‘டெலிவரி பாய்’ திரை விமர்சனம்!
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் லியோ சிவக்குமார், குடும்பச் சூழல் காரணமாக உணவு விநியோகம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், திடீரென்று அவரது அம்மா ராதிகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அம்மாவைக் காப்பாற்ற பணம் தேவைப்பட, வேறு வழியின்றி துஷ்யந்திடம் இருக்கும் பணத்தைத் திருடுகிறார். அம்மா குணமடைந்த பிறகு, தான் செய்த தவறைச் சரிசெய்யும் நோக்கில் பணத்தைத் திருப்பிக் கொடுக்கச் செல்லும் லியோ சிவக்குமாருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கிறது. தனது அம்மாவின் உயிரைக் காப்பாற்றக் காரணமாக இருந்த துஷ்யந்தின் உயிருக்கே ஆபத்து இருப்பதை அறிகிறார். நன்றிக்கடனை மறக்காத லியோ, இப்போது துஷ்யந்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு எதிராகச் சதிவலை பின்னியது யார்? எதற்காகத் துஷ்யந்தின் உயிருக்கு குறி வைக்கப்பட்டது? என்பதை அதிரடி ஆக்ஷன் விருந்தாகச் சொல்கிறது ‘டெலிவரி பாய்’.

அதிரடி நாயகனாக லியோ சிவக்குமார்!
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமார், இந்தப் படத்திற்காகத் தன்னை மெருகேற்றிக் கொண்டிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. முகத்தில் புதிய பொலிவுடன் வலம் வருபவர், காதல் காட்சிகளில் இளமைத் துள்ளலையும், ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகமும், உடல்மொழியில் வெளிப்படும் உறுதியும் அவரை ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்துகின்றன. காவல்துறை கனவுடன் இருக்கும் இளைஞனாக அறிமுகமாகி, ஆபத்தை எதிர்கொள்ளும் அதிரடி நாயகனாக உருவெடுக்கும் அவரது பயணம் ரசிக்க வைக்கிறது.
நாயகியாக வரும் பிரிகிடா சாகா, கதையின் முதல் பாதியில் சில காட்சிகளுக்குப் பயன்பட்டாலும், கதையின் முக்கியமான பயணத்தில் அவருக்குப் பெரிய இடம் கிடைக்கவில்லை.
காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, கதையின் பரபரப்பை அதிகரிக்கும் வகையில் இவர்களது திரை இருப்பும் நடிப்பும் அமைந்திருக்கிறது.
கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் ஏழு நண்பர்களாக நடித்திருக்கும் இளைஞர்கள், பழைய தமிழ் சினிமாவின் சில கதாபாத்திரங்களை நினைவுபடுத்தினாலும், தங்களது பங்களிப்பில் குறை வைக்கவில்லை.
தொழில்நுட்ப ரீதியாகவும் அதிரடி!
அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு வேகத்தையும் விறுவிறுப்பையும் கூட்டுகிறது. குறிப்பாக, சண்டைக்காட்சிகள் மற்றும் துரத்தல் காட்சிகள் திரையில் மிரட்டுகின்றன. நாயகன், நாயகி இருவரையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பதுடன், மற்ற கதாபாத்திரங்களுக்கும் காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.
சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையில் பாடல்கள் முணுமுணுக்கவும், ஆட்டம் போடவும் வைக்கின்றன. அதேபோல், பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளின் வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் மேலும் அதிகரிக்கிறது.
படத்தொகுப்பாளர் ஆர். வசந்தகுமார், தேவையற்ற நீளத்தைக் குறைத்து காட்சிகளைச் சுருக்கமாகத் தொகுத்திருக்கிறார். இதனால், படம் பெரும்பாலும் தொய்வின்றி வேகமாக நகர்கிறது.
இயக்குநரின் புத்திசாலித்தனமான டெலிவரி!
எழுதி இயக்கியிருக்கும் நானி, தன்னைப் பாதித்த ஒரு கதைக்கருவைத் தனது பாணியில் புதிய வடிவத்தில் கையாண்டிருக்கிறார். கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, கதை சொல்லும் உத்தி, ஆக்ஷன் காட்சிகளின் அமைப்பு எனப் பல இடங்களில் தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, அம்மாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தவறான முடிவை எடுக்கும் நாயகன், பின்னர் நன்றிக்கடனுக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் கதாபாத்திரமாக மாறுவது சுவாரஸ்யமான திருப்பம். சென்டிமென்ட், காதல், ஆக்ஷன், கமர்ஷியல் அம்சங்கள் என அனைத்தையும் அளவாகக் கலந்து கொடுத்திருப்பது படத்தின் பலம்.
ஒரு சாதாரண உணவு விநியோக இளைஞனை அதிரடி நாயகனாக மாற்றி, அவரது பயணத்தில் அம்மா பாசத்தையும் நன்றிக்கடனையும் இணைத்திருக்கும் இயக்குநர் நானியின் முயற்சி பாராட்டுக்குரியது.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரையரங்கிற்குச் செல்பவர்களுக்கும் விறுவிறுப்பான ஆக்ஷன் அனுபவத்தைத் தரும் ‘டெலிவரி பாய்’, பொழுதுபோக்குக்கான நல்ல டெலிவரி!

