‘மிரள்’ – திரைவிமர்சனம்
தலைப்பு இப்படி இருக்கே… அதுக்கு 50 சதவீதமாவது நியாயம் சேர்த்திருப்பங்களா? என்று ஆவலுடன் இருக்கையில் அமர்ந்தால் முதல் காட்சியிலேயே திடுக்கென்று பயப்படவைத்து மிரளில் மிரட்டியிருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.
பரத் – வாணி போஜன் காதல் தம்பதிகள். ஒருநாள் குடும்பத்துடன் காரில் போகும்போது மர்ம உருவம் ஒன்று பரத்தை கொலை செய்கிறது. ஆரம்பத்திலேயே ஹீரோ மண்டைய போட்டுட்டா கதை எப்படி நகரும்? அந்த சம்பவம் வாணி போஜன் கனவில் வரும் சம்பவம். அவர் அப்படி கனவு கண்டதிலிருந்து கெட்ட சகுணங்களாகவே நடக்கிறது. குலதெய்வம் கோயிலில் கெடா வெட்டி சாமி கும்பிட்டா எல்லாம் சரியாகிடும் நம்பிக்கையில் பரத், தனது மனைவி குழந்தையுடன் வாணி போஜன் ஊருக்கு வருகிறார்.
குலதெய்வம் கோயில் வேண்டுதலை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும் வழியில் வாணிபோஜன் கனவு கண்டதுபோல மர்ம உருவம் பரத்தை தாக்கிவிட்டு வாணிபோஜனையும் குழந்தையையும் கடத்திச்செல்கிறது. அந்த உருவம் எது? எதற்காக பரத் குடும்பத்தை பதைபதைக்க வைக்கிறது என்ற கேள்விகளுக்கும் அதிர்ச்சிக்கும் விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
படம் தொடங்கி முடியும் வரை திடுக் திருப்பங்கள் மெயிண்டெயின் ஆவது படத்தின் ஆகபெரும் பலம். காதல் மனைவியின் நிலையை நினைத்து அவருக்கு தெரியாமல் கலங்குவது; மனைவி, குழந்தையை காப்பாற்ற ஆபத்தை பொருட்படுத்தாமல் துணிவு காட்டுவது; மாமனார் கே.எஸ்.ரவிக்குமாரிடம் மனமுறுக மன்னிப்பு கேட்பது என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
பரத்தின் காதல் மனைவியாக வாணிபோஜன் வசீகரம். கெட்ட கனவை நினைத்து நினைத்து மிரளும்போது முகபாவனைகளால் படம் பார்ப்பவர்களையும் மிரட்டுகிறார். பரத்தின் நண்பராக வரும் ராஜ்குமாருக்கு படத்தின் திருப்புமுனைக்கான கேரக்டர். சிறப்பாக செய்திருக்கிறார். பரத்தின் மகனாக வரும் சிறுவன், மாமனாராக கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட கேரக்டர்களும் சிறப்பு.
திகில் படத்துக்கு பொருத்தமாக சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும் பிரசாத்தின் பின்னணி இசையும் மிரளுக்கு மெருகேற்றியுள்ளது. லாஜிக் சறுக்கல்; சில இடங்களில் விறுவிறுப்பை குறைக்கும் திரைக்கதை நகர்வு போன்ற குறைகளை தவிர்த்திருந்தால் இன்னும் கூடுதலாக மிரட்டியிருக்கும் இந்த ‘மிரள்’.