‘நூறு கோடி வானவில்’ திரை விமர்சனம்!
மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் இளம் ஊடகவியலாளர் ஹரிஷ் கல்யாண், அலுவல் நிமித்தமாக கோவா வருகிறார். அங்கே, விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கும் தனது காதலன் ரிச்சியின் நினைவு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் அவனது வாழ்க்கையின் சிறு அசைவுகளைக்கூட வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறார் சித்தி இத்னானி.
எதிர்பாராத விதமாக ஹரிஷ் கல்யாணுக்கும் சித்தி இத்னானிக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கருத்து மோதல்களோடும் முரண்பாடுகளோடும் நகரும் இவர்களது சந்திப்பு, நாளடைவில் அழகான நட்பாக மலர்கிறது. சித்தியின் வாழ்க்கையையே மையமாக வைத்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்குகிறார் ஹரிஷ். அந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுகிறது. நிகழ்ச்சியை உருவாக்கிய ஹரிஷின் மனதிலும் சித்தி மீது காதல் பூக்கிறது.

ஆனால், ஏற்கெனவே காதலன் ஒருவன் இருக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கிறார் ஹரிஷ். இந்தச் சூழலில் கோமாவிலிருந்த ரிச்சிக்கும் நினைவு திரும்புகிறது. அவனையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைத்துக்கொள்ள விரும்புகிறார் ஹரிஷ். முதலில் தயக்கத்தோடும் ஒவ்வாமையோடும் இருக்கும் ரிச்சி, பின்னர் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்போது மூன்று மனங்கள்… மூன்று விதமான உணர்வுகள்! நட்பு, காதல், உரிமை, பொறாமை எனப் பல உணர்வுகள் ஒன்றோடொன்று மோதத் தொடங்குகின்றன. ஹரிஷின் காதலை சித்தி எப்படி எதிர்கொள்கிறார்? ரிச்சியின் மனநிலை என்னவாகிறது? இந்த உறவுகளின் முடிச்சுகள் எப்படித் திறக்கப்படுகின்றன? என்பதற்கான விடைகள்தான் படத்தின் மீதிக்கதை.
ஹரிஷ் கல்யாண் இதுவரை ஏற்றிராத அழுத்தமான கதாபாத்திரத்தில் தன்னைப் புதிதாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமான ஜாலியான இளைஞன் பிம்பத்திலிருந்து விலகி, உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு தவிக்கும் மனிதராகத் தோன்றுகிறார். உடல்மொழி, தலைமுடி, தாடி எனத் தோற்றத்திலும் மாற்றம் காட்டியிருப்பதோடு, வசன உச்சரிப்பு, முகபாவனைகள் எனப் பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் தருணங்களில் அவரது நடிப்பு அழுத்தமாகப் பதிகிறது.
விளையாட்டுத்தனமான இளம்பெண் என்ற வழக்கமான பிம்பத்தைத் தாண்டி, பொறுப்பும் பக்குவமும் கொண்ட பெண்ணாக வருகிறார் சித்தி இத்னானி. காதலன் மீதான அக்கறை, அவனை இழந்துவிடுவோமோ என்ற தவிப்பு, ஹரிஷ் மீதான நட்பின் நெருக்கம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் பாத்திரம். தயக்கத்தையும் மனக்குழப்பத்தையும் முகபாவனைகளிலேயே அழகாக வெளிப்படுத்துகிறார். தோற்றப் பொலிவை மட்டுமே நம்பாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
ரிச்சியாக நடித்திருக்கும் நடிகரும் இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார். தனது காதலி இன்னொருவருடன் நெருக்கமாகப் பழகுவதை உணரும்போது முகத்தில் வெளிப்படும் தவிப்பும் ஒவ்வாமையும் அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளை நம்பும்படிச் செய்கின்றன.
படத்தின் ஆச்சரியமான தேர்வு கோவை சரளா! முற்றிலும் ஸ்டைலிஷான கோவா வாசியாக, புகை பிடித்துக்கொண்டு எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக்கொள்ளும் பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து விலகி, புதிய பரிமாணத்தில் கவனம் ஈர்க்கிறார். இன்னும் சில காட்சிகள் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அந்தப் பாத்திரம் கூடுதல் சுவை பெற்றிருக்கும்.
தொலைக்காட்சி நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவராக வரும் தம்பி ராமையா, அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிக் பாஸ் பார்வதி, படப்பிடிப்புக் குழுவின் ஒளிப்பதிவாளராக வந்து துடுக்கான பேச்சாலும் நகைச்சுவைக் கமெண்ட்களாலும் கலகலப்பூட்டுகிறார். இப்படியான நகைச்சுவைப் பாத்திரங்களில் அவர் தொடர்ந்து நடிக்கலாம்.
தொலைக்காட்சிக் குழுவில் பணியாற்றும் திருநம்பி கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது. அதில் நடித்திருக்கும் சீதாராம், அதிகம் பேசாமலேயே தனது இருப்பைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார்.
ஹரிஷ் கல்யாணின் தோழராகவும் மாமாவாகவும் வரும் சின்னி ஜெயந்த், காதலுக்கு உதவும் பாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் ‘இதயம்’ படத்தின் நண்பர் பாத்திரத்தை நினைவூட்டுகிறது. ஹரிஷின் தந்தையாக வரும் சம்பத்ராம், குறைந்த காட்சிகளிலேயே மனதில் பதிகிறார்.
பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு கோவாவின் இயற்கை எழிலையும், அங்குள்ள இளமைத் துள்ளலையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் கண்ணுக்கு இதமான வண்ணங்களோடு நகர்கிறது. சித்து குமாரின் இசை படத்தின் உணர்வோட்டத்துக்கு வலு சேர்க்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம்.
இயக்குநர் சசி என்றாலே மனித உணர்வுகளையும் உறவுகளின் நுட்பங்களையும் பேசும் கதைகள் நினைவுக்கு வரும். ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களில் மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களைத் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்தவர். இந்தப் படத்திலும் அதே அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு முக்கோணக் காதல் கதைதான். ஆனால், அதன் உள்ளடுக்குகளில் இருப்பது காதல் மட்டுமல்ல; மனித மனத்தின் மெல்லிய சலனங்கள், உறவுகளுக்குள் உருவாகும் எதிர்பார்ப்புகள், உரிமை உணர்வு, விட்டுக்கொடுத்தல் எனப் பல நுட்பமான விஷயங்கள். யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதைவிட, அந்தக் காதல் மற்றவர்களின் மனங்களில் என்னென்ன மாற்றங்களை உருவாக்குகிறது என்பதில்தான் இயக்குநர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.
இன்றைய தமிழ் சினிமாவில் வெட்டுக்குத்து, ரத்தம், அடிதடி என்று அதிரடியை முன்னிறுத்தும் படங்களுக்கு மத்தியில், மனதின் மென்மையான பக்கங்களைப் பேசும் ஒரு தென்றலாக வந்திருக்கிறது இந்தப் படம். சில இடங்களில் கதை இன்னும் வேகமாக நகர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், உணர்வுகளின் வழியே பார்வையாளர்களை அழைத்துச் செல்வதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
குறிப்பாக, படத்தின் உச்சக்கட்டம் பார்வையாளர்களின் வழக்கமான கணிப்புகளுக்கு அப்பால் அமைந்திருப்பது சிறப்பு.
‘நூறு கோடி வானவில்’ காதலைப் பற்றிய படம் மட்டுமல்ல; காதலிக்கிறவர்களின் மனங்களைப் பற்றிய படம். வானவில்லின் நிறங்களைப் போல மனித மனங்களிலும் எத்தனை விதமான உணர்வுகள்! அவற்றை அழகாகத் தொட்டுச் செல்லும் ஒரு மென்மையான காதல் பயணம்!

