திரை விமர்சனம்

‘ஷூட் தி குருவி’ விமர்சனம்

ஒரு மணி நேரம் ஐந்து நிமிடத்தில் விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த பிளாக் காமெடி ஜானரில் ஒரு படம் பார்க்க விரும்பினால் உங்கள் சாய்ஸ் ‘ஷூட் தி குருவி‘யாக இருக்கலாம். ஷார்ட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கும் ’ஷூட் தி குருவி ‘ நறுக் சுறுக் விமர்சனம் இதோ…

பொறுக்கிகள் முதல் போலீஸ் வரை, பேரை கேட்டாலே நடுநடுங்க வைக்கும் கொடூர கொலைகாரன் குருவிராஜன். சாப்பாட்டுக்கே வழியின்றி மும்பைக்கு ரயில் ஏறி அங்கிருக்கும் தாதாவிடம் தஞ்சமடைந்து கடைசியில் அந்த தாதாவையே போட்டுத்தள்ளி தமிழ்நாட்டுக்கு வந்து அரசாங்கத்துக்கே தண்ணி காட்டுபவன்.

இப்படிப்பட்ட ஒருவனை காமெடி பீஸான ஆஷிக் ஹூசைன் தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிறார். அவ்வளவுதான் குருவிராஜனின் கும்பல் ஆஷிக்கை சல்லடை போட்டு தேடுகிறது. ஆஷிக் இப்போது சிவ ஷாராவின் அறையில் தஞ்சம். ஒரு கட்டத்தில் குருவிராஜனை தாக்கியது ஆஷிக்தான் என்ற உண்மை ஷாராவுக்கு தெரியவர, அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று பயத்தில் உறைகிறார். படம் பார்ப்பவர்களுக்கும் அதே பதட்டம் கடத்தப்பட, இப்போது ஆஷிக், ஷாராவின் முன்பு துப்பாக்கியுடன் வந்து நிற்கிறான் குருவி ராஜன். இனி ஆஷிக், ஷாராவின் நிலை என்ன என்பதே க்ளைமாக்ஸ்.

அச்சம் வரவைக்கும் குருவி ராஜன் கேரக்டரில் அர்ஜை அட்டகாசமாக பொருந்துகிறார். ஒவ்வொரு கொலையை செய்யும் முன்பும் சாகப்போகிறவர்களுக்கு ஒற்றை ரோஜாவையும் ஒரு சில நிமிடங்களையும் தந்து போட்டுத்தள்ளுவது புது ஸ்டைலாக இருக்கிறது. தமிழ் சினிமா வில்லன் பற்றாக்குறையை தீர்க்கும் லிஸ்டில் இனி அர்ஜையும் இணைந்துகொள்வார்.

ஆஷிக்கும், சிவ ஷாராவும் அவ்வப்போது சிரிக்க வைத்தாலும் சில நேரங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். இவர்களுக்கு இடையேயான உரையாடல்களும் அயர்ச்சியை தருகிறது. அந்த அம்மா செண்டிமெண்ட் நெஞ்சம் தொடுகிறது. ஒரு சில காட்சிகளில் சாமியார் வேடத்தில் வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, பேராசிரியராக வரும் ராஜ்குமார், சூர்யாவாக வரும் சாய் பிரசன்னா உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் ஓகே ரகம்.

மூன் ராக்ஸின் பின்னணி இசை, உரையாடல்களின் ஒலிப்பதிவு அளவையும் தாண்டி கேட்பது பெரிய குறையாக இருக்கிறது. பிளாக் காமெடி கதைக்கு பொருத்தமான லைட்டிங்கில் பிரண்டன் சுஷாந்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மதிவாணன். குறுகிய நாட்களில் அதாவது ஆறே நாட்களில் இந்தப்படத்தை எடுத்து முடித்திருக்கும் திறமைக்கு பாராட்டுகள். மூன்று காலக்கட்டங்களில் கதை சொல்வது போன்ற திரைக்கதை அமைப்பு அவசியமற்றது.

இப்போது மீண்டும் விமர்சனத்தின் முதல் பாராவை எட்டிப்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE