அப்பா குட்டி – விமர்சனம்!
சென்னையிலிருந்து கைக்குழந்தையான மகள் தியாவுடன் ஊட்டிக்கு வரும் சூர்யா (விஜய் ஆண்டனி), அங்கே லொக்கேஷன் மேனேஜராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஒற்றையாளாக மகளை வளர்க்கும் அவரது பொறுப்புணர்வைப் பார்த்து, தியாவின் பள்ளி ஆசிரியர் அனிதா (ப்ரீத்தி அஸ்ரானி) காதல் கொள்கிறார். ஆனால், அந்தக் காதலை சூர்யா ஏற்க மறுக்கிறார். இதற்கிடையே, தியாவுக்கு ஏற்படும் பிரச்சனை, சூர்யாவின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் எனக் கதை வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்குகிறது.

மர்மங்களைச் சுமந்து திரியும் சூர்யா கதாபாத்திரத்திற்கு விஜய் ஆண்டனியின் அமைதியான முகம் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால், காதல், பாசம், கோபம், ஆற்றாமை என எல்லா உணர்வுகளுக்கும் ஒரே முகபாவனை தொடர்வது கதாபாத்திரத்தின் வலிமையைக் குறைக்கிறது. காதலிலும், அன்பிலும், பொறுமையிலும், பொறுப்பிலும் அழகாக வெளிப்படும் அனிதாவாக ப்ரீத்தி அஸ்ரானி கவனம் ஈர்க்கிறார். முதல் பாதியில் குறும்புகளால் ரசிக்க வைக்கும் தியா, இரண்டாம் பாதியில் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பால் முன்னிலை பெறுகிறார். முருகானந்தத்தின் ஒன்லைன்கள் சில இடங்களில் சிரிப்பூட்ட, ஹரிப்ரியா உணர்ச்சிக் காட்சிகளுக்குத் துணை நிற்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கான பங்கைச் செய்திருக்கின்றன.
ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு ஊட்டியின் இயற்கை அழகை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, முதல் பாதியின் நிதானமான நகர்வுக்கு மலைப்பிரதேசத்தின் அழகு துணையாகிறது. ஆனால், சில காட்சிகளின் கோணங்களும், ஒன்றோடொன்று சரியாகப் பொருந்தாத படத்தொகுப்பும் படத்தின் திரைமொழியைப் பலவீனப்படுத்துகின்றன. விஜய் ஆண்டனியின் இசையில் ‘நீதான் என் கண்ணாடி’, ‘அப்பாவ போல’ பாடல்கள் கதையின் உணர்வுகளோடு பயணிக்கின்றன. பின்னணி இசை மட்டும் காட்சிகளின் அழுத்தத்திற்கு ஏற்ற வலிமையைத் தரவில்லை.
அப்பாவுக்கும் மகளுக்குமான பாசம், பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம், அனிதாவின் காதல் என முதல் பாதி பெரிதாக எந்தப் புதுமையும் இல்லாமல் நேர்கோட்டில் நகர்கிறது. ஒரே மாதிரியான சென்டிமென்ட் காட்சிகள் திரும்பத் திரும்ப வருவதால், உணர்வுகளின் தாக்கம் குறைந்து, பொறுமையைச் சோதிக்கும் தருணங்களும் உருவாகின்றன. ஊட்டியின் அழகைக் காட்டியபடியே கதை நகர்ந்தாலும், திரைக்கதையின் சோர்வு பார்வையாளருக்கும் தொற்றிக்கொள்கிறது. இடைவேளையில் வரும் திருப்பங்கள், அதுவரை தூங்கிக் கொண்டிருந்த கதையைத் திடீரென எழுப்பி உட்கார வைக்கின்றன.
இரண்டாம் பாதியில் பின்கதைகள், மருத்துவச் சவால்கள், உறவுகளின் சிக்கல்கள், சட்டப் போராட்டம் என கதை பல கிளைகளில் விரிகிறது. அடுத்தடுத்து வரும் திருப்பங்களும், அதிர்ச்சிகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. ஆனால், எல்லாவற்றையும் அவசர அவசரமாகச் சொல்லிவிட வேண்டும் என்ற இயக்குநரின் வேகம், சில முக்கியமான உணர்வுகளுக்கு உரிய இடத்தைத் தர மறுக்கிறது. ஆங்காங்கே வந்து விழும் பழைய சினிமா க்ளிஷேக்களும் திருப்பங்களின் தாக்கத்தைக் குறைக்கின்றன. இறுதியில் உணர்ச்சிப் போராட்டத்தை முன்வைக்கும் காட்சிகள் அழுத்தம் தர முயன்றாலும், நீதிமன்றக் காட்சிகளில் யதார்த்தத்தை மீறிய நாடகத்தனம் எட்டிப் பார்க்கிறது.
மகளுக்காகப் போராடும் அப்பாவின் பாசமும், அதன் பின்னால் மறைந்திருக்கும் மர்மமும் படத்தின் பலம். ஆனால், சலிப்பூட்டும் முதல் பாதி, அவசரமான இரண்டாம் பாதி, பழக்கப்பட்ட திருப்பங்கள் என ‘அப்பா குட்டி’ முழுமையான உணர்வுப் பயணமாக மாறாமல், ஆங்காங்கே தடுமாறும் பயணமாகவே முடிகிறது.
தஞ்சை அமலன்

