‘அயலி’ :கொண்டாடப்படவேண்டியவள்
அழுத்தமான கதை, இயல்பான கதாபாத்திரங்கள், நேர்த்தி மிகு திரைக்கதை கொண்ட படைப்புகள் அத்திப்பூத்தாற் போல்தான் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும். அந்தவகையில் படம் பார்ப்பவர்களின் நெஞ்சாங்கூட்டில் அடைகாக்கும் படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘அயலி’.
ஜீ5 ஓடிடி தளத்தில் 8 பகுதிகளாக வெளிவந்திருக்கும் அயலியின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு உணர்வுகளை கொண்டதாக உள்ளம் தொடுகிறது. அப்படியென்ன செய்கிறாள் அயலி?.. பார்க்கலாம் வாங்க!..
மூடத்தனம், முட்டாள் குணம், தெய்வ குத்தம் பெயரில் பெண்களை அடிமைகளாக நடத்தும் ஆணாதிக்கம் என தன்னந்தனி பழக்க வழக்கத்தில் மூழ்கி கிடக்கிறது அந்த கிராமம். பெண்கள் பருவம் எய்துவிட்டாலே இனி கல்வி தேவையில்லை என்று சொல்லி கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இதனால் எந்த பெண்ணும் பத்தாம் வகுப்பு தாண்டியதில்லை.
இப்படியொரு சூழ்நிலையில் படித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவில் மிதக்கிறார் தமிழ்ச்செல்வி என்ற மாணவி. ஆனால் கிராமத்தின் பாழாய்ப்போன பழக்க வழக்கம் அதை தடுத்து நிறுத்தினால் காணும் கனவு காகிதப்பூவாகிவிடுமே என்று அஞ்சி அஞ்சி நாட்களை கடத்தும்போதே பருவத்திற்கு வந்துவிடுகிறாள். விஷயம் வெளியே தெரிந்தால் படிப்பை தொடர முடியாதே என்று நினைக்கும் தமிழ்ச்செல்வி உண்மையை மறைத்து படிப்பை தொடர்கிறார். அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் நெஞ்சம் நெகிழவைக்கும் க்ளைமாக்ஸிற்கு அழைத்துச்செல்வதே கதை.
தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்திற்கு அபி நக்சத்திரா ஆகச்சிறந்த தேர்வு. ஒருவேளை இது திரைப்படமாக வெளியாகியிருந்தால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றிருக்கக்கூடும். அப்படியொரு நடிப்பு ராட்சசியாக காட்சிக்கு காட்சி கவர்ந்திழுக்கிறார். தமிழ்ச்செல்வியாக அபி சிரிக்கும் போது சிரித்து, அழும்போது அழுது, கோபம் கொப்பளிக்க வெடித்து சிதறும்போது அந்த கதாபாத்திரத்தின் அத்தனை உணர்ச்சிகளும் படம் பார்ப்பவர்களுக்கும் கடத்தப்படுவதே தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தின் வெற்றி.
தமிழ்ச்செல்வியின் தாய் குருவம்மாளாக வரும் அனுமோலும் ஆஹா.. நடிப்பிற்காகவே பிறந்தவர்போல் அப்படியொரு உடல்மொழியில் நடிப்பில், பேச்சில் மெய் சிலிர்க்க வைக்கிறார். கிராமத்திலேயே அடைபட்டு கிடப்பவரை ஒரு சூழ்நிலை டவுன் பஸ் ஏற வைத்து நகரத்துக்கு வரவைக்கும்போது அந்த அனுபவத்தை பேரானந்தமாக எண்ணி பரவசப்படும் காட்சிகளில் ரசிகர்களும் சொக்கிப்போவது சத்தியம்.
‘அருவி’ மதனுக்கு இதில் தமிழ்ச்செல்வியின் தந்தை பாத்திரம். ஆரம்பத்தில் ஏனோ ஈர்க்காத நடிப்பை வெளிப்படுத்துபவர் போகப் போக இதயம் தொடும் நடிப்பை வெளிப்படுத்துவது சிறப்பு!
தமிழ்ச்செல்வியின் நெருங்கிய தோழி மைதிலியாக சிறுவயதிலேயே குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு சிறுவயதிலே கைம்பெண்ணாகி கலங்கும் லவ்லினின் நடிப்பும் லவ் யூ சொல்ல வைக்கிறது. அவரது வலிகளுக்கு ஏற்றது போல லவ்லினின் கண்களும் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகபெரும் நடிப்பு. அதேபோல் இன்னொரு தோழி கயல்விழி கதாபாத்திரத்தில் தாராவும் அவரது அம்மா கதாபாத்திரத்தில் வருபவரும் அருமையான தேர்வு. மிக மிக இயல்பாக நடித்துள்ளனர்.
சக்களத்தி போட்டியில் எப்போதுமே அடித்துக்கொள்ளும் இரண்டு பாட்டிகள். ஒரு கட்டத்தில் ஒருவர் நோயில் படுத்துவிட.. யாரும் கவனிக்காமல் இருக்கும் அவருக்கு இன்னொரு பாட்டி சூப்பு போட்டு எடுத்துக்கொண்டு செல்லும் இடத்தில் சில சொட்டு கண்ணீர் வருவதை தடுக்க முடியாது.
ஊர் பெரியவராக வரும் சிங்கம் புலி, அவரது மகன் சக்திவேலாக வரும் லிங்கா, கணக்கு வாத்தியாராக வரும் டிஎஸ்ஆர் தர்மராஜ், களவானி சேகராக வரும் ஜென்சன் கதாபாத்திரங்களும் சிறப்பு.
கிராமத்தின் அழகை மட்டுமல்ல அதன் இயல்பை எதார்த்தம் பிசகாத மனிதர்களை சூழலை படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பும் திறனும் அபாரம். உறுத்தாத பின்னணி இசையை கொடுத்த ரேவா பாராட்டுக்குரியவர்.
கதை, திரைக்கதை, வசனத்தில் கூட்டாஞ்சோறு ருசியை கொடுத்த வீணை மைந்தன்,சச்சின், முத்துக்குமார் ஆகியோருக்கு பூங்கொத்து. இது அத்தனைக்கும் காரணமான இயக்குனர் முத்துக்குமாருக்கு அன்பும் வாழ்த்தும்!
சில இடங்களில் நாடகத்தனமும் இப்படியெல்லாம் ஒரு கிராமம் இந்த காலத்தில் இருக்கிறதா? என்று எழ வைக்கும் கேள்வியும் படத்தின் குறைகள். எனினும் இன்னும் நடத்தப்படும் பெண்ணடிமை, ஆணாதிக்க குணங்களுக்கு சவுக்கடியாய் அமைந்திருக்கும் நோக்கம் படத்தில் விரவி கிடப்பதால் ‘அயலி’ கொண்டாடப்படவேண்டியவள்.