‘பிளாக் கோல்டு’ திரை விமர்சனம்!

ஆரம்பத்தில் அப்பா – மகன் பாசம், ஹீரோவின் காதல், காதலிக்கு வீட்டில் எதிர்ப்பு, வில்லன் கும்பல்களின் அறிமுகம், தலைமுடி வியாபாரம் என வழக்கமான சினிமா ஃபார்முலாவில் பயணிக்கிறது திரைக்கதை. பெரிதாக எந்தப் பரபரப்பும் இல்லை. ஏ.வெங்கடேஷ், அருள்.டி.சங்கர் இரு அணிகளும் மோதத் தொடங்கிய பிறகுதான் கதை சூடுபிடிக்கிறது. இதற்கிடையே கராத்தே வெங்கடேசன் தலைமையிலான மற்றொரு குழுவும் பணத்துக்காகத் தனி ஆட்டம் ஆட, தலைமுடி லாரி கடத்தப்படும் சம்பவம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
வெற்றி அமைதியான நடிப்பு, அளவான வசனம், சுமாரான ரொமான்ஸ் எனப் பயணிக்கிறார். ஆனால், ஹீரோவுக்கான துடிப்பும், திரையில் ஒரு தனி ஈர்ப்பை உருவாக்கும் வேகமும் மிஸ்ஸிங். அப்பா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், அவருக்காக வில்லன்களுடன் மோதும் இடங்களிலும் மட்டும் ஓரளவு நடிப்பை வெளிப்படுத்துகிறார். காதல் காட்சிகள் ஒருகட்டத்தில் காணாமல் போக, ஆக்ஷன் காட்சிகள் அதிகரிக்கின்றன. அதிலும் ஹீரோவே ஆங்காங்கே காணாமல் போய்விடுகிறார். ‘கதைதான் ஹீரோ’ என்று முடிவெடுத்துவிட்டாரோ என்னவோ!
லிவிங்ஸ்டன், அப்பாவாகத் தனது அனுபவ நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். முதலாளி மீதான விசுவாசம், மகன் மீதான பாசம் என இரண்டையும் வெளிப்படுத்தும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. தலைமுடி லாரி கடத்தப்படும் காட்சியிலும், வில்லன்களிடம் சிக்கித் தவிக்கும் இடங்களிலும் அவருடைய நடிப்பு அபாரம். ஆனால், சில காட்சிகளில் அவருடைய வயது அப்பட்டமாகத் தெரிகிறது. மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வில்லன்களாக வரும் ஏ.வெங்கடேஷும், அருள்.டி.சங்கரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ் வழக்கமான சினிமா வில்லன் என்றால், அருள்.டி.சங்கர் தனது கோபமான உடல்மொழியாலும், குறிப்பாகச் சுருள்வாளுடன் அவர் போடும் சண்டைக்காட்சியாலும் கவனம் ஈர்க்கிறார்.
ஆனால், படத்தின் உண்மையான வில்லத்தனமே கராத்தே வெங்கடேசன் கும்பலிடம்தான் இருக்கிறது. அவரும் அவருடைய மூன்று கூட்டாளிகளும் செய்யும் காரியங்கள், அவர்களுடைய திட்டங்கள், பணத்தைக் கொள்ளையடிக்கப் போடும் கணக்குகள் எனப் படத்தின் சுவாரஸ்யமான பகுதிகள் இவர்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. குறிப்பாக, அந்தக் குழு போடும் கொள்ளைத் திட்டம் திக்… திக்! பல படங்களில் நடனக் கலைஞராகப் பார்த்த ஜப்பான் குமார், இங்கே வாய்பேச முடியாத வில்லனாக வந்து மனதில் நிற்கிறார்.
அருள்.டி.சங்கரின் மகளாக சபிதாராய் வருகிறார். இடைவேளைக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகும் அபிராமி, படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் அங்குமிங்கும் நடமாடுகிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு இன்னும் வலுவான காட்சிகள் கொடுத்திருக்கலாம். ஹீரோவின் அம்மாவாக வரும் துளசிக்கும் பெரிதாக வேலை இல்லை. கடைசியில் ஓரிரு வசனங்கள் பேசும் இடத்தில் மட்டுமே கவனம் பெறுகிறார்.
கெட்ட போலீஸ் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் மூர்த்தி ஓரளவு கவர்கிறார். கதையின் ஓட்டத்துக்கு அவருடைய பாத்திரம் உதவுகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவராகச் சில காட்சிகளில் வந்து அதிகாரத்தைக் காட்டுகிறார் நிழல்கள் ரவி. கவாஸ்கரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷும் சண்டைக்காட்சிகளில் தனது திறமையைக் காட்டியிருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம், தலைமுடி வியாபாரம் என்ற புதிய களம். ‘பிளாக் கோல்டு’ என்று அழைக்கப்படும் தலைமுடியின் பின்னணி, அதன் சர்வதேசச் சந்தை, வணிக மதிப்பு ஆகியவற்றைத் திரையில் சொல்வது புதுமை. நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் தலைமுடிக்குப் பின்னால் இத்தனை பெரிய வியாபாரம் இருக்கிறதா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இதுபோன்ற சுவாரஸ்யமான பகுதிகளைக்கூட ஏ.ஐ. காட்சிகளின் உதவியுடன் சொல்லியிருப்பது படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. தலைமுடி வியாபாரம் குறித்த இன்னும் பல ஆச்சரியமான தகவல்களைச் சேர்த்திருந்தால் இந்தப் புதுமையான களம் கூடுதல் வலுப்பெற்றிருக்கும்.
மூன்று வில்லன் குழுக்களின் மோதல், தலைமுடி கடத்தல், அப்பா – மகன் பாசம் எனப் பல சுவாரஸ்யமான அம்சங்கள் இருந்தும், அவற்றை ஒரே நேர்க்கோட்டில் விறுவிறுப்பாக இணைக்கத் திரைக்கதை தடுமாறுகிறது. கிரைம் திரில்லருக்குத் தேவையான பதற்றமும், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் போதிய அளவில் உருவாகவில்லை. சில இடங்களில் ஆக்ஷன் இருந்தாலும், மொத்தப் படத்தின் வேகம் மந்தமாகவே இருக்கிறது.
மொத்தத்தில்… ஒரு புதுமையான கதைக்களம், வித்தியாசமான வில்லன் குழுக்கள், அப்பா – மகன் பாசம் எனப் படத்துக்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றைச் சுவையான திரைக்கதையாகச் சமைப்பதில்தான் இயக்குநர் கோட்டைவிட்டிருக்கிறார். போரடிக்காத காட்சிகள் இருந்தாலும், பரபரப்பான கிரைம் திரில்லர் அனுபவம் மட்டும் கிடைக்கவில்லை.
கோயில்களில் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படும் தலைமுடிக்குப் பின்னால் இத்தனை கோடி ரூபாய் வியாபாரமா? சுவாரஸ்யமான பின்னணி… ஆனால், அதை விறுவிறுப்பான திரில்லராக மாற்றத் தவறியிருக்கிறார் இயக்குநர்!

