திரை விமர்சனம்

சமூக மனசாட்சியையே கேள்வி கேட்கும் படைப்பு ‘என்ன விலை’ விமர்சனம்!

ராமேஸ்வரம் கடற்கரையில் தொடங்குகிறது கதை.

தவசிமுத்து (கருணாஸ்) ஒரு மீனவர். கடலில் மூழ்கி சங்கு, முத்து எடுப்பதோடு, அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் வீசியெறியும் காசு, பொருள்களைத் தேடி எடுத்து விற்று வாழ்க்கையை ஓட்டுபவர். வறுமை இருந்தாலும் நேர்மையை மட்டும் அடமானம் வைக்காதவர்.

ஒருநாள் கடலுக்குள் கிடக்கும் பளபளப்பான பதக்கம் ஒன்றைக் கண்டெடுக்கிறார். அது விலைமதிப்புள்ள பொருள் என்பதை உணர்ந்து, தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் போலீஸிடம் ஒப்படைக்கிறார். அங்கேதான் தவசிமுத்துவின் சோதனை ஆரம்பமாகிறது.

அந்தப் பதக்கத்தில் தங்கமும் வைரமும் இருப்பதை அறிந்த போலீஸ்காரர் வரதராஜன், ஆசைக்கு அடிமையாகிறார். வைரக்கல்லை மட்டும் உருவிக் கொண்டு, பதக்கத்தைத் தவசிமுத்துவிடம் திருப்பிக் கொடுக்கிறார். வைரத்தை விற்றுப் பணத்தை போலீஸாருக்குள் பங்கு போடுகிறார்.

ஆனால்திருடியவன் யார் என்ற கேள்வி எழும்போது, நேர்மையான தவசிமுத்துவே திருடன் ஆக்கப்படுகிறார்! அதன்பிறகு லாக்கப், சித்திரவதை, பொய் வழக்கு, அவமானம்

ஒரு ஏழை மனிதனைச் சட்டத்தின் பெயரால் எப்படியெல்லாம் நசுக்க முடியும் என்பதைக் காட்சிக்குக் காட்சி காட்டுகிறது படம். இந்த நேரத்தில்தான் வழக்கறிஞர் காஞ்சனா (நிமிஷா விஜயன்) களமிறங்குகிறார்.

தவசிமுத்து நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான அவரது சட்டப் போராட்டம், ஒரு தனி மனிதனுக்கான வழக்காகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக இந்த அமைப்பையே கேள்வி கேட்கும் போராட்டமாக மாறுகிறது.

குற்றம் செய்யாதவனை குற்றவாளியாக்கிவிட்டால்அவன் இழந்த மானத்துக்கு என்ன விலை?’

இந்தக் கேள்விதான் படத்தின் முதுகெலும்பு.

படத்தின் முதல் பாதி ராமேஸ்வரத்தின் கடற்கரையோர வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. மீனவர்கள், கடல், குடும்பம், வறுமை என நெய்தல் நில மக்களின் வாழ்வியலை இயல்பாகப் பதிவு செய்கிறது.

பின்னர் கதை திடீரென நகைத் திருட்டு வழக்காகத் திரும்புகிறது.

அதன்பிறகுகடலில் கிடைத்த பொருள் யாருக்குச் சொந்தம்?’ என்ற கேள்வி எழுகிறது. தொல்பொருள் துறையா? கலைத் துறையா? கருவூலமா? சுங்கத் துறையா?

இப்படிக் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழ, படம் ஒரு கட்டத்தில் புதையல் வேட்டை சாயலைப் பெறுகிறது. இடைவேளைக்குப் பிறகு கதை முழுக்க நீதிமன்றத்துக்குள் நுழைகிறது.

அங்கே நடக்கும் சட்ட விவாதங்களும் தர்க்கங்களும் படத்துக்கு வேறு வேகத்தைத் தருகின்றன. ஒரு தனிமனிதனின் பிரச்சனை எப்படி சமூகப் பிரச்னையாகவும், பின்னர் நாட்டையே உலுக்கும் பிரச்னையாகவும் மாறுகிறது என்பதை திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.

தவசிமுத்துவாக கருணாஸ். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு பாத்திரம்.வெளியில் பார்க்கும்போது எளிதில் சந்தேகப்படக்கூடிய தோற்றம். ஆனால் உள்ளுக்குள் கள்ளம் கபடமில்லாத மனிதன். அதற்கேற்ற உடல்மொழி, தோற்றம், ஒடுங்கிய கரகரப்பான குரல் என அனைத்தும் தவசிமுத்துவோடு ஒன்றிப் போகின்றன.

குறிப்பாக போலீஸ் சித்திரவதைக்குப் பிறகு வீட்டுக்கு வந்து, மீண்டும் கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் நடுங்கும் காட்சிகளில் கருணாஸ் மனதைத் தொடுகிறார். கருணாஸ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, கருணாஸ் மறைந்து தவசிமுத்து தெரிகிறார் என்பதே பொருத்தம். சபாஷ்!

விஜயலட்சுமி வீரமணி, தவசிமுத்துவின் மனைவியாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். தங்கையாக வரும் ஷாஷாவும் கவனம் ஈர்க்கிறார். மகனாக வரும் கமலேஷ் ஜெகன் சில காட்சிகளிலேயே பார்வையாளர்களின் அனுதாபத்தைப் பெற்றுவிடுகிறார்.

தவசிமுத்துவுக்கு இணையான இன்னொரு முக்கியமான தூண் நிமிஷா விஜயன்.வழக்கறிஞர் காஞ்சனாவாக கம்பீரமான நடிப்பு. அவரது கண்களிலேயே ஒரு நம்பிக்கை இருக்கிறது. நீதிக்காகப் போராடும் வழக்கறிஞரின் துணிச்சலும், தர்க்கமும், நேர்மையும் அவரது நடிப்பில் வெளிப்படுகின்றன.

மற்றொரு பக்கம் முதலமைச்சராக வரும் பிரபு, நீதிபதிகளாக வரும் நிழல்கள் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், அட்வகேட் ஜெனரலாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன், அரசு தரப்பு வழக்கறிஞர்களாக வரும் லொள்ளு சபா சாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன் என பலரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் கவனம் ஈர்க்கிறார்கள்.

மோகன்ராம், சேரன்ராஜ் உள்ளிட்ட போலீஸ் கதாபாத்திரங்களும் கதையின் அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

ராமேஸ்வரத்தில் தொடங்கி மதுரை, ஆந்திரா, பீகார் எனக் கதை பயணிக்கிறது. அந்தந்த இடங்களின் பின்னணியையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் கண்முன் கொண்டுவருகிறார் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி.

மசாலாப் படங்களுக்கான பரபரப்பான பின்னணி இசைக்குப் பெயர்பெற்ற சாம் சி.எஸ்., இந்தப் படத்தில் முற்றிலும் வேறு பாதையில் பயணித்திருக்கிறார். கதையின் தன்மையை உணர்ந்து, பல அடுக்குகளைக் கொண்ட பின்னணி இசையை வழங்கியிருக்கிறார்.

பாடல்களும் கவனிக்க வைக்கின்றன. சுஜித் ஷாரங் படத்தொகுப்பில் தேவையற்ற நெருடல் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார்.

படத்தின் முக்கியமான பலம், அது கேட்கும் கேள்விகள்தான். ஒரு ஏழை மனிதன் தவறே செய்யாமல் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும்? அதிகாரம் கையில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை யார் கேள்வி கேட்பது?

சட்டத்தின் ஓட்டைகள் யாருக்குச் சாதகமாகின்றன?ஊடகங்களின் பரபரப்புக்கு நடுவே உண்மை எங்கே போகிறது? ஒருவரின் மானம், கண்ணியம், வாழ்க்கை எல்லாம் பறிபோன பிறகு அதற்கான இழப்பீடு என்ன? என்று படம் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகிறது.

நீதித்துறையின் சில நடைமுறைகள், அதிகார வர்க்கத்தின் அலட்சியம், ஊடகங்களின் வியாபார நோக்கம், அறமற்ற பிழைப்புவாதம் என சமூகத்தின் பல பக்கங்களையும் படம் தொட்டுச் செல்கிறது.

ஒரு கட்டத்தில்தவசிமுத்து நிரபராதிஎன்று நிரூபிக்கப்பட்டாலும், அதோடு கதை முடிந்துவிடவில்லை. நான் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நான் இழந்த மானம்? நான் அனுபவித்த அவமானம்? நான் சந்தித்த சித்திரவதை?’

என்று தவசிமுத்து கேட்கும்போதுதான் படம் அதன் தலைப்புக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. என்ன விலை?’ அதன் இறுதிக்கட்டம் அந்தக் கேள்வியை இன்னும் பெரிதாக்குகிறது.

மொத்தத்தில், குடும்பக் கதையாக ஆரம்பித்து, சமூகக் கதையாக விரிந்து, சட்டப் போராட்டமாக வேகம் பெற்று, ஒரு கட்டத்தில் நாட்டின் பிரச்னையாக உருவெடுக்கும் விதத்தில் திரைக்கதை பயணிக்கிறது.

இயக்குநர் சஜீவ் பழூருக்கு பாராட்டுகள்.

தவசிமுத்துவின் கண்ணீரையும், காஞ்சனாவின் சட்டப் போராட்டத்தையும் கடந்து, நம்முடைய சமூக மனசாட்சியையே கேள்வி கேட்கும் படைப்பு.

பார்க்கலாம். பேசலாம். யோசிக்கவும் வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE