சினிமா செய்திகள்

காட்டுக்குள் உருவான ‘அரிக்கொம்பன்’… டிசம்பர் 11 ரிலீஸ்!

காடுகள், யானைகள் மற்றும் வனப்பகுதி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அரிக்கொம்பன்’ திரைப்படம் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு. நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தில் தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார். அனிஷ் லால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் மிதுன் மகேஸ்வரன், 1980-ஆம் ஆண்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்காகக் காட்டுப் பகுதி, கிராமங்கள், குளம் உள்ளிட்டவை பிரம்மாண்டமான அரங்குகளாக உருவாக்கப்பட்டதாகவும், இதற்காகப் படக்குழுவினர் பல மாதங்கள் உழைத்ததாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா, காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் படமாக ‘அரிக்கொம்பன்’ இருக்கும் என்று பாராட்டினார். யானைகளின் உணர்வுகள், குடும்பப் பிணைப்பு மற்றும் மனிதர்களுடனான வாழ்வியல் தொடர்புகளைப் பேசும் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர்கள் எழில், ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் படத்தின் டிரெய்லர், இசை, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தைப் பாராட்டி வாழ்த்தினர்.

இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர் பேசும்போது, ஜி.வி. பிரகாஷ், மறைந்த தேனிசைத் தென்றல் தேவா, சின்மயி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியுள்ளதாகத் தெரிவித்தார். கவிஞர் கபிலனுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார்.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப் பின்னணியில், இயற்கைச் சூழலைத் தத்ரூபமாக உருவாக்கி படமாக்கப்பட்டுள்ள ‘அரிக்கொம்பன்’, வனமும் மனித வாழ்வும் குறித்த புதிய திரை அனுபவத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE