“சாயிஷாவின் விருப்பத்திற்காகவே ‘ஹலோ காதல்’ படத்தில் நடித்தேன்!” – ஆர்யா
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பி.வி.ஆர். சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், ஷாம், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், “ ‘ஹலோ காதல்’ எனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம். இப்படத்தில் நடித்தும் தயாரித்தும் இருக்கும் ஜாமுடன் இணைந்துதான் எனது திரைப் பயணத்தைத் தொடங்கினேன். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’ எனப் பல முக்கியமான படங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்றியிருக்கிறோம். மலையாளத்தில் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் நிகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ‘ராஜா ராணி’ போலவே ஓர் இனிமையான காதல் கதையைக் கொண்டுள்ளது. ஆர்யா, நிகிலா, வைஷ்ணவி ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. ‘கண்ணும் கண்ணும்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கான பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும்” என்றார்.
கராத்தே கார்த்தி பேசும்போது, தென்காசி வட்டாரப் பேச்சு வழக்கில் கிராமத்துப் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஸ்டண்ட் சில்வா மற்றும் நடன இயக்குநர் ஷெரிஃப் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளித்ததாகவும், ஆர்யா தனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
யுவராஜ் கணேஷ், சிறுவயதிலிருந்தே ஆர்யாவின் ‘பட்டியல்’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘நான் கடவுள்’ போன்ற படங்களைப் பார்த்து வளர்ந்ததாகவும், இன்று அவருடன் இணைந்து நடிப்பது தனது திரைப் பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விஜே பப்பு பேசுகையில், சிறுவயதில் தனது தந்தையுடன் ஜாக்கிங் செல்லும்போது ஆர்யாவை ஜாக்கிங், சைக்கிளிங் செய்வதைப் பார்த்ததாகவும், இன்று அவருடைய படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
முத்தமிழ் பேசும்போது, ஆர்யாவின் எளிமையான அணுகுமுறையும் நட்பான பழக்கமும் படப்பிடிப்பில் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடிக்க உதவியதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆர்யாவின் ஆலோசனையால் தனது உடல் எடையைக் குறைத்ததாகவும் தெரிவித்தார்.
நடிகை வினோதினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது குழந்தைகளுக்கு ஆர்யாவைப் பிடிக்கும் என்று கூறியவுடன் அவர் வீடியோ கால் மூலம் குழந்தைகளிடம் அன்பாகப் பேசியது மறக்க முடியாத அனுபவம் என்றும் நெகிழ்ந்தார்.
சண்டை இயக்குநர் சில்வா, முழுக்க முழுக்க காதல் படமாக இருந்தாலும் தனக்குச் சண்டைக் காட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். ஆர்யா ஒவ்வொரு படத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதாகவும் பாராட்டினார்.
ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் தொடங்கிய நட்பு இன்றுவரை தொடர்வதாகவும், ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு ஜி.வி. பிரகாஷுடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். படத்தின் பாடல்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
நடிகர் சதீஷ், “ஆர்யா என்னை மிகவும் நேசிக்கும் சிறந்த மனிதர். யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக முன்வந்து உதவக்கூடியவர். ‘கஜினிகாந்த்’ படத்தில் என்னை நடிக்க வைத்ததோடு, ஆர்யாவின் திருமண விஷயத்திலும் நான் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து எங்களது நட்பு தொடர்கிறது. எனது கடினமான காலகட்டத்தில் ஜி.வி. பிரகாஷ் செய்த உதவியை ஒருபோதும் மறக்க முடியாது. ‘ஹலோ காதல்’ மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும்” என்றார்.
நடிகர் ஷாம், “ ‘ஹலோ காதல்’ மிகவும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கிறது. திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவருக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். ஜி.வி. பிரகாஷின் பாடல்களுக்கு நான் தீவிர ரசிகன். இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்திலிருந்து ஆர்யாவுடனான நட்பு தொடர்கிறது. அவருடைய எளிமையும் உதவும் மனப்பான்மையும் பாராட்டுக்குரியவை. இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.
நடிகை நிகிலா விமல், மலையாளத்தில் முதலில் கேட்ட கதையில், இயக்குநர் தமிழுக்கு வந்த பிறகு இணைந்ததாகவும், ஆர்யாவுடன் முதல்முறையாகப் பணியாற்றியது உற்சாகமான அனுபவம் என்றும் தெரிவித்தார். வைஷ்ணவியுடன் இணைந்து நடித்ததும், ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் தன்னை அழகாகக் காட்சிப்படுத்தியதும் மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார்.
இயக்குநர் நிகில் முரளி, ஆர்யாவின் வீட்டிற்குச் சென்று கதையைச் சொன்ன தருணம் முதல் படத்தின் உருவாக்கம் வரை கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். ஜி.வி. பிரகாஷ், ஆர்யா, வைஷ்ணவி, ஜீவா சங்கர், கலை இயக்குநர் மோகன், ஆடை வடிவமைப்பாளர் நௌஷத், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், படத்தொகுப்பாளர் பினு உள்ளிட்ட அனைவரின் உழைப்பும் படத்திற்குப் பலம் சேர்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆர்யா: சாயிஷாவின் விருப்பம்… எனது தேர்வு!
நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியாக நடிகர் ஆர்யா பேசுகையில், “நீண்ட நாட்களாக ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால், சாயிஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு லைட்டான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தில் இணைந்தேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்திற்குப் பிறகு ஜீவா சாரின் ஆசீர்வாதமும் இப்படத்தில் கிடைத்துள்ளது.
கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது கிஷோர் சார் மூலமாக இப்படத்தின் கதையைக் கேட்டேன். மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இல்லாமல், இன்றைய பார்வையாளர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் வகையில் இயல்பாகவும் புத்துணர்ச்சியுடனும் கதை அமைந்திருந்தது.
ஜி.வி. பிரகாஷ், நிகிலா விமல், இயக்குநர் நிகில், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு, சதீஷ், ஷ்யாம், வெங்கட் சார் மற்றும் தயாரிப்பாளர்கள் கிரீஷ் மாத்ருபூதம், விக்னேஷ் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. படத்திற்குப் பலமாக இருக்கும் ஜீ குழுவினருக்கும் நன்றி.
டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.
காதல், நட்பு, நகைச்சுவை என ரசிகர்களுக்கு ஓர் இனிமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’, டிசம்பர் 4-ஆம் தேதி ரசிகர்களைச் சந்திக்கிறது.

