந்த இவர்களின் நட்பு, ஒரு கசப்பான சம்பவத்தால் முறிந்துவிடுகிறது. நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாகிறார்கள். கிராமமே இரு அணிகளாகப் பிரிகிறது. காலம் கடந்து போனாலும் பகை மட்டும் ஓயாத அலையாக வீசுகிறது.

நீரு பூத்த நெருப்பாக இருக்கும் அந்த பகை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் கண் விழிக்கிறது. ஒரு படகுப் போட்டி, இருவரையும் மீண்டும் நேருக்கு நேர் நிறுத்துகிறது. முத்துக்காளி ஏன் படகோட்டுதலை விட்டார்? சட்டாப்புலியின் அதிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன? இந்த இருவரையும் மீண்டும் மோத வைத்தது எது? – இவற்றுக்கான விடைகள்தான் படத்தின் மையம்.

படத்தின் மிகப்பெரிய பலம் களம்.   கடலோடு போராடி வாழும் மனிதர்களின் உலகத்தை செயற்கைத்தனம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பாரம்பரிய பாய்மர படகு போட்டியை மையமாக வைத்திருப்பது புதுமை. தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் கிரிக்கெட், கபடி, கார் ரேஸ் வரிசையில் அல்லாமல், படகுப் போட்டியை வைத்து கதையை நகர்த்தியிருப்பது கவனம் ஈர்க்கிறது.

சூரி, மீண்டும் ஒருமுறை தனது நடிப்புப் பாதையை வேறு திசையில் திருப்பியிருக்கிறார். முத்துக்காளியாக அவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருப்பது கதாபாத்திரத்துக்குப் பெரிய பலம். சில இடங்களில் வசனங்களை விட அவரது பார்வையும் மௌனமுமே அதிகம் பேசுகின்றன. குறிப்பாக, பழைய காயங்களை மனதுக்குள் சுமந்துகொண்டு வாழும் மனிதனின் வலியை அவர் நிதானமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோவுக்கான பெரும் உழைப்பையும் அநாயசமாக செய்திருக்கும் சூரி சில இடங்களில் நெகிழவும், கலங்கவும் வைக்கிறார். குறிப்பாக தனது முன்னாள் காதலி முன் மண்டியிட்டு “என்ன மன்னிச்சிரு தாயி” என்று உருகும் இடத்தில் சூரி பிரமாதம்.

சுஹாஸ், எதிர்மறை நிழல் படிந்த சத்தப்புலியாக மிரட்டுகிறார். குரலிலும் உடல்மொழியிலும் இருக்கும் அந்தக் கம்பீரம், கதாபாத்திரத்தின் அதிகாரத் தன்மையை நன்றாகக் கடத்துகிறது. சூரி–சுஹாஸ் இருவருக்கும் இடையிலான வார்த்தைப் போரும், நேருக்கு நேர் மோதல்களும் படத்துக்கு நல்ல விறுவிறுப்பைக் கொடுக்கின்றன.

மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த இடத்தை நிறைவு செய்கிறார்கள். சத்யராஜுக்கு இன்னும் கொஞ்சம் வலுவான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம்  எழுகிறது.

படத்தின் முதல் பாதி தெளிவான இலக்குடன் பயணிக்கிறது. கதாபாத்திரங்களையும் அவர்களின் பின்னணியையும் நன்றாக நிறுவிவிட்டு, இடைவேளைக்கு முன் சுவாரஸ்யமான முடிச்சைப் போடுகிறது. படகுப் போட்டிக் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் அந்த வேகம் கொஞ்சம் தண்ணீரில் விழுந்த படகைப் போல மெதுவாகிறது! ஆரம்பத்தில் இருந்த புதுமையும் பதற்றமும் குறைந்து, சில காட்சிகள் வழக்கமான சினிமா பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றன.

குறிப்பாக, முத்துக்காளி–சட்டாப்புலி இருவருக்கும் இடையிலான பழைய நட்பையும், அது எப்படி பகையாக மாறியது என்பதையும் இன்னும் ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். இருவரின் கடந்த கால உணர்வுகள் வலுவாகச் சொல்லப்பட்டிருந்தால், இறுதிக்கட்ட மோதல் இன்னும் நம்மைத் தாக்கியிருக்கும். இங்கேதான் திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது.

படகுப் போட்டி காட்சிகள் நன்றாக இருந்தாலும், அவற்றில் இன்னும் சில எதிர்பாராத திருப்பங்களும் புத்திசாலித்தனமான உத்திகளும் இருந்திருந்தால், கிளைமாக்ஸ் வேற லெவலுக்குப் போயிருக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக படம் கைகொடுக்கிறது. எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு கடலின் கரடுமுரடான அழகை நன்றாகப் பதிவு செய்திருக்கிறது. அலைகளின் வேகம், படகுகளின் பாய்ச்சல், கடலோர மக்களின் வாழ்க்கை என காட்சிகள் இயல்பாக இருக்கின்றன. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை குறிப்பாக போட்டி மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு வேகம் சேர்க்கிறது. பிரதீப் இ. ராகவின் படத்தொகுப்பு பெரும்பாலும் கச்சிதம் என்றாலும், சில இடங்களில் கத்தரி இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, வழக்கமான விளையாட்டுக் கதையைத் தேர்ந்தெடுக்காமல், படகுப் போட்டி என்ற வித்தியாசமான களத்தைத் தேர்ந்தெடுத்ததற்கே பாராட்டப்பட வேண்டியவர். கடல், விளையாட்டு, கௌரவம், பழைய பகை என நல்ல கலவையை உருவாக்கியிருக்கிறார். ஆனால், இந்தக் கலவையை இரண்டாம் பாதியிலும் அதே வீரியத்துடன் கையாண்டிருக்கலாம்.

சூரியின் அமைதியான நடிப்பு, சுஹாஸின் மிரட்டல், கடலோர வாழ்வியல், படகுப் போட்டிக் காட்சிகள் ஆகியவை படத்தைப் பார்க்க வைக்கின்றன. அதேநேரம், கணிக்கக்கூடிய இரண்டாம் பாதியும், முழுமையாக விரிவுபடுத்தப்படாத உணர்வுபூர்வமான மோதலும் படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன.

‘மண்டாடி’க்கு வெற்றி நிச்சயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE