’கண்ணை நம்பாதே’ இரவில் நடக்கும் கதை: உதயநிதி பேச்சு
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் மூலம் அடையாளம் பெற்ற இயக்குநர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் ‘க்ண்ணை நம்பாதே’. இந்தப் படத்தில் ஹீரோயினாக ஆத்மிகா நடிக்கிறார். பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
த்ரில்லர் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பட ரிலீஸிற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். ‘கண்ணை நம்பாதே’ மார்ச் 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் உதயநிதி பேசியதாவது:-
“என்னுடைய கேரியரிலேயே நான்கரை ஆண்டுகாலம் எடுத்த படம் என்றால் அது இந்தப்படம்தான். 2018-ஆம் ஆண்டு இறுதியில் படம் தொடங்கியது. அருள்நிதிதான் எனக்கு இந்தபடத்தை பரிந்துரை செய்தார். க்ரைம் த்ரில்லர் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்கேற்றபடி ஒரு கதையை இயக்குநர் மாறன் கூறினார்.
பின்னர் படத்தை தொடங்கினோம். படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. படத்தில் ஒரே பாடல்தான் இடம்பெற்றுள்ளது. இது இரவில் நடக்கும் கதை. இடையில் கொரோனா வந்துவிட்டது. அதனால் படம் வெளிவர காலதாமதமாகிவிட்டது. நான் ரெட் ஜெயன்டிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டேன். அதை செண்பகமூர்த்தியும், அர்ஜூனும் பார்த்துகொள்கின்றனர். என்னுடைய படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. இந்தப்படம் தொடங்கும்போது நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேனா என்பது எனக்கு தெரியாது. இன்றைக்கு அமைச்சராகிவிட்டேன்.
ஆத்மிகா 12ம் வகுப்பு படிக்கும்போது படத்தில் இணைந்தார். தற்போது அவர் கல்லூரி படிப்பையே முடித்து விட்டார். இந்தப்படத்தின் முதல் ஷெட்யூல் வரும்போது பொண்ணு பார்த்தார்கள். இரண்டாவது ஷெட்யூல் கல்யாணம் ஆகிவிட்டது. மூன்றாவது, நான்காவது ஷெட்யூலில் குழந்தை பிறந்துவிட்டது என நடிகர் சதீஷ் கூறுவார். அப்படி இந்தப்படம் உருவானது. நான்கரை ஆண்டுகள் உழைத்துதான் பெரியாளாகியிருக்கிறேன்” என்றார்